பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

பிரபாகரன் இல்லாத இரண்டரை வருடங்கள்...


பிரபாகரன் இல்லாத இரண்டரை வருடங்கள்... குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -   தேவ அபிரா

வடபகுதி மக்கள் தமது உரிமைகளுக்காகவே போராடினார்கள். விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தவறில்லை. வடக்கு மக்கள் நாட்டைப்பிரிக்கப் போராடவில்லை (கிழக்கு மக்கள் போரடவே இல்லையோ?) என மூன்று விடையங்களைத் தொட்டுத்தொடங்கி இறுதியில் இன ஒற்றுமையில் முடியும்  வகையில் ஒரு பேச்சை இலங்கை அரசின் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கிழக்கு மாகாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாநிகழ்வில் பேசியிருந்தார். பல்வேறு முரண்களைக் கொண்ட அந்தப்பேச்சின் நோக்கம் என்னவென்பது அந்தச்செய்தியை வாசிப்பவர்களுக்குத் தெரியும். விடுதலைப்புலிகள் உயிரோடு இருக்கும் போது இவற்றைக் கூறியிருந்தால் சிலவேளை அர்த்தமிருந்திருக்கும். மேலும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுவதற்கும் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை யாவரும் அறிவர். என்ன இருந்தாலும் பிரபாகரன் இல்லை என்ற துணிவில் தானவர் பேசியிருக்கிறார் என்றே பலரும் கருதுகின்றனர். பிரபாகரன் இல்லையென்பதால்தான் வடக்குகிழக்குக்கு வந்து இன ஒற்றுமையைப்பற்றிப் பேச எவருக்கும் முடிகிறது என்ற உண்மையை ஒத்துக்கொள்ள மறுப்பவர்களும் இருக்கிறார்கள். 

இன ஒற்றுமை என்பது தமிழ்த் தேசியத்தின் சயனைட்”  அல்ல என்பதைப் புரிந்துகொள்வது எங்களில் பலருக்குக் கடினமாகவே இருக்கிறது. ஆனால் இன ஒற்றுமை பற்றி யார் பேசுகிறார்கள் எந்த நிபந்தனைகளின் கீழ் எந்த உத்தரவாதங்களின் கீழ் ஒற்றுமையாக இருக்கக் கோருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது மூன்று தசாப்தங்களின் பின் எளிதாகவும் இருக்கிறது. இதனால் தான் திசநாயக்கா போன்றவர்களினது பேச்சு வாவிக்காற்றோடு போச்சு.

பொங்கல் நாளன்று பத்திரிகையில் வெளிவந்த படங்களில் இலங்கையின் அதிபர் ராஜபக்ஷவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணாவும் (ஒவ்வொரு வருகையின் போதும் பேசுவதும் பூசுவதுமாக இருப்பவர்கள் இவர்கள்.) பொங்கற் பானையில் அரிசியிட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கோ அவர்கள் எங்களுக்கு  வாய்க்கரிசி போடுவது போலத்தெரிந்தது.

சிலவேளை புலிகளின் கணக்குச்சரிவந்து பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைப்பார்த்து உலகம் வெகுண்டெழுந்து ஈழத்தைப் பிரித்தெடுத்துக் கொடுத்திருக்குமென்றால் முல்லைத் தீவிலோ முள்ளியவளையிலோ வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் முன்றலிலோ ஈழத்தின் அதிபர் பிரபாகரன் பொங்கற்பானயில் அரிசி இட்டிருப்பார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அல்லது திரு எரிச் சொலஹெய்ம் அவர்களும் கூடவே பொங்கற்பானையில் அரிசி இட்டிருப்பார்.

உலக ஒழுங்கு எங்கள் பொங்கலை இப்படி மாற்றிவிட்டது.

பிரபாகரன் இல்லாத கடந்த இரண்டரை வருடங்களைத் திரும்பிப்பார்க்கிறோம். போரில்லாத இரண்டரை வருடங்களைத் திரும்பிப் பார்க்கிறோம். போர் இருந்ததினால் சந்தோசமாக இருந்தவர்களும் போர் இல்லாதபோதும் சந்தோசமாகவே இருக்கிறார்கள். பிரபாகரன் செய்யாதவற்றை செய்யப்போவதாகவும்  பிரபாகரன் வழங்காதவற்றை வழங்கப் போவதாகவும் கூறிப் போரை முடித்தார்கள். பிரபாகரன் விட்டுச் சென்றிருந்தவைகளையும் பூண்டோடு அழித்துவிட்டார்கள். யாழ்ப்பாண மாநகர சபையில் கொடிகட்டிப்பறக்கும் சனநாயகத்தோடு வாழ்வு வழமைக்குத் திரும்பி விட்டது. வழமைக்கு திரும்புதல்என்பதிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது. தமிழர் வாழ்வில் எதுவெல்லாம் வழமையாக இருந்தனவோ அவையெல்லாம் திரும்பிவிட்டன. பிரபாகரன் போராட்டத்தைப் போராக்கினார். போர் வழமைகளை மறக்கச்செய்திருந்தது. இப்பொழுது ...

யுத்தம் முடிந்து சந்தைகள் திறந்து விடப்படிருக்கின்றன (சீதனச்சந்தையும்) பாதைகள் திறந்து விடப்பட்டிருகின்றன. எந்தப்பாதைகள்... எவற்றுக்கான பாதைகள்... எல்லாப்பாதைகளும்... (மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த வீடுகளுக்கும் வேர்களுக்குமான பாதைகள் என்னவோ மூடித்தான் கிடக்கின்றன.) சிங்கள மக்கள் சுற்றுலா வருகிறார்கள். புத்தபகவான் பாதை நெடுகிலும் அவர்களுக்காகக் காத்துக்கிடக்கிறார். சிங்கள வியாபாரிகள் தோள்களிற் பொருட்களைச்சுமந்து சென்று ஊரெல்லாம் விற்கிறார்கள்.

முஸ்லிம்மக்களும் மெதுவாக  வடக்கு நோக்கி திரும்புகிறார்கள் நண்பர்களற்ற சூனியத்திற் தாங்கள் விட்டுச் சென்றவற்றை மீண்டும் தேடுவது கடினமென்றும் உணர்கிறார்கள்.
 வன்னி உன்னி எழும்பவும் முடியாது நொடிந்து கிடக்கிறது. ஏழைகள் விவசாயிகள் என அதிகமானவர்கள் தற்கொலை செய்கிறார்கள் அல்லது பிச்சை எடுக்கிறார்கள்.

ஆண்கள் தமது விந்துகளைச் சிந்துவதற்கு அனாதரவான  பெண்களைத் தேடித்திரிகிறார்கள். பெண்கள் விளைந்த சிசுக்களை வீசுவதற்கு பற்றைகளை அல்லது பாழும் கிணறுகளைத் தேடித்திரிகிறார்கள்.
நான்காம் ஈழப்போருக்கு மாணவர்களை அனுப்பிய பாடசாலை அதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகளாகி இருக்கிறார்கள் அல்லது பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள், அடி வருடுகிறார்கள் அல்லது அடியை வருடக் கொடுக்கிறார்கள். சில அதிகாரிகள் பெண்களின் மார்புகளைப் பிடிக்கிறார்கள் அல்லது பிருஷ்டங்களைப் பிடிக்கிறார்கள். அல்லது சிவனே என்று இருந்து விடுகிறார்கள். 

இறுதிவரையும் தலைவணங்காத முன்னாட் போராளிகளிற் சிலர் சிறைகளில் சித்திரவதைபடுகிறார்கள் அவர்களின் ஈனக்குரல்களின் அதிர்வு மிக அதிகமென்பதால் நாய்களுக்கு மட்டுமே கேட்கிறது. அவையும் ஈழமெங்கும் பரவிக்கிடக்கும் இராணுவ முகாம்களில் இருந்து கிடைக்கும் இறைச்சித் துண்டுகளால் இந்திய ராணுவகாலம் போல் அதிகம் குரைப்பதில்லை. மேலும் முன்னரைப் போல் இப்போது நாய்களுக்கு மொழிப்பிரச்சனையும் இல்லை.
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மரத்துப்போன சமூகத்துள் எறியப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் பெண் போராளிகளுக்கான வாழ்க்கைத் துணையை தேடும் சங்கமொன்றும் புலம் பெயர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருகிறது.

கவிஞர்கள் மூடிவைத்திருந்த பெட்டகங்களுள் இருந்து கவிதைகளை எடுத்துத் தூசு தட்டி வெளியிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். பதிப்பகங்கள் புதிய அடையாளங்களைத் தேடுகின்றன. முகப்புத்தகம் நிறைகிறது. புலிஆதரவு /புலிஎதிர்ப்பு, சிங்களஆதரவு /சிங்களஎதிர்ப்பு, முஸ்லீம்ஆதரவு/முஸ்லீம் எதிர்ப்பு, தமிழ்ஆதரவு/தமிழ் எதிர்ப்பு என முகாம்கள் வலுக்கின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் பயமின்றி நாடு திரும்புகிறார்கள், காசை அள்ளி வீசுகிறார்கள், முதியோர் இல்லங்களைக் கட்டுகிறார்கள் அல்லது உல்லாச விடுதிகளைத் திறக்கிறார்கள். காலம்கடந்த செல்லிடப்பேசிகளை அல்லது கணணிகளை உறவினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து திட்டுவாங்குகிறார்கள். புலம் பெயர்ந்ததிலிருந்து உறவுகளுக்கு பணம் அனுப்பியவர்கள் அன்பின் விலை அதிகரித்திருப்பது கண்டு மனம் உடைந்து போகிறார்கள்.

நாடு கடந்த அரசாங்கமோ புதிய உலக ஒழுங்கைத்தேடி பூதக்கண்ணாடியுடன் அலைகிறது. புலிகளின் பினாமிகளோ பிரபாகரன் வரும் வரை சொத்துக்களைப் பாதுகாத்து அவரிடம் மட்டுமே ஓப்படைப்போம் எனத் தியாகவுணர்வுடன் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவெனில் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரும்பி வருவாரேயானால் வடக்கில் இந்திய அரசின் துவிச்சக்கர வண்டிகளைப் பெறுவதற்கு இலங்கை இராணுவத்தின் அனுமதியை அவர் பெற வேண்டியிருக்கும்.
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக -   தேவ அபிரா
18/1/2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக