அண்மைக் காலங்களிற் தமிழில் எழுதும் சிலபத்தியாளர்களின் பத்திகளை வாசிக்கும் போது அவர்கள் எவ்வளவு கவனமாகவும் நுட்பபமாகவும் தொழிற்படுகிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்கள் எதில்கவனமாக இருக்கிறார்கள் என்பதனையும் எதனை நுட்பமாக வாசிப்பவர்களின் மனதில் பதியவைக்க விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் கவனிக்கவேண்டும்
இந்தப்பத்தியாளர்கள் இரு வகையானவர்கள் ஒரு வகையினர் விடுதலைப் புலிகளை நிரந்தரமாகவே கடுமையாக எதிர்த்து இலங்கை அரசுடன் இணைந்திருந்தவர்கள். மற்றவகையினர் விடுதலைப் புலிகளின் அழிவுடன் தீடீர் என ஒடுக்குமுறை அரசின் பக்கம் சாய்ந்து விட்டவர்கள்.
விடுதலைப் புலிகளை மிக வீராவேசமாக ஆதரித்த பலர் இன்றைக்குள்ள சிங்களப் பேரினவாத அரசின் ஆதரவாளர்களாக மாறியுள்ளமை பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கருணா டக்ள்ஸ் கே பீஎன வெளித்தெரியும் முகங்களைத் தவிர வெளியே தெரியாமற் பலர் அவர்களைப் போலத் தொழிற்படுகின்றனர். என்பது வியப்பாக இருக்கக்கூடும்.
முன்பொருகாலத்தில் இந்திய இராணுவம் இருந்த போது மாற்று இயக்கங்களில் இருந்த பலர் புலிகளின் பரம எதிரிகளாக இருந்தார்கள்.ஆனாற் பின்னர் புலிகள் பலமடைந்த போது அவர்களின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இன்றைக்கு புலிகள் அழிந்துள்ள நிலையில் அவர்களை ஆதரித்த பலர் சிங்களப் பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துபவர்களாக இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசத்திலும் மாறி இருக்கிறார்கள்.
நான் மேலே விபரித்த, அதிகாரமாற்றங்களின் போது தமது இடங்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்கள் ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் பெரியவை என்பதுடன் கவலையும் தருபவை.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக அல்லது அவர்களால் ஏற்பட்ட இழப்புக்களுக்கு பழிவாங்கும் முகமாக அல்லது சொந்தப்பிழைப்புக்காக அல்லது எல்லாவறையும் விட்டொதுங்கிப்புலம் பெயர்வதற்கான வசதி அற்றதனால் அல்லது உண்மையிலும் வேறுவழிகள் அற்றதனால் மாற்று இயக்கங்களைச் சேர்ந்த இராணுவப் பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் ஒடுக்குமுறை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினார்கள். இன்றைக்கு அதேமாதிரியாக விடுதலைப் புலிகளில் இருந்த பல முன்னாள் போராளிகள் இராணுவத்தின் அச்சுறுத்தல் அல்லது அழுத்தம் காரணமாகவும் சில வேளைகளில் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இராணுவத்துடன் இணைந்துள்ளார்கள். இவர்கள் எல்லாருமே தனிமனித முரணணிகளுக்கு உதாரணமாகக் கொள்ளக் கூடியவர்கள். இவ்வாறு இராணுவத்துடன் சுய விருப்பின் பேரிலோ அல்லது வற்புறுத்தலின் பேரிலோ இணைந்து செயற்படுபவர்களால் ஆட்களை மட்டுமே கொல்ல முடியும். இவர்களால் ஒடுக்கப்படுவர்களின் ஆன்மாவைக் கொல்ல முடியாது.ஆனால் நான் மேற்கூறிய பத்தியாளர்கள் இவர்களையும் விட ஆபத்தானவர்கள். என்னேனில் இவர்களால் ஒடுக்கப்படுபவர்களின் ஆன்மாவரைக்கும் ஊடுருவ முடியும் இவர்கள் அதிகாரங்களின் பலத்தையும் பலவீனத்தையும் சரியான முறையில் எடைபோட்டு கால மாற்றங்களின்போதும் சாரவேண்டிய இடங்களைச் சேர்ந்து தமதுதனிப்பட்ட நலன்களைப் பேணிக் கொள்ள முடிகிற கெட்டித்தனத்தைக் கொண்டவர்கள்.
தனிமனித சனநாயகமென்று வரும்போது இந்தக்கெட்டித்தனம் தவறென்று சொல்ல முடியுமோ தெரியவில்லை.இதுஒருவகையில் உயிர்வாழும் திறன். ஆனால் இந்தத் திறனில்லாமல் சிறைகளிலும் சமூகத்தின் விளிம்பிலும் வாழும் ஆயிரக்கணக்கான முன்னாட் போராளிகளுக்கு இந்தக்கலையை இவர்கள் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும். டில்றுக்சனுக்கும் நிமலரூபனுக்கும் இன்னும் சாவின் விளிம்பில் நிற்கும் பல அரசியற் கைதிகளுக்கும் இந்தக்கலை தெரியாமற் போயிற்று.
அதிகாரம் என்பது மிகச்சிக்கலான ஒருதத்துவம்.ஒடுக்குவதற்கும் அதுதேவைப்படுகிறது விடுதலைக்கும் அது தேவைப்படுகிறது. பல வேளைகளில் விடுதலைக்கு அது எதிரியாகியும் விடுகிறது. ஆனால் நான் மேற் சொன்ன மனிதர்களுக்கு மட்டும் அது என்றைக்கும் நண்பனாகவே இருக்கிறது.
இந்த வகையானவர்களால் எழுதப்படுகிற பத்திகளை வாசிக்கும் போது தோன்றுகிற துயரம் அளப்பரியது. ஏனேனில் இவர்கள் ஒடுக்குகிறவனின் பக்கமிருந்து ஒடுக்கு முறையை அற்புதமாக அழகாக நியாயப்படுத்தி விடுவார்கள்.வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவது போல ஒடுக்குமுறையை இவர்கள் நிராகரிக்கும் அழகைப்பார்த்து வியந்து அதிகாரங்கள் இவர்களை அரவணைத்துக் கொள்ளும்.
அண்மைக் காலங்களில் இலங்கையிலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி இவ்வாறானவர்களால் எழுதப்படும் பத்திகளில் இலங்கைத் தமிழர்களை அமைதியாக இருக்கவிடுங்கள். போராடத் தூண்ட வேண்டாமென்ற கோரிக்கை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்வைக்கப்படுகிறது. தமிழ்மக்கள் போராடிக் களைத்துப் போனார்கள் அவர்களை ஆற அமர இருக்க விடுங்கள் என்ற கோரிக்கை இத்தகைய பத்தியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
”ஐயோ நீ ஓட்டி ஓடிக் களைச்சுப் போனாயப்பு உந்த அரசமரத்துக்கு கீழ கொஞ்சம் குந்தியிருந்து ஆறனப்பு எனச் சொல்கிற பேரன்பு போலத் தோன்றும் இந்தப்பத்திகள்.ஆனால் நன்றாகக் கவனித்தோமென்றால் ஓடுகிறவர்களைக் கத்தியுடன் சிலர் துரத்தி வருவது அங்கே காட்சிப் படுத்தப்பட்டிருக்காது. கலைத்துக் கொண்டு வருகிறவர்களைப் பார்த்து இந்தப்பத்தியாளர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். குறைந்தபட்சம் ஐயாமாரே கடந்த அரை நூற்றாண்டாக கலைத்து கலைத்து ஒடுக்கி ஒடுக்கியே நீங்களும் களைச்சு போனியள் கொஞ்சக் காலத்துக்கு ஓய்வாக இருந்தாலென்ன என்று கூடக் கேட்கமாட்டார்கள்.
சில பத்தியாளர்கள் கலைத்துக் கொண்டு வாறவர்களின் கையில் கத்தியே இல்லை. அவர்கள் தர்மச்சக்கரமும் அலரிப்பூவும் தான் வைத்திருக்கிறார்கள் என்பார்கள் சில பத்தியாளர்கள் உங்களைக் கலைச்சு மேச்சது புலிகள் மட்டும்தான் இப்ப உங்களை ஒருத்தரும் கலைக்கேலை உங்களுக்கு பிரமை பிடித்திருக்கிறது என்றும்எழுதிவிடுவார்கள்.
தங்களது பத்திகளில் முதலில் இரண்டுபக்கமும் பிழை செய்யதென்று தான் எழுதத் தொடங்குவார்கள். பின் ஒன்றிரண்டு வரிகளில் இலங்கை அரசும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகச் சொல்லிவிட்டுப் பின் புலிகளைத் தாக்கத் தொடங்கி கடைசியாக தமிழ் மக்கள் களைச்சு போனார்கள் அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள் என்று சொல்லி அவர்களைப் போராட்டத் தூண்ட வேண்டாமென்றும் கேட்டுக் கொள்வார்கள்.
ஒடுக்கப்படுபவர்களை எந்த நிலையிலும் போராடவேண்டாம் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களை அமைதியாக இருங்கள் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. தாகத்தில் இருப்பவரைத் தண்ணீரைத் தேட வேண்டாமென்றும் பசித்தவரை உணவைத் தேட வேண்டாமென்றும் வீடிழந்தவரை வீட்டைக் கேட்க வேண்டாமென்றும் நிலமிழந்தவரை நிலத்தைக் கேட்க வேண்டாமென்றும் போராட வேண்டாமென்றும் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர்களை அமைதியாக இருங்கள் எனக் கேட்பதன் பின்னாலுள்ள அரசியல் என்ன?
போராட்டம் என்ற சொல்லின் பின்னாலுள்ள அர்த்தமும் தத்துவமும் வெறும் ஆயுதப் போராட்டமாகக் குறுகி அர்த்தம் பெற்றமைக்கு எமது கடந்த அரசியற் தலைமைகள் காரணம் அவர்களைக் கட்டாயம் விமர்சிக்க வேண்டும். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இலங்கையை ஒரு பல்லினச் சமூகமும் கலாசாரமும் கொண்ட ஒரு சனநாயக நாடாகக் கட்டி எழுப்பத்தவறிய எல்லா அரசியல்வாதிகளிலும் தொடங்கி தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தொடங்கிய பின் அதனை சனநாயகப்பண்புகள் கொண்ட மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்காமல் வெறும் இராணுவவாதமாகக் குறுக்கிய விடுதலை அமைப்புகளின் தலைமை வரை எல்லாரையும் விமர்சியுங்கள்! தவறில்லை!! மேலும் புலிகளின் மேல் உங்களுக்குக் ஆத்திரமும் கோபமும் இன்னமும் தீரவில்லை என்றால் கோத்தபாய குழிதோண்டிப்புதைத்த புலிகளின் எலும்புகளைத் தேடித் தேடியெடுத்து ஒன்றை அவர்களின் வரவுக்காய் இன்னமும் கண்ணீருடன் காத்திருக்கும் அவர்களின் உறவினர்களிடம் மரபணுமுறையில் அடையாளம் காணக் கொடுத்து விட்டு மீதியை வைத்து அவ்வப்போது ஆத்திரம் தீர அடித்துடையுங்கள். ஆனால் ஒடுக்கப்படுகிற மக்களைப்போராடாதே என்று மட்டும் எழுதாதீர்கள். காரணம்.வாழ்வின் அடிநாதமே போராடுதல்தான். உயிர்வாழும் ஒவ்வொரு உயிரியும் போராடுகிறது.
இந்த இயல்பூக்கத்தை போராட்டமெனும் இயங்கியலின் ஆதார தத்துவத்தை இந்த மக்களிடம் இருந்து எடுத்துவிட்டால் மிஞ்சிக் குறுகி ஒடுங்கிப்போயிருக்கும் ஒரு இனத்தின் தலையில் கொள்ளிக்கட்டை வைக்க இலகுவாக இருக்கும் இல்லையா?
போரில் நொந்து அழிந்தமக்கள் எதைகேட்கிறார்கள் அதனைப்புரிந்து பத்திகளை எழுதலாம். புலிகளை அழித்த சிங்களப் பேரினவாதம் ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் கலாசார பண்பாட்டுப் பொருளாதார சூழலியல் வளங்களை திட்டமிட்டு அழிக்கிறது இதனை ஆழமாக ஆராய்ந்து எழுதலாம். ஒடுக்கப்படும் இனங்களின் தலைமைகள் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாமல் தமது சொந்த நலன்களுக்காக வாய்ப்பேச்சுகளோடு நின்றுவிடுவதை எழுதலாம். போராட முனையும் மக்களுக்கு சரியான அரசியற் பரிமாணத்தை வழங்க முனையாமல் பாராளுமன்றக் கதிரைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் மேடைப்பேச்சுக்களை மட்டும் பேசிக்கொண்டு திரியும் அரசியல் தலைவர்களைப் பற்றி எழுதலாம். மக்களுக்கு ஒரு கதையும் திரைமரைவில் ஒடுக்கு அரச அதிகாரத்துக்கொரு கதையும் பேசும் பாராளுமன்ற அரசியல் வாதிகளைப்பற்றி எழுதலாம். ஈழத்தை வைத்துப் பொச்சடிக்கும் கருணாநிதியைப் பற்றி எழுதலாம்.அலைக்கற்றை ஏந்திழை கனிமொழியின் கதைவிடுதலைப்பற்றியும் எழுதலாம். இன்னும் நான்கு தலைமுறைக்கு பிரபாகரனை வைத்துப்பிழைக்க முனையும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளைப்பற்றி எழுதலாம். முன்னாள் போராளிப் பெண்களை அல்லது முன்னாள் போராளிகளின் துணைவிகளை சீதனம் இல்லாமல் மாவீரர் தினமன்று திருமணம் செய்ய துடிக்கும் சீமான்களைப்பற்றி எழுதலாம் அல்லது முன்னாள் போராளிகளின் துணைவிகளை தாயலாந்துக்கு அழைத்து ஒரு இரவைக்கழிக்கத் துடிக்கும் புலம் பெயர் தமிழர்களைப்பற்றியும் எழுதலாம்.
ஆனால் போராட முனையும் மக்களை மட்டும் போராட்டவேண்டாம் என்று எழுத வேண்டாம். ஏனெனில் அவர்களை அமைதியாக இருக்கக் கேட்பது அடிமையாக இரு என்று கேட்பதாகும்.
இதைத்தான் இவர்கள் கவனமாகவும் நுட்பமாகவும் தமது எழுத்துக்களில் கேட்கிறார்கள்.
அதிகாரங்களுடன் சார்ந்து கொண்டு உங்களுக்குப் போராடாமலே கிடைக்கிற விடையங்கள் ஒடுக்கப்படுபவர்களுக்கு போராடினால் தான் கிடைக்கும் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள்...
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா
11-08-2012
குளோபல் தமிழ்ச் செய்திகள் இணையத்தில் இணையத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்படும் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் படைப்புகள் யாவும் காப்புரிமை பெற்றவை. அவற்றை மீள்பிரசுரம் பதிவேற்றம் செய்பவர்கள் globaltamilnews.net என மூலத்தை குறிப்பிட்டே மீள் பிரசுரம் செய்ய முடியும். என்பதனை நட்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அபிப்பிராயங்கள்
(2) அபிப்பிராயங்கள்
13-08-2012, 10:16
- Posted by Anonymous
தேவ அபிரா உஙளுக்கு என் வாழ்த்துக்கள் இன்று என்னநடந்து கொண்டிருக்கின்றதோ அதை அப்படியே தோலுரித்துக்காட்டியுள்ளீர்கள். வைக்கல் பட்டறயிலை கட்டியதுகளின் வேலைதான் இப்போது உலகத்த்மிழர்கள் மத்தியில்நடந்து கொண்டிருக்கின்றது.விமர்சனம் என்பது இப்போது முக்கியம் எது வந்தாலும் வரட்டும் அடுத்த சந்ததியையாவது ஆரோக்கியமான சொந்த உரிமைக்காக குரல் கொடுக்கும் சுயனலமற்ற தமிழினமாக ஆக்கவேண்டியது பொறுப்புள்ள ஊடகங்களின் கடமை என்பதை தமிழ் ஊடகவியலாளர்கள் உணரவேண்டும் என்பதை சுத்தமான எண்ணங்களுடன் தந்துள்ளீரகள் மற்றவர்களும் உணரட்டும்.தொடரட்டும்.உங்கள் பணி.
16-08-2012, 06:14
- Posted by Nadarajah Kuruparan
இது எனது மின் அஞ்சல் முகவரிக்கு கிளிநொச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது:-
தேவ அபிரா அவர்களின் போராடாதே ஆய்வுக்கட்டுரையை எமக்கு வழங்;கியதற்கு தேவ அபிரா அவர்களிற்கும், குளோபல் தமிழ் ஆசிரியரிற்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.
எங்கள் மன ஆதங்கத்தை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள்.நாங்கள் வன்முறையாளர்கள் அல்ல.போராட்டம் எம்மீது திணிக்கப்பட்டது.
இன்றும் எமது நாட்டில் நாம் கடும்போராட்டத்திற்கு மத்தியில்தான் வாழ்கிறோம். போராடாதே என்று கூறுபவர்கள் எங்களை 'சா' என்று கூறுவதாக அர்த்தம் என்று கொள்வோம்.இப்போது இழப்பதற்கு உயிரை தவிர எம்மிடம் வேறு எதுவும் இல்லை. கொடிய போரில் எல்லாம் இழந்துவிட்டோம்.ஆயினும் நாங்கள் இப்போது உயிர் வாழ்கிறோம். உயிர் வாழ்வதற்காக போராடுகிறோம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் பாதுகாப்புடன் வாழ்ந்த நமது பெண்கள் இன்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். புலம்பெயர் தமிழர் சிலர் போராட்டம் பற்றி பேசுபவர்கள் கூட உதவிசெய்கிறோம் என்ற போர்வையில் மாவீரர்களின் மனைவிமாரை சட்டபூர்வமற்ற திருமணத்திற்கு உள்ளாக்குவது நான் அறிந்த ஒரு விடயம். வறுமையை சாட்டாக வைத்து அவர்களை ஆள நினைப்பது மிகதவறு. இது எங்கள் கலாசார,பண்பாட்டு, விழுமியங்களுக்கு முரணானது. இதற்காகதானா எமது இளைஞர்கள் வாழவேண்டிய இளமை காலத்தை துறந்து மாவீரர்கள் ஆனார்கள்.கரும்புலியாக வெடித்தார்கள்.30 வருட போராட்டம் இதற்குத்தானா?
புலம்பெயர்ந்தவர்கள் சிலர் அந்நாட்டு கலாசாரத்திற்கு மாறியிருக்கலாம்.தயவு செய்து எமது பெண்களை கேவலப்படுத்த நினைக்க வேண்டாம். அதுமட்டுமல்ல இறந்த எம்மினத்தையும் கேவலப்படுத்த வேண்டாம். நாங்கள் தோற்றவர்களாகவே இருந்துவிட்டு போகிறோம்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் இல்லாமல் இருந்துவிடுங்கள்.
தேவஅபிரா அவர்களே நீங்கள் எழுதிய எழுத்துக்கள் குற்றமுள்ளவர்களை நெற்றிப்பொட்டில் அறையட்டும்.
அன்புடன்,
ச.பாரதி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக