பின்பற்றுபவர்கள்

8 ஜனவரி, 2011

நோபல் பரிசும் அதன் அரசியலும் ..
1935 ம் ஆண்டிற்குப் பின்பு முதன்முறையாக நோபல்பரிசுப்பதக்கம் ஒரு வெற்றுக் கதிரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட சீன எதிர்புரட்சியாளர் லியூ ஷிஆபோ [Liu Xiaobo] சீனாவில் 2009 இல் இருந்து 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.  அவரது மனைவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.  அவரது சகோதரர்கள் சீனாவை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.  எனவே பதக்கம் வெற்றுக்கதிரைக்கு.

1935ம் ஆண்டு ஜேர்மனிய அஹிம்சாவாதியான கார்ல் வான் ஒஸ்ஸிற்ஸி[ Karl von Osisietzky] தனது பரிசை பெற்றுக் கொள்ள சமூகமளித்திருக்கவில்லை.
இந்த முறை சமாதானத்திற்கான நோபல் பரிசை லியூ ஷிஆபோ வுக்கு வழங்கியமை சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதுமட்டுமல்ல நோபல்பரிசளிப்புத் தினத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என தனது ஆதரவு நாடுகளுக்கு சீனா அழுத்தங்களையும் வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அழுத்தம் இராசதந்திர மட்டத்திலும் பொருளாதார உறவுகள் மட்டத்திலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கீழ்வரும் 15 நாடுகள் நோபல்பரிசு வழங்கும் வைபவத்தைத் தவிர்த்திருந்தன.
பர்மா, வடகொரியா, கியூபா, ரஸ்சியா, கசகஸ்தான், துனீசியா, சவுதிஅரேபியா, பாகிஸ்தான், இராக், இரான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், வெனிசுவெலா, எகிப்து, சூடான், மற்றும் மொரொக்கோ.
பரிசளிப்பில் கலந்து கொள்ளாத சில நாடுகள் என்ன காரணத்திற்காக  அவற்றில் கலந்து கொள்ளவிலை என்பதை அறிவது சுவாரசியமானது.
ரஸ்சியா சீனாவின் அழுத்தங்களுக்கு உட்பட்டது எனக் கூற முடியாத போதும்  சீனாவுடனான வளர்ந்து வரும் வியாபார உறவுகளைப் பழுதாக்க  விரும்பியிருக்கவில்லை எனக்கருதலாம்.
சீனாவுக்கு தேவைப்படும் நிலவாயு முழுவதையும் வழங்குவதற்கு ரஸ்சியா ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.  வரும் ஆண்டில் ரஸ்சியா சீனாவின் தியன்வான் மாகாணத்தில் இரண்டு அணுஉலைகளைக் கட்டுவதற்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இதுமட்டுமல்ல சீனாவும் ரஸ்சியாவும் தமது வியாபார நடவடிக்கைகளைத் தனியே ரூபிளிலும் யென்னிலும் மட்டுமே செய்வதென்ற நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. இதன்மூலம் டொலர் மற்றும் யூரோ நாணயங்களில் ஏற்படும் தளம்பல்களில் இருந்து விடுபடவும் முடிவு செய்துள்ளன.
ஜரோப்பிய நாடான செர்பியா முதலில் இந்தப்பரிசளிப்பில் கலந்து கொள்ளப்போவதில்லையெனத் தெரிவித்திருந்தாலும் ஜரோப்பிய ஒன்றியத்தின்   கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு தனது அரசப்பிரதிநிதியைப் பரிசளிப்பு வைபவத்திற்கு  அனுப்பச் சம்மதித்திருந்தது.
2008 ம் ஆண்டு கொசவோ சேர்பியாவில் இருந்து பிரிந்த போது சீனா அதனை எதிர்த்து சேர்பியாவை ஆதரித்திருந்தது.  கொசவோவின் விடுதலைக்காக பாடுபட்ட  பின்லாந்து பிரதமர் 2008 ம் ஆண்டு அதற்கான நோபல்பரிசைப் பெற்றபோது அந்தப் பரிசளிப்புவைபவத்தையும் சீனா சேர்பியாவுக்காகப் புறக்கணித்திருந்தது. ஆயினும் செர்பியா ஜரோப்பி ஒன்றியத்துள் நுளைவதற்கு முயற்சித்து வருவதனால் தற்போது கடைசி நேரத்தில் சீனாவைக் கைவிட்டுள்ளது.

ஈராக்கும் சீனாவுக்காக இந்தப்பரிசளிப்பைப் புறக்கணித்திருக்கிறது.  ஈராக் சீனாவுடன் மசகு எண்ணை வர்த்தகத்தில் கவர்ச்சிகரமான வருமானத்தைத் தரக்கூடிய 5 ஒப்பந்தங்களை கைசாத்திட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈராக் இழக்க விரும்பவில்லை. இங்கே முரணணி என்னவென்றால் ஈராக் யுத்தத்தின் விளைவின் பலாபலன்களை அதில் சம்பந்தப்படாத சீனாவும் அனுபவிப்பதுதான்.

மோரொக்கோவும் தனது நாட்டில் மேற்கு சஹாராவின் விடுதலைக்காகப் போராடி வரும் பெண்மணியான  அமினாது ஹைதர் [Aminathu Haidar]  எதிர்காலத்தில் நோபல்பரிசுக்குச் சிபார்சு செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இந்தப் பரிசளிப்பை பகிஸ்கரித்துள்ளது.  அடிப்படையில் மொரொக்கோ எதிர்புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவதை கொள்கை ரீதியாகவும் எதிர்க்கிறது.

வியட்நாமும் நோபல்பரிசு வழங்கப்படும் முறைமையை இதுவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை.  வியட்நாமின் பழைய தலைமுறை அரசியல்வாதிகள் சீனசார்பு நிலையை கொண்டிருந்தாலும் இம்தலைமுறை மேற்குலகசார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.  இதனால் வியட்நாம் முன்பு போல சீனாவின் உற்ற நண்பன் இல்லை என்ற போதும் அதன் நோபல் பரிசின் மீதான நாட்டமின்மை பிரசித்தமானது . 1973ம் ஆண்டு வியட்நாமின் கம்யூனிஸக் கட்சியின் தலைவர் லி டுக் தோ வும் [ Li Duc Tho] அமெரிக்கரான ஹென்றி கிசிங்கரும் [Hentry kissinger] ஒன்றாக நோபல்பரிசுக்கு  அறிவிக்கப்பட்ட போது அதனைக் காரணங்கள் எதுவும் கூறாமல் வியட்நாம் நிராகரித்திருந்தது.

சீனாவின் கோபம் ஒரு புறம் இருக்க நோபல் பரிசுக் குழுவின் தெரிவுகள் குறித்துக் கவனிக்கும் போது அதன் மேற்குலகசார்பு அரசியலை விமர்சிக்காமல் விடமுடியாது.  அமெரிக்க ஜரோப்பிய வகையிலான முதலாளித்துவ நலன்களைப் பேணும் வகையிலேயே பரிசு பெறுவோர் தெரிவுசெய்யப்படுகின்றார்கள்.

எதிர்ப்புரட்சியாளர்களுக்குப் பரிசு வழங்கும் நோபல் பரிசுக்குழுவின் முடிவு வியப்பைத் தருவதல்ல. ஆனால் அமெரிக்க மற்றும் ஜரோப்பாவில் உள்ள எதிர்ப்பாளர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.  உதாரணமாக சனநாயக வாதியும் மனித உரிமைவாதியுமான நோம் சோம்ஸ்கி ஒருபோதும் நோபல்பரிசுக் குழுவினரின் கண்களில் படப்போவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் எதிர்ப்புரட்சியாளர்கள் தாராளவாத முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறை முகத்தை தோலுரித்துக்காட்டுவதால் அவர்கள் நோபல்பரிசுக்கு உகந்தவர்களாகத் தென்படுவதில்லை. பதிலாக ஆப்கானிஸ்தானில் இன்னமும் யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் ஓபாமாவும் உலகம் வெப்பமடைதலையும் உலகம் தழுவிய சூழலியல் பிரச்சினைகளையும் வியாபாரமாக்கி அதிகம் பணம் சம்பாதித்த அல்கோரும் நோபல் பரிசுக்குழுவின் கண்களுக்கு தென்பட்டதொன்றும் உலக அதிசயமில்லை. 
அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்ட பின்பும் யுத்தங்கள் கூர்மைப்பட்ட வரலாற்றையே கடந்த காலங்களில் காண்கிறோம்
1973ம் ஆண்டில் அமெரிக்கரான ஹென்றி கிசின்ஹர், 1994இல் இஸ்ரேலியரான சிமோன் பெரஸ்சும் ரொபினும் 2000ம் ஆண்டில் தென்கொரிய பிரதமர் கிம் டே-யுங் உம்  [Kim Dae-jung], 2009 இல் ஓபாமாவும் நோபல்பரிசைப் பெற்றிருந்தனர்.  ஆனால் பலஸ்தீனத்திலும் கொரிய வளைகுடாவிலும் ஆப்கானிஸ்தானிலும்  சமாதானமும் அமைதியும் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குப் போய்விட்டன.
நோபல்பரிசுக்கான செல்வத்தை விட்டுச் சென்ற அல்பிரட் நோபல் வெடிமருந்தையும் ஏவுகணை செலுத்தும்  தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்தவர்.  இதனாலேயே இவர் அளவுக்கதிகமான செல்வத்தையும் சம்பாதித்தார். இவரது கண்டுபிடிப்பின் விளைவால் மரணத்தின் வியாபாரி எனவும் அழைக்கப்பட்டவர்.
அவரது பணத்தை கைகளில் இரத்தம் படிந்தவர்கள் அமைதி அடைவதற்கு வழங்காமல் வேறு யாருக்கு கொடுக்க முடியும் என நோபல் பரிசுக்குழு  அவ்வப்போது நினைக்கிறதோ  என்னவோ!!!
அடிப்படையில் லியூ ஷிஆபோ சீனாவினுள் முதலாளித்துவ சனநாயக மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிற ஒருவராவார். இதனாலேயே மேற்குலகம் அவரை விடுதலை செய்யக்கோருகிறது. சீனாவின் மக்கள் கூட்டம் இவரைப்பற்றி பெருமளவுக்கு அறிந்திருக்கவில்லை. இவர் பற்றியும் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை பற்றியும் சீனஊடகங்கள் கடுமையான தணிக்கையைக் கடைப்பிடித்துள்ளன.
உண்மையிலும் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் இடையில் உள்ள முரண்பாடு அதிகாரத்துவ முதலாளித்துவத்திற்கும் தாரளவாத முதலாளித்துவத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடாகும்.
உலகம் தழுவி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நோபல்பரிசு தொடர்பாக எழுந்துள்ள கோபதாபங்கள் காலப்போக்கில் ஒரு மூலையில் போடப்பட்டுவிடும்  என உறுதியாக நம்பலாம்.
எவ்வாறெனினும் லியூ சீன அரசிற்க்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த காரணத்தினால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருப்பது எந்த சனநாயகத்திற்கும் பொருந்தாததாகும்.
தியனமென் சதுக்கப் படுகொலைகளில் தொடங்கி இன்றுவரையும் சீனாவின் பிரமாண்டமான அதிகாரச்சுவருக்கெதிராக அடிப்படை மனித உரிமைகளுக்காக லியூ போராடிவருகிறார்
1997 ம் ஆண்டு சீன அரசினால்  சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்ட போது அவர் பின் வரும் கவிதையை தனது மனைவிக்கு சமர்ப்பித்து (For Xia)எழுதியிருந்தார்.

எனது அகக்கண்களால் அளவிடமுடியாதபடி
பிரபஞ்சம் அகன்று வெளிறிப்போயுள்ளது.
எனக்கு மழையின் ஒரு துளியைத்தா
இறுகிக் கிடக்கும் இச்சீமெந்துத்தரையைப் பளபளப்பாக்குவதற்கு..
ஒளியின் ஒரு கதிரைத்தா
மின்னல் எதை விரும்புகிறது எனக்காட்டுவதற்கு..
ஒரு சொல்லாவது பேசு
பிறகு இக்கதவைத்திறந்துவிடு
இந்த இரவு தனது வீட்டிற்குப் போவதற்கு ..

* நன்றி- Daan Bronkhorst

ஆசியாவில் சனநாயகம் என்பது அதிலும் குறிப்பாக இந்தியா இலங்கை பாக்கிஸ்தான்  போன்ற நாடுகளில் வெட்கப்பட வேண்டிய கேலிக்கூத்தாகும்.
இந்தியாவில் அருந்ததிராய், தமிழ்நாட்டில் சீமான் இலங்கையில் லசந்த, திசைநாயகம் இன்னும் ஏராளமான தமிழ் சிங்கள பத்திரிகையாளர்கள் என யாவரும் தங்களது கருத்துக்களைப் பேசியதற்காக அல்லது எழுதியதற்காக மரணிக்க அல்லது அளவிட முடியாத இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
அடக்குமுறைகளுக்கெதிராகவும் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் பொறுப்புணர்வுள்ள சனநாயகத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கிற எந்தச் செயற்பாட்டாளர்களும்  நோபல்பரிசுக்காகக் காத்திருப்பதில்லை.
லியூ ஷிஆபோ வுக்கு நோபல் பரிசை விடவும் முக்கியமானது அவரைப் பேசவும் எழுதவும் வாழவும் விடுவதுதான்.
1.3 மில்லியாட் சனத்தொகையையும் 300க்கும் மேற்பட்ட வகையான மொழிகளையும் இனங்களையும் கொண்ட சீனா, அதிகாரத்தைத்தவிர வேறேந்த வழியிலும் சீனாவை ஒருமைப்பட்ட நாடா  வைத்திருக்க முடியுமென நம்பவில்லை. தியனமென் சதுக்கப்படுகொலைகளே அதற்குச்சாட்சி.
இன்றைக்கு சீனாவினதும் இந்தியாவினதும் மேலாதிக்கக்காய்சலுக்குள் ஊடாடிக் குளிர் காயும் சிங்கள பௌத்த அரசு நிகழ்த்திய  முள்ளிவாய்கால் படுகொலைகளும் வெறித்தனமான அதிகாரத்திற்குச்சாட்சி.
காலத்தை பின்னோட்டிப் பார்க்க முடிந்தால் யுத்த நிறுத்தத்தின் பிற்பாடு பிரபாகரனும் மகிந்தவும் கைகளை குலுக்கிக் கொண்டிந்தால் வெற்றிடமாயிருந்த அந்தக்கதிரையில் சிலவேளை மூன்று பேர் இருந்திருப்பர்.
பிரபாகரன் மஹிந்த எரிக்சொலகைம்.
சீனாவுக்கும் இவ்வளவு கோபம் வந்திருக்காது.

தேவ அபிரா
12-10-2010

நன்றி:
விக்கி பீடியா
த பெர்ஸ்
இணையக்கட்டுரைகள்.