பின்பற்றுபவர்கள்

21 மே, 2012

அரசியல் வியாபாரம்..


அரசியல் வியாபாரம்...குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா

அரசியலுக்கும் வியாபாரத்துக்கும் எதாவது தொடர்பிருக்கிறதா? அல்லது இரண்டும் ஒன்றுதானா? அல்லது இரண்டுக்கும் உள்ள நோக்கமென்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதிலை இப்பத்தி முடிவில் தேடுவது உங்கள் பொறுப்பு.
ஏனேனில் ஒருகாலத்தில் அரசியல் விடுதலைக்கானது என்னும் தோற்றமாவது இருந்தது. வியாபாரம் கூட விடுதலைக்கு அவசியமானது என்று கூறப்பட்டு நடாத்தப்பட்டது. கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ்மக்களின் விடுதலையையும் வியாபாரத்தையும் ஒவ்வொருவராக் குத்தகைக்கு எடுக்க முயன்ற வியாபாரிகள் எல்லோருமே எப்படியெல்லாமோ அழிந்து போனார்கள் அல்லது அழிக்கப்பட்டார்கள்.
இப்போது விடுதலையைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. விடுதலை அரசியல் பற்றியோ அரசியல் விடுதலை  பற்றியோ இனிவரும் தலைமுறைக்குத் தெரியப்போவதில்லை. விடு-தளை விடு-தலையாகிப்போன பின்னர்  பிழைப்பைப்பார்ப்பதே- வியாபாரத்தைப்பார்ப்பதே அவசியமாகிப்போய்விட்டது. ஆனால் துன்பமானது என்னவேனில் எல்லோருமே மக்களை வைத்துப் பிழைக்க முனைவதுதான். மக்களை வைத்து வியாபாரத்தை இரண்டு முறைகளில் செய்யலாம்.

கீழே இரண்டு வியாபாரக்கதைகள்.
அண்மையில் எனது நண்பர் ஒருவர் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவில் இருந்து சில பொருட்களை  இறக்குமதி செய்து நெதர் லாந்தில் விற்பதுதான் அவரது நோக்கம். இந்தியாவில் எற்கனவே வங்கிக் கணக்கொன்றையும் ஆரம்பித்திருந்த அவர் நெதர்லாந்தில் இருந்து தனது இந்திய வங்கிக் கணக்குக்கு பணத்தையும் அனுப்பிவிட்டு இந்தியாவுக்குப் போனார். கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களைத் தெரிவு செய்தபின்னர் அவற்றுக்கு பணம் செலுத்த முற்பட்ட போதுதான்  நெதர்லாந்தில் இருந்து தான் அனுப்பிய பணம் இன்னும் தனது இந்திய வங்கிக்கணக்குக்கு வந்து சேரவில்லை என்பது தெரிந்தது.
உடனடியாக இந்தியவங்கியுடன் தொடர்புகொண்ட போது அந்த வங்கி முகாமையாளர் உங்கள் பணம் வந்திருக்கிறது. ஆனால் அதனை உங்கள் கணக்கில் இடுவதற்கு ஒரு தடை இருக்கிறது. நீங்கள் கணிசமான அளவு பணத்தை முதன்முதலாக இந்தியாவுக்கு அனுப்புவதால்  பயங்கரவாதிகளின் பணப்பரிவர்த்தனையைக் கண்காணிக்கும் சட்டவிதிகளின் கீழ் உங்களைக் கண்காணிக்க வேண்டியிருக்கிறதுநெதர்லாந்தில் இருக்கும் உங்கள் வங்கி உங்களைப்பரிந்துரைக்குக்கும் கடிதமொன்றை எங்களுக்கு அனுப்பவேண்டும். அதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டால் உரிய நேரத்தில் உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்த முடியுமென்றார். நண்பர் உடனடியாகவே தொலை பேசியூடாக நெதர்லாந்து வங்கியுடன் தொடர்பு கொண்டார். ஆவன செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் எதுவும் நிகழவில்லை. நண்பர் நெதர்லாந்தில் தனது வங்கிக் கணக்கிருக்கும் கிளைக்கு தனது கணக்காளரை அனுப்பி நிலைமையை விளங்கப்படுத்தினார். ஆனால் கிளைப்பொறுப்பாளர் வங்கிக் கணக்குக்குரியவர் நேரில் வந்தாலேயே பரிந்துரைக்கடிதத்தை வழங்க முடியும் எனக் கூறிவிட்டார். வேறு வழியின்றி எனது நண்பர் நெதர்லாந்து திரும்பி பரிந்துரைக்கடிதத்தைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்பிப் பணக்கொடுக்கல் வாங்கல்களையும் இறக்குமதியையும் முடித்துக்கொண்டார். ஆனாலும் பல வருடங்களாக குறித்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் எனது நண்பருக்கு கோபம் தாங்கவில்லை. தனது வங்கியின் வாடிக்கையாளனின் நலன்களைப்பற்றி பற்றிக் கவலைப்படாத தான் தோன்றித்தனமான நடவடிக்கை குறித்துக் கோபம் கொண்டு வங்கித் தலைமையகத்திற்குக் கடிதமொன்று எழுதினார்.
என்னை நன்கு தெரிந்திருந்தும் எனது கணக்காளரை அனுப்பி விளக்கமளித்த பின்பும் எனக்குப் பரிந்துரைக்கடிதத்தை அனுப்பாதபடியினால் எனது இந்தியப்பயணம் முழுவதும் வீணாகிப்போனது. எனது பயணச்செலவு எனது தங்குமிடச்செலவு எனது தொடர்பாடற் செலவு என எனக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு யார் பொறுப்பு எனக் கடுப்பான கடிதமொன்றை எழுதினார்.
அதனை வாசித்த தலைமையகம் தவறுக்கு மன்னிப்புக் கோரியதுடன் அவருக்கு  ஏற்பட்ட அனைத்துச் செலவுகளையும் ஈடுகட்டியும்  விட்டது. இந்தச்சம்பவத்தைக் கூறி இதெல்லோ ஜனநாயகம் என்று என் நண்பர் கூறினார்.
இது ஜனநாயகமல்ல முதலாளித்துவ வியாபாரம். நல்ல சேவையை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளனைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் வியாபாரக்குறிக்கோள். அது மட்டுமல்ல தமது தவறைச் சரி செய்வதன் மூலம் இன்னும் பல வாடிக்கையாளர்களை தம்மை நோக்கி திரும்ப வைக்கும் வியாபார உத்தி. இது ஒரு வியாபாரம்.

இன்னுமொரு வியாபாரம் அரசியல் வியாபாரம். சரி இப்போ அரசியல் வியாபாரமாகிறதென்று வைப்போம். அவ்வாறெனின் நல்ல சேவையை வழங்குவதன் மூலம் வாக்காளனைத் தன்னை நோக்கி வரவைப்பதுவும் வாக்காளனின் நலன்களை தொடர்ந்து பேணுவதும்தானே  அரசியல் வியாபாரத்தின் நோக்கமாக இருக்க முடியும். அப்படிதான் நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் இந்தப்பருப்பு இலங்கையில் வேகாது.
மக்கட்சமூகத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு அவற்றை முதன்னிலைப்படுத்திவேலை செய்யும் அரசியல் வியாபாரம் பற்றி இலங்கை அரசியல்வாதிகள் குறிப்பாக பிரபாகரனைக்கொன்று தங்களுக்கான சனநாயகத்தைக் கொண்டு வர விரும்பிய தமிழ் அரசியல் வாதிகள் கேள்விப்பட விரும்புவதில்லை.
அரசியல் வாதிகளின் விருப்பு வெறுப்புகளைப்புரிந்து கொண்டு மக்கள்தான் அவர்களின் வாலைப்பிடிக்கவேண்டும் அல்லது விழுந்தடித்து ஓடிப்போய் மாலையைப் போடவேண்டும். இவ்வாறு தான்  இலங்கையில் எல்லாம் நடக்கின்றன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் ஊர்வலமாகச் சென்று தமது பிரச்சனைகளை முன்வைத்த போது தனக்கு வாக்களிக்காததால்தான் அவர்கள் அனாதரவாக நிற்பதாக அரச அதிகாரத்தின் அலகாக இருக்கும் ஒரு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடம் அதிகாரமில்லை. அவர்களுக்கு அதிகாரங்கள் ஒருபோதும் கொடுக்கப்படப்போவதுமில்லை. அதிகாரத்திலிருப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் கைவிடப்பட்டுள்ளார்கள்.
வளங்களையும் வாய்ப்புக்களையும் அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாகப்பயன்படுத்துவதை அரசியலில் சகஜம்  என்கிறார்கள். இந்தச் சகஜங்கள் வேண்டாமென்றுதானே விடுதலை கேட்டோம். அல்லது இந்தச் சகஜங்கள் இல்லாத வாழ்வையும் அதிகாரத்தையும் தானே விடுதலையென்றோம்.
இந்தப் பாழாப்போனவாய் திரும்பவும் விடுதலையென்று புலம்பத்தொடங்கி விட்டது. போகட்டும் விடுதலை. அரசியல் வியாபாரத்தையென்றாலும் சரியாகச் செய்தாலென்ன?
அரசு மக்களுக்கானதுஉண்மையான அரசு இன மத சாதி மற்றும் பிரதேச வாதங்களின் அடிப்படையில் தொழிற்படுவதில்லைஅரசை நிர்வகிக்கும் கட்சிகள் வளங்களையும் அதிகாரத்தையும் தமது விருப்பங்களின் அடிப்படையிற் பயன்படுத்துமெனில் சனநாயகம் செத்துவிடும். இந்தவகையில் பிரபாகரன் பிறக்கமுன்னரேயே இலங்கையில் சனநாயகம் செத்து விட்டதென்று எவரும் உணர்வர். இது இவ்வாறிருக்கப் பிரபாகரன் கொல்லப்பட்டதும்  இலங்கையில் சனநாயகம் திரும்பிவரும் எனப் புளுகியவர்கள் பெருகி அவரவர்கள்  புஜங்கள் முறுகியதே மிச்சம்.
மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களது அரசியல் வியாபாரமும் வெளிப்படையாக இல்லை. பேட்டை ரவுடியில் இருந்து உலகச்சண்டியன் வரைக்கும் போய் முறையிடுகிறார்கள் விளக்கமளிக்கிறார்கள். சொந்த மக்களுக்கு ஒரு சொல்விளக்கம் சொல்கிறார்கள் இல்லை. கேட்டால் மானத்தை விற்கமாட்டொம் பயப்படவேண்டாம் என்கிறார்கள். மானத்தைப்பற்றி யார் கேட்டது மத்தியகுழுவுக்குள்ளே வைத்து விடுதலைப்போராட்டம் நடத்திய காலங்கள் எப்படிப்போயினவென்று தெரியாதா என்ன?
நெற்றியில் பட்டையாய் இழுத்து அணிந்து சாமி வேடம் போடத்தேசியம் என்ன திருநீறா அல்லது தேர்தல் காலத்தில் வந்து வாக்குப்போடு வேலைதாறன் என்று கேட்கத் தேசியம் என்ன மண்ணாங்கட்டியா?
மக்கள் அநீதிகளைக்கண்டு சும்மாயிருக்கவில்லை கோபப்படுகிறார்கள் கொந்தளிக்கிறார்கள் ஊர்வலம் போகிறார்கள். ஆனால் வழிப்படுத்த எவருமின்றி மிரட்டல் அரசியல் வியாபாரிகளின் முன்பு தனித்து நிற்கிறார்கள்.
மக்களின் பிரச்சனைகளுக்கு ஒழுங்கான சனநாயகப் போராட்ட வடிவங்களைக் கொடுக்கிற அதேவேளை அவர்களின் நலன்களுக்காகப் பேசுகிறோம் என நினைக்கிற ஒவ்வொரு சொல்லையும் அவர்களின் முன் வைக்கிற அரசியல் வியாபாரத்தைச் செய்யாத வரை எங்களுக்கு விடிவில்லை. திரைமறைவில் பேசுகிற எல்லாவற்றையும் அது இராசதந்திரம் என்று கொடுப்புச் சிரிப்போடு சொல்ல அதைக்கேட்டு அமிர்தலிங்கம் காலத்துத் தமிழர்கூடச் சொக்கிப்போகவில்லை.
தமிழ் மக்களுக்குத் தேவையானது பாராளுமன்ற சனநாயகமல்ல. பங்குபற்றும் சனநாயகம்.
அண்மையில் அரசியல்வாதி ஒருவர் அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - பொதுமக்களுக் கிடையிலான இடைவெளி குறைய வேண்டும் என கூறியிருக்கிறார். அதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக் கொண்டு கூறியிருந்தால் நல்லது குறைந்தபட்சம் மக்கள் நலனை மையப்படுத்தும் அரசியல் வியாபாரத்துக்கான முதலாவது  படியாக அது அமையட்டும்.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா
05/02/2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக