பின்பற்றுபவர்கள்

24 செப்டம்பர், 2011

ஒரு கவிதை எங்கே முடிகிறது...





இன்று அல்யசீரா  வெளியிட்ட  போருக்குப்பிந்திய  இலங்கை நிலவரம் பற்றிய செய்தியை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அல்யசீராச் செய்தியாளர் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிடம்  இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து கேள்வி கேட்கிறார். கைது செய்யப்பட்டவர்களை சுட்டுக்கொல்லும் ஓளிநாடாக்களை பற்றிக் கேட்கும் போது அவை பொய்யானவை என நாக்கூசாமல் பொய் கூறுகிறார். அவரால் அவ்வாறானதொரு  ஈனத்தனமான பதிலைச் சிரித்துக் கொண்டு கூற முடிகிறதொன்றும் உலக அதிசயமல்ல.

உலகத்தில் மக்களின் தலைமீது ஏறி அமர்ந்திருக்கிறஎல்லா அதிகாரங்களும் இவ்வாறான சந்தர்ப்பங்களில்  ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றன என்பதற்கு என்னுமொரு நல்ல உதாரணம் பகரேனிய பெண் கவிஞரும் செயற்பாட்டாளருமான  அயத்-அல்-ஹெர்மெசி (20 வயது).

 40 வருடங்களாக பஹரேன் நாட்டை ஆண்டு வரும் அல் கலிபா குடும்பத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் பஹரேனில் இந்த வருடம் மாசிமாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டு வருகிறது.

பஹரேனின் தலைநகரமான மனமாவின்  முத்து சதுக்கத்தில் நிகழ்ந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது தற்போதைய ஆளும் அரசின் பிரதம மந்திரியான கலிபா இப்ன் சல்மான் அல் கலிபாவை கண்டித்து அயத் கவிதைகளை  எழுதியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை அவமானப்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் கடிதங்களையும் ஈ-மெயில்களையும் அவர் பெறத்தொடங்கினார்.  இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவர் மனமாவின் பொலிசை அணுகி முறையிட்டபோது பொலிஸ் அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் திருப்பியனுப்பப்பட்டார். இதனால் அச்சமடைந்த அயத் தலைமறைவானார். இந்த வருடம் பங்குனி மாதத்தின் இறுதிப் பகுதியில் அயத்தின்  வீட்டை இரண்டு தடவைகள் முற்றுகையிட்ட பகரேனின் பாதுகாப்புப் படையினர்  அயத்தின் மறைவிடத்தை தெரியத்தராவிடின் அயத்தின் குடும்பத்தினர் எல்லோரையும் சேர்த்து வீட்டுடன் தரைமட்டமாக்கப் போவதாகவும் அது மேலிடத்து உத்தரவு என்வும்  அச்சுறுத்தினர். மோசமான அச்சுறுத்தல்களுக்கு பின்னர் குடும்பத்தினரிடம் இருந்து அவரது மறைவிடத்தைப் பாதுகாப்பு படைகள் அறிந்து கொண்டன.
இதன் பின்னர் அயத் தொடர்பான எந்தத் தகவல்களும் தொடர்புகளும் குடும்பத்தினருக்கு இல்லாது போய்விட்டன.

அயத் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தேடுதல்களை ஆரம்பித்த போது பொலிசார் அயத் தொடர்பான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனக் கூறியதுடன் அயத் காணாமல் போய்விட்டார் என குடும்பத்தினரே ஒப்புதல் கடிதம் தரவேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
ஏப்ரல் நடுப்பகுதியில் அயத் குடும்பத்தினருக்கு வந்த அனாமதேய தொலைபேசி ஒன்று அவர் இராணுவ வைத்திய சாலையில் கோமாவில் இருப்பதாக அறிவித்தது. அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் அயத் பலதடவைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமையால் கோமாவுக்குள்ளானதாகவும் பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்ததாகவும் கூறினர்.
கடந்த மாசி மாதத்தில் இருந்து அயத் மட்டுமல்ல இன்னும் பல பெண்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கானவர்கள் குறிப்பாக வைத்தியர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மாணவர்கள் போன்றவர்கள் பகரேன் படைகளினால் கடத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது போன்ற விடையங்கள் இதுவரையும்  வெளிவரவில்லை.

கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி சவுதி அரேபியாவின் பொலிஸ் படை பகரேனுக்கு உதவுவதற்காக மனமாவுக்குள்ளே நுளைந்தது. 
பகரேன் நாட்டுப் படைகள் சவுதி அரேபிய படைகளின் உதவியுடன் நாடு தழுவி நடந்து வரும் எழுச்சிகளை கொடுமையாக அடக்கி வரும் இந்த வேளையில் அயத்தின் மரணம் சம்பவித்துள்ளது.
பகரேன் படையினரால் கடத்தப்படுபவர்கள் கடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.  மின்சார அதிர்ச்சி கொடுத்தல் கடுமையாகத் தாக்குதல் பட்டினி போடுதல் தலைகீழாக கட்டித் தொங்கவிடுதல் போன்ற சித்திரவதைகளின் பின் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளும் படி தாம் வற்புறுத்தப்பட்டதாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறி உள்ளனர்.  இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களை இலகுவாக நீதி மன்றத்தின் முன் நிறுத்த பகரேன் பொலிஸ் முயன்று வருவதாக மனித உரிமை வாதிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கோத்தபாய போலவே இந்தக் குற்றச் சாட்டுக்களை பகரேன் அரசின் பொறுப்பதிகாரி மறுத்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் எவரும் சித்திரவதைப் படுத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாமாக புனைந்த கதைகளைக் கூறுவதாகவும் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவிலும் அதனைச்சுற்றியுள்ள நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி குறித்து மேற்குலகம் வார்த்தையாடல்களுடன் நின்றுவிடுகின்றது. மேற்குலகம் இன்றைக்கு ஐக்கிய நாடுகளினூடாக இலங்கைக்கு கொடுக்கிற அழுத்தம் போல பகரேனுக்கோ ஓமானுக்கோ சவுதி அரேபியாவுக்கோகொடுப்பதில்லை. ஏனெனில் சவுதி அரேபியாவில் எற்படக்கூடிய ஸ்திரமின்மை மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாகப்பாதிக்கும் என்பதாலாகும்.  உலக எண்ணை உற்பத்தியில் 25 சதவீதம் சவுதி அரேபியாவில் இருந்தே வருகிறது.  அமெரிக்காவும் ஐரோப்பாவும் பெருமளவுக்கு சவுதி அரேபிய எண்ணை  ஏற்றுமதியையே நம்பியுள்ளனர். ஏற்கனெவே மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் எழுச்சி காரணமாக/ ஸ்திரமின்மை காரணமாக  உலகளாவிய ரீதியில் எண்ணை விலை உயர்ந்துள்ளதுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.  இந்த விலையுயர்வு இனியும் அதிகரிக்குமெனில் மேற்குலகில் சமூக நல உதவிகளில் தங்கி இருக்கும் அடித்தட்டு மக்கள் தமது  வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாது தமது அமைதியை கலைக்க நேரிடும் என இந்த நாடுகள் அஞ்சுகின்றன.
.
மேற்குலகின் மனித உரிமை வேடத்திற்கும் காட்டுமிராண்டித்தனமான ஆசிய ஆபிரிக்க ஆட்சியாளர்களீன் அதிகார வெறிக்கும்  இடையில் தமது  வாழ்வாதாரத்தையும் சனநாயகத்தையும் தேடி நிற்கும் மக்களுக்காக அயத் போன்றவர்கள் எழுதும்  கவிதைகள்  அவர்களுக்கு  அவலமான மரணத்தைத் தருகின்றன.

இந்தக்கவிதைகள் எங்கிருந்து பிறக்கின்றன என்ற கேள்விக்கு ஆயிரம் பதில்கள் இருக்கின்றன ஆனால் ஒரு கவிதை எங்கே முடிகிறது என்ற கேள்விக்குப் பதில் அயத்திடமும் அவரைப்போன்று அதிகாரத்திடம் போரிட்டு மடிந்த ஆயிரக்கணக்கான கவிஞர்களிடமும் மட்டுமே இருக்கிறது.

ஒரு கவிதை எங்கே முடிகிறது?
அங்கே... அதோ...
"நிறுத்து" என்றறிவித்தற் பலகையை நீட்டியபடி
சீருடை அணிந்தவொருவன் மறிக்கிறானே!
அங்கே...
தேவஅபிரா

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவஅபிரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக