பின்பற்றுபவர்கள்

15 ஜனவரி, 2011

ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள்,

செய்தி சொல்லும் செய்திகள் II

 
செய்தி சொல்லும் செய்திகள் II  ஆரியல் சரோன்.. ஜோர்ஜ் குளோனி.. தமிழர்கள் - GTNற்காக தேவன்

 
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் வாழும் நாட்டில் வெளியாகும் ஒரு பத்திரிகையில் வந்த சில செய்திகள் பற்றி எனது நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் பின்வருமாறு கூறினார்.
 
“உவன் செய்த அநியாயத்திற்குத்தான் கோமாவில கிடந்து அனுபவிக்கிறான் கடவுளாப்பாத்து கொடுத்த தண்டனை. உவன் இன்னும் அந்தரிக்கவேணும்”
 
யாரைப்பற்றி நண்பர் குறிப்பிடுகிறார் என நீங்கள் யோசிக்கிறீர்கள்!
 
இந்தக் கிழமையுடன் சரியாக ஜந்து வருடங்களாக இஸ்ரேலிய முன்னை நாள் பிரதமர் ஆரியல் சரோன் (Ariel Sharon) கோமாவில் இருக்கிறார்.  கடந்த ஜந்து வருடங்களாகச் செயற்கையான முறையில் உயிர்தரிக்க வைக்கப்பட்டுள்ள Ariel Sharon சரோன் பாலஸ்தினியர்கள் மீதான ஓடுக்கு முறைகளை தீவிரப்படுத்தியவர்.
 
எனது நண்பரின் கருத்துப்படி பலஸ்தீனியர்களுக்கு அவர் செய்த அட்டூழியத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனையே அக் கோமா. எமது ஈழத்து அரசியலிலும் அவ்வப்போது இவ்வாறான எதிர்பார்ப்புக்களைக் கேட்கிறோம். 
 
அடாது செய்தவன் படாது படுவான்.. தன்வினை தன்னைச்சுடும்... இது போன்ற பழமொழிகள் எமது உணர்வுகளுக்கு வடிகாலமைத்துவிடுவதை அவதானிக்கிறோம்,
 
எனது நண்பனின் தர்க்கவியல் சரி என்றால் இலங்கையில் கோமா வந்து படுக்க வேண்டியபலரைப் பட்டியலிடலாம். மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா, டக்லஸ், கருணா என அந்தப்பட்டியல் நீளும்!
 
விடுதலைப்புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறானதொரு பட்டியலை வைத்திருக்கிறார்கள்.
 
உலக வரலாற்றில் தமது தவறுகளுக்காகவும் கொடூரமான அரசியல் செயற்பாடுகளுக்காகவும் தண்டிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆண்டவன் தான் காரணம் என நான் நம்பவில்லை.
 
ஏனெனில் உலகின் மிகப் பெரியபயங்கரவாதிகளான அமெரிக்கத் தலைவர்கள் எல்லோரும் சகல செளகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது சந்தோசமாகவே செத்துப் போயிருக்கிறார்கள்.
 
விடுதலைப் புலிகள் தாம் உயிர்ப்புடன் இருந்தவரை தமது அரசியல் எதிரிகளை ஆண்டவனைத் தண்டிக்க விடாமல் தாமே தண்டித்துக் கொண்டிருந்தார்கள்.
 
லலித், பிரேமதாச, காமினி, ராஜீவ் காந்தி என அவர்களின் தண்டனை பட்டியலில் பூர்த்தி செய்யப்பட்டவர்கள் மரணமடையாது இருந்திருந்தால் அவர்களின் தவறுகளுக்காக நியாயமான தண்டனைகளைப் பெற்றிருப்பார்களா என்பது மறுபுறத்தில் சந்தேகமே! 
 
உலக அரசியல் வரலாற்றில் ஆதிகாரஅரசியலில் தமக்கு சாதகமான இடங்களை எடுக்க முடியாதவர்கள், அதிகாரத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது பலவீனமானவர்கள் தமது தவறுகளுக்கான  தண்டனைகளை சிலவேளைகளில் அடைகிறார்கள்.
 
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சில ஆபிரிக்க அரசியல் மற்றும் இராணுவத்தலைவர்கள்,  முன்னைநாள் கம்யூனிசத் தலைவர்கள், சேர்பிய அரசியல் மற்றும் சில இராணுவத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றறத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.  ஆனால் பெரும்பாலான குற்றவாளிகள் அப்பாவிகளைத் தண்டித்துக் கொண்டு மூக்கும் முழியுமாக உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.
 
ஆரியல் சரோனின் பிழையான உணவுப்பழக்கம் காரணமாகவே அவரது மூளைக்கு குருதி வழங்கும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது என்றும் அதனாலேயே கோமா ஏற்பட்டது என்றும் கூறிய போது என் நண்பனின் முகம் சற்றே இருண்டு போனது.
 
இன்னுமொரு செய்தியும் எங்களது உரையாடலுக்குக் களமானது.
 
அண்மையில் வெளியிடப்பட்ட வீடியோ செய்தி ஒன்றில் அமெரிக்க நடிகரான ஜோர்ச் குளோனி(George Clooney) பின்வருமாறு கூறுகிறார்.
 
“நாங்கள் கொங்கோவைத் தவறவிட்டோம் ருவண்டாவைத் தவறவிட்டோம் ஏன் டாவூரையும் தவறவிட்டோம்.   போர் தொடங்குவதற்கு முன்னம் அதை நிறுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்திருக்கிறது என்பதை அறிந்திருந்தும் கொங்கோவிலும் ருவண்டாவிலும் டாபூரிலும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்குப் பிந்திவிட்டோம்"
 
இதனை அவர் “ The World is Watching (உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது)”என்னும் செயற்திட்டத்திற்கு உதவியளித்து வெளியிட்ட வீடியோச் செய்தியிலேயே குறிப்பிட்டார்.
 
இச் செயற்திட்டம் சூடானை மையப்படுத்தியே தொடங்கப்பட்டுள்ளது.
 
ஏதிர்வரும் திங்கட்கிழமை தென் சூடானில் சர்வசனவாக்கெடுப்பு ஒன்று நடைபெறவுள்ளது.  தென்சூடான் சூடானின் ஒருபகுதியாக இருப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் வாக்கெடுப்பே அதுவாகும்.
 
தென் சூடான்(கிறிஸ்தவ ஆபிரிக்க மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும்) நீண்ட காலமாக வடசூடானின் (அராபிய அரசியல் தலைமைகளால் நிர்வகிக்கப்படும்பகுதி) ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர்.   வட சூடானின் ஒடுக்குமுறையின் உச்சக்கட்டமாக சூடானின் டாவூர் மாகாணத்தில் கொடூரமான இனப்படுகொலைகள் கடந்த காலங்களில் நடந்தேறின.ஆனால் இது தொடர்பான தகவல்கள் மிகவும் காலம்கடந்தே உலகுக்கு தெரிய வந்தது. தற்போது நடைபெறவிருக்கும் சர்வசன வாக்கெடுப்புகாரணமாக சூடானில் மீண்டுமொரு வன்செயல் நிகழலாம் என உலகம் அஞ்சுகிறது "உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது-The World is Watching” என்னும் செயற்திட்டத்தின் கீழ் தெற்கு மற்றும் வடக்கு சூடான் எல்லையை கடந்து செல்லும் சகல வர்த்தகச்செய்மதிகளும் அந்தப் பிரசேதத்தில் பொதுமக்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளையும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளையும் கண்காணிக்கும்,
அழிக்கப்பட்ட கிராமங்கள் குண்டு வீசப்பட்ட பிரதேசங்கள் மற்றும் செறிவான மனிதப் படுகொலைகள் நிகழக் கூடிய சாத்தியங்களை அவதானித்து இச்செய்மதிகள் தகவல்களைத்திரட்டும் இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களையும் படங்களையும் கூகுள் மற்றும் இணையத்தளவடிவமைப்பு நிறுவனமான Trellon ஆகியவற்றின் உதவியுடன் ஜக்கிய நாடுகள் சபையின் செய்மதிச்செயற்திட்டம் (UNOSAT) ஆராய்ச்சி செய்து தெளிவான தகவல்களாக  www.satsentinel.org. என்னும் இணையத்திற்கு வழங்கும்.  இதன்மூலம் இணைய வசதி உள்ள எவரும் சூடானில் நிகழும் எந்த வன்முறையையும் 36 மணித்தியாலத்திற்குள் காணக்கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தச்செய்தியை வாசித்த பின்னர் எனது நண்பர் கேட்டார்: “முள்ளிவாய்க்காலையும் நாங்கள் தவறவிட்டுவிட்டோம்” என ஜோர்ச் குளோனி ஏன் சொல்லவில்லை”
 
அவருக்கு தமிழர்கள் என்றொரு இனம் இருப்பதே தெரிந்திருக்குமோ தெரியாது என்றேன்.
 
நாடுகடந்து இருக்கிற தமிழர்களிடம் சொல்லிக் குளோனியுடன் கதைக்கலாமே என்றார்.
 
நாடுகடந்த தமிழர்கள் பலகுழுக்களாகப் பிரிந்து தமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவரை நாடினால் இன்னொருவருக்கு பிடிக்காதென்றேன்.
 
நாசமாய் போகவென்றார்!  என் நண்பர்.
 
GTNற்காக தேவன்
08/01/2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக