பின்பற்றுபவர்கள்

20 மே, 2012

முள்ளி(ன்) வாய்க்கால்……



உலக வரலாற்றில் பல்வேறு ஆண்டுகளின் மே மாதங்கள் பல முக்கியமான நிகழ்வுகளைக்  கடந்து சென்றுள்ளன . பொதுவுடமை வாதக்  கோட்பாட்டை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ் 1818 மே இல் பிறந்தார்.   வியட்நாமின் தந்தை எனப்படும் ஹோ சி மின்னும் ஒரு  மே மாதத்திலேயே(1890) பிறந்தார். மே ஒன்பதாம் திகதியை இரஸ்சியா நாசிகளிடமிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறது.
நான் வாழும் நாட்டில் மே நான்காம் திகதி இரண்டாம் உலக யுத்தத்தில் மடிந்த  இந்த நாட்டு மக்களை நினவு கூரும் நாள். மே ஐந்தாம் திகதி நெதர்லாந்து மக்கள் ஜேர்மன் நாசிகளிடமிருந்து விடுதலை அடைந்த நாள்.
அரை நூற்றாண்டு கடந்தும் நேற்று நடந்தது போல் இவர்கள் மரணித்தவர்களை நினைவு கூருகிறார்கள். சுதந்திரத்தின் பெறுமதியை நினைவு கூருகிறார்கள்.
ஆனால் மூன்றே வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு இனப்படுகொலையை நினைந்து சுதந்திரமாக ஒரு தீபத்தையேனும் ஏற்ற முடியாத நிலையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
கல்லறைகள் சுவடின்றி அழிக்கப்பட்டு விட்டன.
எரிக்கப்பட்ட உறவுகளின்
சாம்பல் மணம் மறைந்து விட்டது.
ஆனாலும் ஒன்றறை இலட்சம் மக்களின்
மூச்சுகாற்று அலைந்து திரிகிற இரவுகளில்
ஒரு தீப்பந்தத்தை அல்லது 
ஒரு மெழுகுதிரியை ஏற்றச் சுதந்திரமில்லை.  
சுதந்திரத்தின் தேவையை உணர்த்தும் பல்லாயிரக்கணக்கான கணங்களுள் இதுவுமொன்று.
சுதந்திரமென்பதை நாடு பிரிதல் அல்லது அதிகாரத்தைப்பெற்றுக்கொள்ளல் என்ற மேலோட்டமான அர்த்தத்தில் மட்டும் புரிந்து கொள்வதிலும் அர்த்தமில்லை.  தனிநாடுடொன்று தோன்றி அதிகாரத்தை பெற்றுக்கொண்டாலும்  கூட மக்கள் சுதந்திரமற்றுப்போகலாம்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டம் அதன் உள்ளகத்தவறுகளினால்  தனது அழிவுகான பாதையை இட்டுக்கொண்டது ஆனால் அதற்காக கொடூரமான விலையை கொடுக்க நேர்ந்தமைக்கு தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்  உள்ளகத்தவறு மட்டுமே காரணமல்ல.  உலகத்தின் எல்லா நாடுகளும் தங்களின்  கண்களையும் மனச்சாட்சியையும்  மூடிக்கொண்டதும் முக்கியமான தொரு காரணம். உலக நாடுகள் எப்பொழுது கண்ணை மூடும் எப்பொழுது கண்ணைத்திறக்கும் அல்லது அவற்றுக்கென மனச்சாட்சி என்று ஒன்றுள்ளதா என்ற கேள்விகளுக்கெல்லாம் இலகுவாகப் பதிலைக்கண்டு கொள்ள முடியாது.
முள்ளி வாய்க்கால் படுகொலையின் பின்பு தமிழ் மக்கள் அம்மணமாகவும் அங்கவீனமாகவும் அனாதரவாகவும் உடலிலும் மனத்திலும் எண்ணுக்கணக்கற்ற காயங்களுடனும் வந்து  பூச்சியத்திலிருந்து வாழ்வை தொடங்க வேண்டிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தைத் தோற்கடித்தது ஒரு சனநாயக சக்தியாக இருந்திருப்பின்  இன்றைக்கு நிலைமைகள் மாறியிருக்கும். ஆனால் தமிழீழ விடுதலைபோராட்டத்தை தோற்கடித்தது இலங்கையில் இருக்கிற படுபிற்போக்கான சனநாயக விரோதமான சிங்களப்பேரினவாத சக்தியாகும்.
ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்படத்துணை போன  அனைவருக்குமே இது தெரியும் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் அவரது நலன்களே இந்த மனித உயிர்களைவிடவும் முக்கியமாகிப்போனது.
மீண்டும் எஞ்சியிருக்கும் தமிழ்மக்களின் நலன்கள்  மீதும் அதே சதுரங்க ஆட்டமே நிகழ்கிறது.
ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைப் பேணுவதற்கு  வழங்கும் அழுத்தங்களை விடவும் சரத்பொன்சேகாவை விடுவிக்க வழங்கப்படும் அழுத்தங்கள் அதிகமாக இருப்பதைக் காணும் போது மேற்குலகின் மனச்சாட்சி பற்றித்தெளிவாகத்தெரிகிறது. 
உலகின் வலிமையான அரசுகள் தங்களின் நலன்களைப்பேண ஆடும் ஆட்டங்களினுள் நுளையச்சொல்லும் போது நுளையவும் வேளியேறச் சொல்லும் போது வெளியேறவும் வேண்டிய பலவீனமான நிலையில் நாங்கள் நிற்கிறோம்.
இவை எல்லாவற்றையும் விட ஒரு சமூகமாக நாங்கள் எங்களை  நின்று திருப்பிப்பார்க்க வேண்டிய நாள் இது.
மூன்று வருடங்களின் பின்பு நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதைப்புரிந்து கொள்ள வேண்டிய நாள் இது.
சிங்கள பௌத்த மேலாதிக அரசும் இராணுவமும் வடக்குக் கிழக்கில் தமது வேர்களை ஆழப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதனைச் சார்ந்து பிழைத்துக்கொள்ளும் ஒரு அதிகார வர்க்கமும் மேற்தட்டு வர்க்கமும் படிப்படியாக வளர்ந்து வருகின்றன்.
வடக்கு கிழக்கின் இனப்பரம்பல் நியாயமற்ற வழியில் மாற்றப்பட்டு வருகிறது. தனியாருடைய காணிகள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன. ஒரு அரசுக்கு தனது நாட்டின் இனப்பரம்பலை மாற்றியமைக்க உள்ள உரிமையை மறுக்க முடியாது. ஆனால் இது சிங்கள இனத்தின் நலன்களைப்  பேணும் வகையில் திட்டமிடப்பட்டுச் செய்யப்படுகிறது.
கொடூரமான யுத்தக்குற்றங்களைப்புரிந்தவர்களும் அதற்கான கட்டளைகளை வழங்கியவர்களும் தண்டிக்கப்படாது விடப்பட்டுள்ளனர்.
இன்னும் இருபது வருடங்களுக்குள் சிங்கள இனத்தவர் ஒருவர் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களது அயலவராக இருக்கப்போவது  இயல்பான யதார்த்தமாகிவிடும்.  இந்த யதார்த்தம் எங்கள் தேசிய அல்லது இன அல்லது மொழியுணர்வை பேணுவதற்கான சாத்தியங்களைக் குறுக்கி விடும். விடுதலை சுதந்திரம் போன்ற எண்ணக்கருக்களை நாடு பிரிதல் என்பதனுடன் இணைக்கமுடியாதென்கிற யதார்த்தத்தை முள்ளிவாய்க்கால் உணர்த்தி விட்டிருக்கிறது.
உலக ஒழுங்கு மாறித் தமிழீழம் கிடைக்கும் என்ற கனவும் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் சிறுபான்மை  இனங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு அரசியற்தீர்வை முன் வைத்து இதய சுத்தியுடன் நடைமுறைப்படுத்தும்  என்ற கனவும் என்றென்றைக்கும் கனவாகவே இருக்கும்.
பெரும்பான்மையான சிங்கள மக்கள் இந்த்தீவில் தமது மேலாதிக்கத்தை இழக்கப்பட முடியாததாகக் கருதுகிறார்கள். இந்த மேலாதிக்கத்தை தெரிந்தோ  தெரியாமலோ ஏற்றுக்கொள்கிறார்கள். அனுபவிகிறார்கள். இதனை இழந்து விடத்தயாரில்லாது இருக்கிறார்கள்.
சிறுபான்மையினங்களின் அடையாளத்தையும்  இருப்பை உரிமைகளையும் மதிக்கும் ஒரு சனநாயகக் கலாசாரத்தை  உருவாக்கும் முனைப்பை  பிரதான நீரோட்டத்திலுள்ள எந்தச் சிங்கள  ஊடகமும் செய்ய முனையவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கிற உண்மையான  சிங்கள இடதுசாரிகளின் குரல்கள் இலங்கையில் ஒரு அரசியல் மாற்றத்தை கொண்டுவருமளவுக்குப் பலமாகவும் இல்லை.
தேர்தல் நாளொன்றில் வாக்களிக்க செல்வதைத்தவிர மக்களுக்கு வேறு அரசியல் நடத்தைகளைச்செய்வதற்குச் சுதந்திரமற்ற  சூழ்நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதிலும் சுதந்திரமான  தெரிவைச் செய்ய தடைகள் இடப்படுகின்றன. வெளித்தோற்றத்திற்கு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது போலத்தோன்றினாலும் உண்மையான சனநாயக்கண்களுக்கு இராணுவத்தினதும்  புலனாய்வுக்குழுக்களினதும் கோரப்பற்கள் தெளிவாகப்புலப்படுகின்றன.
சிறுபான்மை இனங்களின்  எல்லாவிதமான சனநாயக  உரிமைகளுக்காகவும் பேசவும் எழுதவும் கூட்டம் போடவும் போராடவும் கூடிய சனநாய உரிமைகள் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் “விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு விடப்பட்டிருக்கிறோம்”  எஞ்சியிருக்கும்  விடுதலைபுலிகளின் ஆதரவாளர்கள் உலக யதார்த்தத்தையோ  இலங்கையில் நிலவும் அரசியற்சூழ்நிலைகளையோ புரிந்து கொண்டவர்களாகத் தெரியவில்லை.  முள்ளிவாய்க்கால் படுகொலைகளை ஆடம்பரமான முறையில் நினைவு கூருவதன் மூலமோ மகா யாகங்களைச் செய்வதின் மூலமோ  ஒடுக்கப்படும் மக்களுக்கு விமோசனம் கிடைக்காது.
மகிந்த குடும்பத்தின் அயோக்கியத்தமான சர்வாதிகாரத்தினுள் இருப்பதா அல்லது  ஐக்கியதேசியக்கட்சியின்  நாசூக்கான கடிவாளத்துள் இருப்பதா அல்லது சிலவேளை விடுதலையாகிவரும் ஜெனரலின் கொலைக்கரங்களின் கீழ் மடங்கி கிடப்பதா என்ற தெரிவைத் தவிர யதார்த்தத்தில் எங்களுக்கு அரசியற்தளத்தில் தெரிவுகள் இல்லை.
சமூகத்தளத்தில் தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில் நிலவிய கூட்டுணர்வு இன்று அழிந்து போய்விட்டது.  இந்தக்கூட்டுணர்வு என்பது மாயைகளின் மீதும் சனநாயக மறுப்பின் மீதும் கட்டி எழுப்பப்பட்டிருந்த போதும் சமூகத்துள்  ஒருவகையான  பொறுப்புணர்விருந்தது.
மரபு வழியான குடும்பம் என்னும் கருவும் உருவும் யுத்தத்துள் சிக்கிய மூன்று லட்சத்துக்கும் மேலான மக்களின் வாழவில் சிதைந்துவிட்டது. இது மரபுவழி வந்த பாதுகாப்புணர்வை பொறுப்புணர்வை சிதைத்து விட்டது. இந்த சிதைவு முற்போக்கான மாற்றங்களை கொண்டு வரவேண்டும் குறிப்பாக குடும்பங்களில் பெண்ணுக்கிருந்த மரபு வழியான பாத்திரம் அற்றுப் போய் பெண் வெளிவரவேண்டிய தேவை ஏற்படுகிறது ஆனால் துரதிஸ்டவசமாக அது நிகழாமல் பெண்கள் போகப்பொருட்களாகவும் சிறுமிகள் பாலியல் இச்சைப்பொருட்களாகவும் மாற்றப்படுகிற தன்மையே காணப்படுகிறது. இங்கு கலாசாரத்தில் ஏற்படுகிற மாற்றங்கள் எங்களின் பணபாட்டில் சிதைவுகளைக் கொண்டு வருவதையும் காண்கிறோம். சாதிய ஒடுக்குமுறைகள் மெல்ல மெல்லத்தலை தூக்குகின்றன. பிந்தங்கிய பிரதேசங்கள் மீண்டும் பிந் தங்கியவனவாகவே விடப்படுகின்றன
 ஆக அரசியல் பொருளாதார சமூக நலன்கள் என்பவை ஆண்களுடையதாகவும் உயர்சாதியினருடையதாகவும் பிரதேசங்களினுடையதாகவும் பெரும்பான்மையினருடையதாகவும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உலகளாவிய நுகர்வுக்கலாசாரம் மெதுவாகவும் ஆழமாகவும் தன்னைத் தமிழ் சமூகத்துள் நுழைத்துவருகிறது. இந்த நுகர்வுக்கலாசாரம் மனிதர்களை வெறும் உழைக்கும் கருவிகளாக மாற்றுகிறது. கூட்டுணர்வில இருந்து மனிதர்களைப்பிரித்து உதிரிகளாக்குகிறது. மனிதர்களை யதார்த்த்திலிருந்து பிரித்து மாயைகளுக்குள் விழுத்தும் தென்னிந்தியப் பொழுது போக்கு அசுர ஊடகங்களின் பிடிக்குள் தமிழ்ச் சமூகம் மெதுவாக அகப்பட்டு வருகிறது.
இணையம்வழி சமூக வலைத்தளங்களும்  மற்றும் செல்லிடத் தொடர்பாடற்சாதனங்களும் மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்று வருகின்றன. இதன் வழி கலாச்சாரச் சீர்கேடுகள் அதிகரித்திருப்பதாக கூக்குரலிடப்படுகிறது. ஆனால் இவற்றுக்கு காரணமான சமூக பொருளாதாரக் காரணிகள் கண்டுகொள்ளப்படவில்லை.
மேலும் சமூகத்தில் நிகழ்கிற மாற்றங்கள் எல்லாவற்றையுமே கலாசாரச் சீர்கேடு என்கிற  போர்வைக்குள்ளும் அடக்கிவிடவும் முடியாது.
போருக்குப் பின்னான சமூகமொன்றை வழிநடத்துவதில்  அரசுக்கிருக்கிற  பொறுப்பை உணரும் வல்லமை கொண்ட அரசாக இலங்கை அரசு இருக்கவில்லை. இலங்கை அரசு இலங்கையை வழிநடத்தும் அரசோ அல்லது ஆளும் அரசோ அல்ல. நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அறிந்து புரிந்து கொள்கைவகுத்தல் திட்டமிடல் நடைமுறைப்படுத்தல் என்கிற  அடிப்படையான ஆளும் அம்சங்கள் எதுவுமில்லாத ஒரு கொள்ளைக்கூட்டமாகவே இவ்வரசு விளங்குகிறது
எனவே ஒரு சமூகமாக எங்களை வழிநடத்தும் பொறுப்பும் எங்களிடமே உள்ளது. இந்தப்பொறுப்புணர்வை நாங்கள் அடையாத வரை இன்னொரு போராட்டத்திற்கு நாங்கள் தயாராக முடியாது.
யுத்தத்தினால் விளிம்பு நிலைக்கு வந்துவிட்ட மக்கள், முன்னாள் ஆண் போராளிகள், முன்னாள்ப் பெண்போராளிகள், அரசின் கொடூரமான சித்திரவதைக்குள் சிக்கியிருக்கும் இன்னும் விடுவிக்கப்படாத புலிப்போராளிகள், பல ஆண்டுகளாகப் பொய்க்குற்றச்சாட்டுகளோடு சிறையில் வாடும் அரசியற்கைதிகள்,  இன்னமும் மீளக்குடியேற்றப்படாத மக்கள், வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள், காணாமல் போனவர்களைத்தேடும் உறவுகள் எனத் தமிழ் தேசத்தின் மேனியெங்கும் இன்னும் இரத்தம் வடிகிற ஆறாத ரணங்கள் உள்ளன.
பிச்சை எடுக்கும் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள் வேலைசெய்யும் சிறுவர்கள் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுவர்கள் என எதிர்காலச்சந்ததி ஒன்று எங்கள் கண்முன் சிதைந்து வருகிறது. இவற்றுக்கான பொறுப்புக்கூறலை சிங்கள பௌத்த மேலாதிக்க அரசு செய்யப்போவதில்லை.
பொருளாதாரத்தளத்தில் தமிழ் பேசும்  சமூகங்களின் சந்தையும்  தொழிற்திறன் வளர்ச்சியும் அவர்களின் கையில் இல்லை. அரசின் திட்டமிட்ட வளப்பறிப்பும் பாரமுகமும் இந்தத்தளத்திலும் அவர்களை அழுத்தி வருகிறது.
உள்ளுறை படைப்பாற்றல்களின் அடிப்படையில் அமைந்த தொழிற்கல்வியோ  வேலைவாய்ப்புக்களோ அரசால் திட்டமிடப்படுவதும் இல்லை.
சிங்கள பௌத்த இனவாத அரசின்  ஊழியர்கள் அனைவரும் இருக்கிற வெளிகளைப்பயன்படுத்தி  யுத்தம் சிதைத்த சமூகத்திற்கு மீண்டும் ஒரு ஆன்மாவை வழங்குமளவுக்காவது விழிப்படைய வேண்டும். ஆனால் துரதிருஸ்ட வசமாக இவர்கள் அரசு எள்ளென்றால் எண்ணையாக நிற்குமளவுக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள்.
இப்படி எல்லா முனைகளிலும் சிதைந்த போயிருக்கிற  நாங்கள் எமது இருப்பைப் பேணுவதற்கான சனநாயகத்தைக் கோருவதற்காக குரல்கொடுக்கவேண்டிய நிலையில் நிற்கிறோம். சுதந்திரத்தைக் கோருவதற்கான சுதந்திரத்தை கோரும் நிலையில் நிற்கிறோம். இது எமது நிலை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மை இனங்களினது நிலையும் இதுதான்.
முள்ளிவாய்க்காலில் இறந்து போன ஒன்றறை இலட்சம் மக்களை அடையாளம் காண ஒரு எலும்புத் துண்டாவது  ஒருநாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து கிடக்கும் நடைப்பிணங்களோடு காலமும் ஈழமும் நகர்ந்து செல்கிறது அருவமாக….
மே 18 2012
தேவஅபிரா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக