பின்பற்றுபவர்கள்

10 ஜனவரி, 2011

ஒபாமாவின் இந்தியப்பயணமும் குலைகளை இழந்த தென்னை மரமும்…



 ஆசிய நாடுகளுக்கான தனது ஒன்பது நாட்பயணத்தின் முதற்கட்டமாக ஒபாமா நேற்று இந்தியாவை சென்றடைந்துள்ளார்.


நேற்று அவர்  2 வருடங்களின் முன்பு பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் தாக்குதலில் 166 மக்கள் பலியடைந்த தாஜ்மகால் விடுதியை பார்வையிட்டதுடன் மஹாத்மா மகாத்மா காந்தி  நினைவுப்பொருட்கள் காட்சிச்சாலையையும் பார்வையிட்டார்.

ஓபாமாவின் ஆசிய பயணத்தின் பின்ணணியில் பல்வேறு நோக்கங்கள்  இருக்கின்றன.
முக்கியமாக  மேலெழுந்து வருகின்ற சில விடையங்களை இங்கே கவனிப்போம்.


பனிப்போர் முடிவின்பின் அமெரிக்காவை மையப்படுத்திய‐ பயங்கர வாதத்திற்கெதிரான போரை மையப்படுத்திய‐ உலக ஒழுங்கு தோன்றியது. ஆனால் அது  வேகமாக மாற்றமடைந்து புதிய உலக ஒழுங்கு ஒன்று தோன்றி வருகிறது.

கடந்த வருடம் ஏற்பட்ட, அமெரிக்காவில் தோன்றி உலகேங்கும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி அமெரிக்க மையவாத உலகை ஆட்டம் காணச்செய்துள்ளது.

சீனா பிரேசில் இந்தியா ரஸ்சியா ஆகிய நாடுகள் உலக அதிகாரத்தில் பங்கு கேட்கிற நிலைக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக சீனாவின் கரங்கள் ஆசிய ஆபிரிக்க மற்றும் ஐரோப்பியச் சந்தையை வளைக்கத்தொடங்கியுள்ளன.

அரசியல் அதிகாரப்போட்டியில் எதிரிகளாக இருக்கிற நாடுகள் பொருளாதார ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. உலகளாவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சந்தைகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை எல்லா நாடுகளுக்கும் இருக்கின்றன.

2006ம் ஆண்டு ஜோர்ஜ் புஸ் இந்தியாவுக்கு வந்த போது இஸ்லாமியர் தீவிர வாதத்திற்கெதிரான போரும் கருத்துருவாக்கமும் முதன்மைப்பட்டிருந்தன. ஆனால் ஒபாமாவின் இந்தப்பயணம் அமெரிக்காவின் பொருளாதார நலன்களிலேயே முதன்மைக்கவனத்தை செலுத்துகிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 9.6 சத வீதத்திற்கு உயர்ந்துள்ளது.   அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடந்த தேர்தலில் ஒபாமாவின் கட்சி கடுமையான தோல்வியை அடைந்தது.  இது எதிர்பார்க்கப்பட்டதாயினும் மக்கள் ஒபாமாவுக்கு எதிராகத்திரும்பியமைக்கான முக்கியமான காராணங்களில் ஒன்று அமெரிக்க உள்நாட்டுப் பொருளாதார நிலமையாகும். அதில் இருந்து மீள்வதற்கு ஒபாமா கடுமையாக ஏதாவது செய்தாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ஒபாமாவின் இந்தப்பயணம் சரிவடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கான ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது;ஆப்கானிஸ்தானில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கான ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவது; சீனாவைச் சுற்றி ஒரு பொருளாதார அரசியல் வியூகத்தை அமைப்பது (இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான் என அந்த வளையம் அமைந்துள்ளது.)
என்பவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

மறுபுறத்தில் இந்தியாவும் தனது பின்வரும் நலன்களைக் முதன்மைப்படுத்துகிறது.
மேலதிக அமெரிக்க முதலீடுகளை ஊக்குவித்தல்.  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒபாமாவின் திட்டத்தையிட்டு இந்திய வியாபாரிகள் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள நெருக்கம் இந்தியாவை கவலை அடையச் செய்கிறது. அண்மையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 2 மில்லியன் டொலர்களை இஸ்லாமியத்தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கென  வழங்கி இருந்தது.

பாக்கிஸ்தான் அமெரிக்காவிடம் பெற்றுக் கொள்ளும் நவீன ராணுவத்தொழில் நுட்பங்களும் தளபாடங்களும் எதிர்காலத்தில் தனக்கெதிராகத்திரும்பலாம் என இந்தியா அஞ்சுகிறது.
பெரும்பான்மையான இந்திய உயர்வர்க்கத்தினர் அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருங்கி வருவதைவிடவும் இந்தியாவுடன் நெருங்கி வருவதை விரும்புகிறார்கள்.
அமெரிக்காவுக்கு இங்கு தலையிடியாக இருக்கும்  விடையம் என்னவெனில் அமெரிக்காவிடம் இருந்து அளவுக்கு மீறி உதவிகளைப் பெற்றுக்கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போலக் காட்டிக் கொண்டாலும் பாக்கிஸ்தான் மறுபுறத்தில் காஷ்மீரிலும், இந்தியாவினுள்ளும்  இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது. மேலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் உளவு நிறுவனங்கள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்தின் உயர் மட்டத்தில் தலிபான்களுக்கு ஆதரவு இருப்பதாகவும் கருதுகின்றன.
ஆனால் அமெரிக்கா பாகிஸ்தானை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எதிர்க்க முனையுமாயின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாகவே உதவிகளைச் செய்யக்கூடும்.
 எனவே என்ன விலை கொடுத்தேனும் அது பாகிஸ்தானைத் தன்னருகே வைத்திருக்கவே விரும்புகிறது. எனவே இந்தப் பயணத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தங்களுக்கு இடையில் உள்ள கசப்பையும் முரண்பாடுகளையும் தீர்த்துக் கொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி திரைமறைவில் அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவையும் தனது பொருளாதார நலன்களுக்காக நண்பனாகவே வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. சர்வதேச விவகாரங்களில் சீனாவுக்கு அளிக்கப்படும் சம அந்தஸ்து தனக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்  எரிச்சலும் இந்தியாவுக்கு உண்டு. ஆனால் இந்தியா பிராந்திய வல்லரசு என்ற நிலைக்கு வெளியே இன்னமும் வரவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறுவதற்கும் இந்தியா தற்போது முயற்சி செய்து வருகிறது.  ஆயினும் அமெரிக்கா இது தொடர்பாக சாதகமான சமிக்கைகள் எதனையும் வெளிக்காட்டவில்லை.
மறு புறத்தில் இந்தியா அமெரிக்காவுடன் கொள்ளும் நெருக்கம் சீனாவையும் திருப்திப்படுத்தப்போவதில்லை.
ஒபாமாவின் வருகை இந்தியாவின் ஏழை மக்களுக்கு கலக்கமூட்டுவதாக உள்ளது.  ஏனெனில் குறிப்பாக அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு இந்தியச் சந்தை முழுமையாகக் திறக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

ஒபாமா வின் வருகையை எதிர்த்து  யத்மல் மாவட்டத்தில் முக்கியமான எதிர்ப்புக் கூட்டமும் ஊர்வலமும் நடத்தப்படுகின்றன. விதர்பா பண்ணை விதவைகளின் சங்கம் இந்த எதிர்ப்பை ஒழுங்கு செய்துள்ளது. 1999 ம் ஆண்டில் இருந்து அமெரிக்க பருத்தி விதைகளின் இறக்குமதிகாரணமாகவும் அமெரிக்கா தனது விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானியங்கள் காரணமாகவும் இந்திய பருத்தி உற்பத்தியாளர்கள் மிகக்கடுமையான நட்டங்களை  எதிர்கொண்டனர்.இதன் விளைவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துள்ளனர். இந்த விவசாயிகளின் விதவைகள் ஒன்று திரண்டு “ஒபாமாவே திரும்பிப்போ” என்கிறார்கள். அவர்களின் ஒபாமாவினை சந்தித்து மனு ஒன்றைக்கையளிக்கும் கோரிக்கையும் இந்திய அதிகாரிகளால் நிராகரிகப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது.  சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரவளர்ச்சி சிலபகுதிகளில்  அபரிமிதமாகவும் பலபகுதிகளில் பின்தங்கியதாகவும் இருக்கிறது. இந்தியாவின் அரச இயந்திரம் ஊழல் நிறைந்ததாகவும் வினைத்திறன் குறைந்ததாகவும் இருக்கிறது.

ஓலிம்பிக் போட்டிகளை சீனா நடாத்திய விதமும் பொது நலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடாத்திய விதமும் இரண்டு பிராந்திய வல்லரசுகளின் அரச, பொருளாதார நிர்வாகக் கட்டமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதனைக் காட்டின.
நிர்மாண வேலைகளில் ஏற்பட்ட தாமதம், விளையாட்டுவீரர்களுக்கான சுத்தமான தங்குமிடங்களை அமைக்க முடியாது போனமை ,சரியாக இயங்காத உபகரணங்கள் என இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் அவமானப்பட்டிருந்தது.
சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியா 10 வருடங்கள் பின்தங்கியதாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் சீரான பொருளாதார வளர்ச்சியும் அதன் பலம்பெற்று வரும் ஆசியபிராந்திய ராணுவ வலையமைப்பும் அமெரிக்காவை உலக அரசியலில் தனது முதன்மையான பாத்திரம் குறித்து கவலைப்பட வைத்துள்ளது.

2005 ம் ஆண்டில் இருந்து இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு தொடர்பான விடையங்களில் மேலும் நெருங்கி வந்துள்ளன.
2009 ம் ஆண்டு மலபாரில் நடந்த யப்பானும் பங்கு கொண்ட இராணுவ ஒத்திகையைக் இங்கு உதாரணமாகக் கூறலாம்.
 கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா இராணுவ போக்குவரத்து விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடம் இருந்து பெற வியாபார ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 30 பில்லியன் டொலர்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் தனது இராணுவத்தளபாடங்களுக்கு ரஸ்சியாவை நம்பியிருந்த இந்தியா அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கியுள்ளது.

இக்கட்டுரை எழுதப்படும் போது அமெரிக்கா போயிங் விமானங்கள் இலத்திரனியல் இயந்திரங்கள்  போன்றவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பான இந்திய‐அமெரிக்க 10 பில்லியன் டொலர் வியாபார ஒப்பந்ததைத் செய்துள்ளது. இது அமெரிக்காவில் 50,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றால் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் என்ன நன்மைகளை அடையுமென எவர்க்கும் தெரியாது.

வளர்ச்சி அடைந்து வரும் ஆசியப்பொருளாதாரங்களைத்  தனக்கு கீழ்நிலையில் வைத்து பார்க்காமல் சமதையாக பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரங்கள் உள்ளன. இந்த சந்தர்ப்பதைப்பயன்படுத்தி சரியான பொருளாதர ஒப்பந்தங்களை செய்ய முடியும் என ஆசிய பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்திய ஆளும் வர்க்கம் தனதும் தான் சார்ந்த முதலாளிகளினதும் நலன்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் தன்மையே வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 மில்லியன் புதிய மத்திய வர்க்கத்தை உருவாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிகின்றன.

அதே நேரத்தில் பில்லியன் கணக்கானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்ச்சென்றுள்ளனர்

இவர்களுக்கு அமெரிக்காவின் முதலாவது கறுப்பு சனாதிபதி தான் பார்வையிடச் செல்லுமிடங்களில் தேங்காய்களை பறிக்கவும் குரங்குகளைப் பிடிக்கவுமான தற்காலிக வேலையே வழங்கியுள்ளார்.


GTN ற்காக தேவன்
 
(1) அபிப்பிராயங்கள்
 
06-12-2010, 17:03
 - Posted by Anonymous
உண்மை. சீனா இந்தியாவை பல வழிகளில் முந்தி சென்று கொண்டிருக்கு...""""இந்தியாவும் சீனாவும் வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளாக இருக்கின்ற போதும் சீனாவின் வளர்ச்சி சீரானதாகவும் இந்தியாவுடன் ஒப்பிடும் போது முழுச் சீனாவையும் சமச்சீராக வளர்ச்சி அடையச் செய்யும் முனைப்புக் கொண்டதாகவும் இருக்கிறது. சீனாவின் அரச பொருளாதார அதிகாரக் கட்டமைப்புக்கள் இந்தியாவினதை விடச் செயற்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன."""" .... நல்ல ஆய்வும் - செய்தியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக