பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

ஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி‌

ஒடுக்கும் மகிந்தவின் ஊழல்ப்பட்டாளம் அடைந்த தோல்வி‌

நோர்வேஜியன் பயங்கரவாதியான பிறேவிக்கின்(Breivik) செயற்பாடானது நாங்கள் நீண்ட காலமாகக் கூறிவரும் விடையம் ஒன்றை உறுதிப்படுத்தியுள்ளது.  பயங்கரவாதம் என்பது இடதுசாரிகளாலும் வலதுசாரிகளாலும் கைக்கொள்ளப்படக் கூடியது என்பதே அது.  கிரிக்கட் விளையாட்டுக்காரனான குமார் உட்படப் பலர் எந்தப் பயங்கரவாத நடவடிக்கையையும் ஏதோ ஒரு வகையில்  கொம்யூனிசத்துடன் தொடர்புபட்டதாகவே கருதுகின்றனர்.உண்மைதான். பிறேவிக் தன்னை ஒரு புரட்சியாளனாகவே நினைத்திருந்தான்.  ஆனால்  உண்மையிலும் அவன் அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட தீவிர கொம்யூனிச எதிர்ப்பாளனாகும்.
 இந்த வகையான பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வது குரூரமானது என அவன் நினைத்த போதும் அவன் இவற்றைப் புரிவது தேவையானது எனவும் நினைத்திருந்தான். ஹிட்லரைப்போலவே இவனும் மற்ற மனிதர்களிலும் பார்க்க தாங்கள் மேலானவர்கள் என நினைக்கிற கொகெசன்  கனவை(Caucasian dream) கொண்டிருந்ததுடன் தூய்மையான(Caucasian) கலாச்சாரத்தை- உயர்ந்த இனங்கள் எனக் கருதப்படுகிற சில இனங்களைத்தவிர வேறு இனக்கலப்புகள் அற்ற ஒரு கலாசாரத்தை  விரும்புகிற ஒருவனாகவும் இருந்திருக்கிறான்.  இந்த நோக்கத்துடன் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய அவன் தனது  பார்வையில் புரட்சியை வலிந்து ஏற்படுத்துவது அதற்கு தேவையானது எனக் கருதினான்.  அவன் இந்தத்தாக்குதல்கள் மூலம் தற்போதுள்ள பல் கலாசார சமூகக் கட்டமைப்பைத் தாக்கவே விரும்பி இருந்தான். ஐரோப்பாவின் வலதுசாரித் தீவிரவாதிகளிடையே பன்மைக் கலாச்சாரத்தை குறிப்பாக இஸ்லாமியக் குடியேற்றக்காரர்களைக் குற்றம் சாட்டுவதும் அவர்களை வெறுப்பதும் ஒரு பொதுமையான பண்பாக இருக்கிறது.
பிறேவிக் Knights Templar 2083 எனக் பெயரிட்டுத் தானே தயாரித்த  12 நிமிடம் ஓடுகிற ஒளிப்படச் செய்தியில் ஈரத்தடுப்பு உடுப்பை அணிந்துகொண்டு  தானியங்கித் துப்பாக்கியைத் தாங்கியபடி முஸ்லீம் எதிர்ப்புவாதக் கருத்துக்களைக் கூறுவதைக் காணமுடிகிறது.
கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் உலகெங்கும் தோன்றிவரும் வறுமைக்கும் பின்னடைவுகளுக்கும் காரணமாக இஸ்லாமியத்தை நினைக்கிறார்கள்.  ஆனால் இன்று உலகம் எதிர்கொள்கிற பிரச்சனைகள்  உண்மையிலும் உலகளாவிய முதலாளித்துவத்தினாலேயே ஏற்படுகின்றன.   இந்த உலகில் பண்பட்ட கனவான்கள் என அழைக்கப்படுபவர்கள் மக்களின் மதநம்பிக்கைகளைத் தமது கொள்ளை அடிப்புக்கும் சுரண்டலுக்கும் ஏதுவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
சிங்கள மேலாதிக்கவாதிகள் நோர்வேயில் நிகழ்ந்த நியோ-பாசிஸ்டுக்களின் தாக்குதல்களைக் கேள்விப்பட்டபோது சந்தோசமடைந்திருப்பார்கள்.  நோர்வேயின் தொழிலாளர் கட்சி ஒரு சமூக சீர்திருத்தவாதக் கட்சியே தவிர கொம்யூனிஸக் கட்சியல்ல. ஆயினும்  பிறேவிக்கின் பார்வையில் சமூக சீர்திருத்த வாதிகள் கூட கலாச்சார மாக்சிஸ்டுக்களாக அல்லது பல்கலாச்சாரத் துரோகிகளாகவே அமைந்துவிட்டனர்.
இதேவேளை இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் பல்வேறு முறையற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமக்கு அளிக்கப்பட்ட வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வடக்கில் மகிந்தவை நிராகரித்திருந்தார்கள்.  இராணுவப்பலம் நிர்வாகப்பலம் காடைத்தனம் லஞ்சம் ஆள்மாறாட்டம் என எல்லாவகையான தந்திரோபாயங்களையும் பயன்படுத்தி மக்களின் எரியும் நெருப்பை அணைக்க முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
தமிழர்கள் தன்னிடம் பணிந்து மண்டியிட வேண்டும் என மகிந்த எதிர்பார்த்திருந்தார்.ஆனாலும் துணிச்சலுடன் மீள எழுந்து வரும் தமிழ்ச்சமூகம் ஒடுக்குமுறையும் ஊழலும் நிறைந்த மகிந்த பட்டாளத்தை முகத்தில் அறைந்தது போலத் தோற்கடித்து உள்ளது. தெற்கில் மகிந்த வெற்றியடைந்த போதும் பலவீனமான எதிர்க்கட்சி காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது.  எவ்வாறேனினும் தேர்தல் முடிவுகள் நாடு பிளவுபட்டு இருப்பதை வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றன. மகிந்த தெற்கை ஆளும் போது வடக்கும் கிழக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலாதிக்கத்தின் கீழே வந்துள்ளது.  இந்த வெளிப்படை உண்மையை மறைக்க முயன்று மகிந்த அரசு தோல்வி அடைந்துள்ளது. 
"இந்த நாட்டில் தேசிய இனங்களுக்கிடையில் காணப்படும் இந்தப் பிளவை இல்லாது செய்வதற்கு ஏதாவது ஒரு தீர்வை இந்த அரசு கொண்டிருந்ததா?"  இனிவரும் காலங்களில் இந்தக் கேள்வி பற்றியே உரையாடவேண்டியிருக்கும்.
தேசிய கூட்டமைப்பின் தலைவர் பின்வருமாறு கூறியிருந்தார்.
"தமிழ்மக்கள் சந்தேகத்துக்கிடமற்ற வகையில் தமது விருப்பத்தையும் ஆணையையும் இந்தத்தேர்தலிலும் தெரிவித்துள்ளார்கள்.  1956ம் ஆண்டில் இருந்து இந்த நாட்டில் நிகழ்ந்த தேர்தல்கள் யாவற்றிலும் தமிழ்மக்கள் மிகத் திட்டவட்டமான செய்தியையே தெரிவித்திருக்கின்றனர்.  ஐக்கிய இலங்கைக்குள் எந்தவிதமான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படமுடியாத உரிமைகளுடன் எல்லா இனங்களுக்கும் சமதையானவர்களாகத் தமது சுயகெளரவத்தைத் திரும்பப் பெற்றவர்களாகப் பாதுகாப்பான முறையிலேயே வாழ்வதையே தமிழ்மக்கள் விரும்புகிறார்கள்.   அதுமட்டுமல்ல தமக்கே உரித்தான சமூச கலாச்சார பொருளாதார அரசியல் உரிமைகளை அடையக்கூடிய அரச முறைமையொன்றையும் அடைய விரும்புகிறார்கள்." உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைவரையும் மிக விரைவாகக் குடியேற்றிப் புனர்வாழ்வளிக்கக் கோரியும்தான் தமிழ்மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் இடம்பெயர்ந்த அனைவருக்கும் முறையான வீட்டுவசதியும் வாழ்வாதாரத்துக்காஅடிப்படைகளும் வழங்கப்படவேண்டும்.  தமிழ் மக்களின் பராம்பரியமான பிரதேசங்களில் அவர்களின் சமய கலாச்சாரப் பிரதேசங்கள் மற்றும் அவர்களுக்கு முக்கியமான அனைத்திலும் அரசும் அதன் கட்டமைப்புக்களும் விதித்துள்ள     தடைகள் நீண்டகால போக்கில் தமிழ்மக்களின் மீது மிகப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே தமிழ்மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதனை கணியம் செய்து காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மிகமிதவாதப்போக்கை கொண்டவர் என்பதுடன் சமரசத்திற்கும் வரக்கூடியவர். மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்  இடைக்காலத் தீர்வாக முன் வைத்த உள்ளகத்தன்னாட்சி சபையைத்தான் (internal self determination)  திரு சம்பந்தன் அவர்களும்   விரும்புகிறார் என்பது வெளிப்படையானது.  உண்மையிலும் அவர்கள் கோருவது சுயநிர்ணய உரிமையல்ல.  அவர்கள்  ஐக்கிய இலங்கைக்குள் இருக்கக்கூடிய சுய அதிகாரத்தையே கேட்கிறார்கள்.
எனது நம்பிக்கையில் சுயநிர்ணய உரிமை என்பது ஒரு இனம் தனது தலைவிதியை நிர்ணயிப்பதாகும்.  இங்கே அந்த இனத்தின் பிரித்து செல்லும் உரிமையும் உறுதிப்படுத்தப்படுகிறது. சுயஅதிகாரத்தை ஐக்கிய இலங்கைக்குள் தமிழினம் பெறுவது என்பது கூட மகிந்த அரசினால் கடந்த காலத்தில் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்ததேர்தல் முடிவுகளை உணர்ந்து கொண்டு மகிந்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுவார் என நான் நம்பவில்லை.  தான் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களைக் கிளர்த்தியும் ஒருங்கிணைத்தும் ஆர்ப்பாட்டங்களைச் செய்து பேரணிகளை நடாத்தியும் வந்த ஒரு தலைவர் தான் அதிகாரத்திற்கு வந்ததும் அவற்றை மறந்து விட்டார்.  ஒடுக்கப்பட்ட மக்களே அவரின் பின்னால் அன்று திரண்டிருந்தனர் என்பதை அவர் இன்று வசதியாக மறந்து விட்டார்.  ஆனால் அவர் கற்க மறந்த அந்தப்பாடத்தை நாங்கள் மறக்கவேண்டாம்.
தமிழ் இனத்தின்கோரிக்கைகளை தொழிலாளர்களினதும் மீனவர்களினதும் இன்னும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களினது கோரிக்கைகளுடனும் இணைத்து இலங்கையில் சனநாயகத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடுவோம்
விக்கிரமபாகு கருணாரத்தின.
நன்றி: http://www.internationalviewpoint.org/spip.php?article2235
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா
26-08-2011

எந்தப்பாதையும் தொடங்கிய இடத்திலேயே

எந்தப்பாதையும் தொடங்கிய இடத்திலேயே தொடங்கிய உடனேயே முடிவதில்லை-ஒரு மொழிபெயர்ப்பு

இலங்கையில் மகிந்த குடும்பம் சிவில் முகமூடி போர்த்திய ஒரு இராணுவ ஆட்சிக்குத் தயாராகி வருகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் பல்வேறு தருணங்களில் இலங்கை ஆசியாவின் இன்னுமொரு பர்மாவாக வரலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் தமது சாயம் வெளிக்கும் போது தமது அதிகாரத்தைப்பேணுவதற்கு மகிந்த குடும்பத்திற்கு இராணுவத்தை விட்டால் வேறுவழி இல்லாமல் போகலாம். அது மட்டுமல்ல இன்று சிறையில் வாடுகிற சரத்பொன்சேக்காவும்  இராணுவநோக்கிலேயே சிந்திக்கத்தெரிந்தவர். இவர்கள் எவரினதும் கையில் இலங்கையின் அதிகாரம் இருக்கும் வரை இலங்கையில் சனநாயகச் சிந்தனைக்கு இடமில்லை.
இலங்கையின் வடக்கும் கிழக்கும் கீழ்தரமான கழிசடைத்தனமான சிங்கள இராணுவக்கெடுபிடிக்குள் சிக்கியுள்ளன. இலங்கையின் பொலீஸ் அதிகாரமும் குற்றவாளிகளை பாதுகாத்து பொதுமக்களைத்தண்டிக்குமளவுக்கு சீரழிந்து போயுள்ளது.
பலமான சிவில் சமூகச் சிந்தனையைக்  கொண்டிருந்த இலங்கையின் வரலாறு கடந்த மூன்று தசாப்தங்களில் படிப்படியாக இராணுவ மயப்பட்ட தனிமனித விழுமியங்களும் மனிதவுரிமைகளும் சீரழிந்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுவொன்றும் அதிசயமல்ல. எந்தப்பாதையும் தொடங்கிய இடத்திலேயே தொடங்கிய உடனேயே முடிவதில்லை என்ற கசப்பான உண்மையை சமூக இயங்கியல் கற்றுத்தந்துள்ளது.

இந்த உண்மையின் ஒளியில் பர்மாவில் கடந்த அரை நூற்றாண்டுகளாக எப்படி ஒரு இராணுவ அரசு நீடித்திருக்கிறது என்பதை தனது பார்வையில் விளக்கி டேவிட் கேய்ஸ்(David Keys) என்பவர் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பை வாசியுங்கள்... 

பர்மா: ஏன் இன்னும் பர்மாவில் இராணுவச்சர்வாதிகாரத்தால் நீடிக்க  
               முடிகிறது- David Keys

அண்மையில் பர்மாவின் எதிர்க்கட்சித்தலைவியானஅயுங் சன் சூ கீ  பர்மாவின் இராணுவத்தலைமையினால் விடுவிக்கப்பட்டமை உலகெங்குமுள்ள ஊடகங்களில் செய்தியானது. ஆனால் அயுங் சன் சூ கீ இன் 2000த்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இன்னமும் சிறைகளிளேயே உள்ளனர்.  இதுவே இராணுவ ஆட்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையில் இருக்கக்கூடிய பரஸ்பர உறவின் உண்மையான நிலைமையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
உத்தியோகபூர்வமாக மியன்மார் என் அளைக்கப்படுகிற பர்மா உலகின் மிக நீண்ட இராணுவ ஆட்சியைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கான உள்ளகக் காரணங்களை இக்கட்டுரை அலசுகிறது

பிரச்சனையின் வேர்கள்

கடந்த அரை நூற்றாண்டுகளாகப் பர்மா ஒரு மரபு வழியான சனநாயகநாடாக இருக்கவில்லை.  கடந்த சில தசாப்தங்களிற் சில நாடுகளில் இராணுவஅரசுகள் இருந்த போதும் அவை தற்காலிகமானவையாகவே இருந்துள்ளன. மேலும் அந்த இராணுவ அரசுகளை ஆதரித்தவர்களும் கூட அவற்றை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதி ஏற்றிருந்தனர்.  ஆனால் பர்மாவின்   சர்வாதிகார இராணுவத் தலைமை ஏறத்தாழ கடந்த 50 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறது.
பர்மாவில் ராணுவத்தலைமை நீடிப்பதற்கு முக்கியமான நான்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.

·         பர்மாவுக்குள்ள பலமான இராணுவமரபு
·         பர்மாவில் காணப்படும் பலவீனமான சிவில் சமூகம்
·         அந்நிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக பர்மாவில் நீண்ட காலமாக நீடித்திருக்கும் பயம்
·         பர்மாவின் தேசிய ஒருமைப்பாடு குலைக்கப்படலாமென்ற நீடித்தபயம்

அனேகமான ஆசிய ஆபிரிக்க நாடுகள் காலனித்துவத்திடமிருந்து தமது சுதந்திரத்தைச் சிவில் சமூகத்தின் அதாவது  மக்கள் போராட்டத்தின் மூலமாகவே அடைந்தன.  ஆனால் பர்மா தனது விடுதலையை அவ்வாறு பெறவில்லை.  1945 களில் ஓங்கியிருந்த ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து உலக நாடுகள நிகழ்த்திய  இராணுவப் போராட்டத்தின் விளைவின் ஒரு பகுதியாகவே புதிய பர்மா பிறந்தது.  ஜப்பானுக்கு எதிராகப் போராடிய உலக நாடுகளின் ஐக்கிய முன்னணியின் ஒரு பகுதியாக இருந்த பர்மிய இராணுவம் பர்மாவின் சுதந்திரத்தின்பின் பர்மியத் தேசிய இராணுவமானது.  இந்த வகையில் பர்மாவின் இராணுவத்தை ரொபேர்ட் முகாபேயின் சிம்பாபேயுடனோ, 20ம் நூற்றாண்டு வரையும் நீடித்த இந்தோனேசிய இராணுவ ஆட்சியுடனோ,  19 ம் நூற்றாண்டிலும்  இலத்தீன் அமெரிக்காவில் நீடித்த ( கௌடிலியோ)இராணுவ அரசுகளுடனோ ஒப்பிடலாம்.
பர்மிய இராணுவம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜப்பானிய அரசுடன் கூட்டமைத்துக் கொண்ட பர்மியத் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது.  பர்மாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிலவிய காலத்தில்(1942) இந்த இராணுவம் பர்மியப் பாதுகாப்பு இராணுவம் என அழைக்கப்பட்டது.  பிற்பாடு இதே இராணுவம் பர்மியத் தேசிய இராணுவமானது.
 யுத்த நிலமைகள் ஜப்பானுக்கு எதிராகத் திரும்பிய போது பர்மியப் பாதுகாப்பு இராணுவம்  தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு யப்பானுக்கெதிரான ஐக்கிய முன்னணியுடன் இணைந்து கொண்டது. இவ்வாறு யப்பானுக்கு எதிராக மாறி வந்த அரசியற்சூழ்நிலைகளுக்கு ஏற்ப பர்மிய இராணுவத்தின் பெயரும் மாறிவந்ததோடு அந்த அரசியல் மாற்றங்களுக்கேற்ப பர்மாவின் இராணுவத்தை நவீன பர்மாவின் தலைவரான அயுங் சன்(Aung San) வழிநடாத்தினார்.
அயுங் சன் (Aung San) இன்  பிரபல்யமானது பர்மாவின் இராணுவப் பிரபல்யத்திற்கு பலம் சேர்த்து இராணுவத்தின் இருப்புக்கும் ஒரு வகையில் பங்களித்துள்ளது.  அதேவேளை இன்றைய பர்மாவின் எதிர் கட்சித் தலைவரான அயுங் சன் சூ கீ(Aung San Suu Kyi) இன் பிரபலியத்துக்கும் இவர் மீதான மதிப்பு காரணமானது ஏனெனில்  அயுங் சன் சூ கீ  அயுங் சன் இன் மகளாவார்.

பலவீனமான சிவில் சமூகம்

பர்மாவின் பலமான இராணுவ ஆட்சிக்கு எதுவாக இருக்கும் இரண்டாவது காரணம் பலவீனமான சிவில் சமூகமாகும். 1824 இல் பிரித்தானியா பர்மாவின் அனத்துப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பர்மிய மன்னராட்சி முறைமைகளை ஒழித்தது.  அதுமட்டுமல்ல பர்மாவில் நிலவிவந்த பிரபுத்துவ சமூகங்களின் நிர்வாகமுறைமைகள் கடைசிகாலஅரசர்களினாலும் பின்னர் பிரித்தானியர்களாலும் அழிக்கப்பட்டன.  இவற்றினால் மரபு வழியான சிவில் சமூகம் ஒன்று படிப்படியான வளர்ச்சிக்கு உட்பட்டு வளர்வது தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

மறுபுறத்தில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் நிலவிய சிவில் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு பர்மிய  சமூகம்  இணைத்துக் கொள்ளப்படவில்லை.  பதிலாக இந்திய துணைக்கண்டத்தில் இருந்து இந்தியர்களும் பிரித்தானியாவில் இருந்து  பிரித்தானியர்களும் அளைத்துவரப்பட்டுச் சிவில் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர். பர்மாவின் மத்தியதரச் சிவில் ஆட்சியில் இவ்வாறு பர்மியர் அல்லாதவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட கீழ்நிலை ஆட்சியில் பொலிசாகவும் இராணுவமாகவும் பர்மியர்கள் இணைக்கப்பட்டனர்.
இதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது.  பிரிட்டிஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக பர்மா இருந்தபோதும் பர்மிய மொழி பேசும் மக்களைக் கொண்ட பர்மிய இதய நிலம் கடைசிவரையும் இந்திய மகாராஜாக்களுடன் இணைய மறுத்து வந்ததும் பிரித்தானியர்களால் கடைசியாகவே  வெற்றி கொள்ளப்பட்ட நிலமாக பர்மா இருந்ததுவே அது. எனவே சிவில் ஆட்சியினுள் பர்மியர்களை உள்வாங்கக் கூடிய சூழ் நிலைகள் ஏற்படவில்லை.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது மேற்கத்தியக் கல்வியைப் பயின்ற ஆங்கிலம் பேசுகிற பர்மியர்களின் எண்ணிக்கையும் அக்காலத்தில் மிகக் குறைவாகக் காணப்பட்டது. மேலும் 1930 களில் தோன்றிய பொருளாதாரச்சரிவும் பர்மாவின் மத்திய தர வர்க்கத்தை கடுமையாக பாதித்து உடைத்தும் விட்டது.
இந்த மத்திய தரவர்க்கம் பர்மாவின் சிவில் சமூகத்திற்கான கருவை இட்டிருக்கக்கூடிய வாய்ப்பும் இதனால் இல்லாமற் போனது.
பர்மியத் தேசிய வாதிகளிடம்(பர்மிய மொழியைத் தாய் மொழியாகப் பேசுகின்றவர்கள்) நிலவிவருகிற இன்னுமொரு அச்சமும் பர்மாவின் நீடித்த இராணுவ ஆட்சியைக்காப்பாற்றி வந்திருக்கிறது.  பர்மா பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பன்மொழிவாரி இனங்களைக் கொண்ட  நாடாகும்.  எனவே பர்மிய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளைப் பேசுகின்ற சிறுபான்மை இனங்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடிப் பர்மா பல துண்டுகளாக உடைந்து போகுமோ என்ற அச்சம் பர்மிய மொழி பேசும் தேசியவாதிகளிடத்தில் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது.  பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னான 17க்கும்  19க்கும் இடையிலான நூற்றாண்டுப் பகுதியில் பர்மாவின் அரசர்கள் தமது அரசுப் பகுதியை பர்மிய மொழி பேசாத இனங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கும் விஸ்தரித்தார்கள். அல்லது குறைந்தபட்சம் அவையும் தமது ஆட்சிக்குட்பட்டவை என உரிமை கோரினார்கள்.  இதனால் தற்போதைய பர்மாவின்  மூன்றில் இரண்டு பகுதி பர்மிய மொழி பேசாதவர்களினாலே வாழப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது மேலும் இந்தச் சிறுபான்மை இனங்கள் பர்மாவின் மொத்தச் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.
பர்மாவில் பன்னிரண்டுக்கும்   அதிகமான மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர் உள்ளனர்.  ஐந்து மில்லியன் ஸ்ரோங்க் ஷான்(strong Shan), நான்கு மில்லியன் ஸ்ரோங்க் கரேன்(strong Karen),  இரண்டு மில்லியன் ஸ்ரோங்க் அரக்கான்சே(strong Arakanese)  இவற்றுடன் மொன்(Mon), ஷின்(Chin) கரேனினி(Karenni) மற்றும் கச்சின்(Kachin)  சிறுபான்மை இனங்கள் பர்மாவில் உள்ளனர்.

பர்மாவின் பர்மிய மொழி பேசும் தேசியவாதிகளின் பர்மா துண்டுகளாக உடையக்கூடும் என்ற பயத்தினை உறுதிப்படுத்துவதுபோல பர்மா சுதந்திரம் அடைந்த உடனேயே பன்னிரண்டுக்கும்  அதிகமான சிறுபான்மை இனங்கள்  தமது விடுதலைக் கோரிக்கையை முன்வைத்துப் பிரிவினைப் போராட்டங்களைத் தொடங்கியிருந்தன.
இவற்றுள் கரேன் மற்றும் சான் இனங்களின் போராட்டம் இன்றளவும் தொடர்கின்றது.  இதுமட்டுமன்றி மொத்தப் பர்மாவின் ஐந்தில் இருந்து பத்து வீதமான நிலப்பரப்பு இந்த விடுதலைக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருக்கின்றது.
பர்மியத் தேசிய வாதிகளின் நாடு பிளவுபட்டுப் போகலாம் என்ற பயம் அடிப்படையில் பர்மாவில் நிகழக்கூடிய அந்நிய ஆக்கிரமிப்பு பற்றிய பயத்துடன் இணைந்தே இருக்கின்றது.  இந்தப் பயம் காரணமாக குறிப்பாக பர்மிய இராணுவத்துள் அந்நிய அல்லது வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு அளவுக்கதிகமாகவே இருக்கிறது.
உண்மையிலும் பர்மா 1760 ல் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பில் தொடங்கி 19ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மூன்று ஆங்கிலோ பர்மியப்போர்கள் உட்பட நீடித்த ஆங்கில  ஆக்கிரமிப்புக்கள் வரையும் அந்நிய ஆக்கிரமிப்புக்களையும் சதிகளையும் சந்தித்தே வந்திருக்கிறது. மேலும் 1943 க்கும் 1945 க்கும் இடையில் நிகழ்ந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதன் வழியான சுதந்திர மறுப்பையும், 1950-51களில் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துதுறையின்(CIA) ஆதரவுடன் வடகிழக்கு பர்மாவில் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பையும் இங்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

மேற்குறித்த வரலாற்றுக் காரணிகள் தவிர பர்மாவில் நிலவி வரும் இன்னுமொரு கலாசார அடிப்படையிலான நம்பிக்கையும் அரசியல் அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமாக இருக்கிறது. மத அடிப்படையிலான இந்த எண்ணக் கருவினாலும் பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் பயனடைந்துள்ளனர் எனலாம். 
அரசியல் ரீதியான பலத்தை அல்லது தனிப்பட்ட வெற்றி ஒன்றை ஒருவர் பெறுவது என்பது அவர் தனது முற்பிறப்பில் செய்த பலன்களினால் வருவது என்ற பெளத்த மத அடிப்படையிலான எண்ணக் கரு மக்களிடம் உள்ள.பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் அடைந்திருக்கிற உயர்நிலை அவர்களது முற்பிறப்பில் செய்த பலன்களினால் கிட்டியது என்ற எண்ணம் பர்மாவில் உள்ளது. இந்த விதமான சிந்தனைகளும் இராணு ஆட்சியாளர்களை உயர்நிலையில் வைத்து மதிப்பதற்கு ஏதோ ஒருவகையில் ஏதுவாக உள்ளது எனப் பர்மியச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

பௌத்த துறவிகளின் பாத்திரம்

மேற்குறித்த எல்லா வரலாற்றுக் காரணிகளும் பர்மிய இராணுவச் சர்வாதிகாரிகளால் பர்மாவை எவ்வாறு நீடித்து ஆளமுடிகின்றது என்பதை விளக்குகின்றன.
இராணுவத் தலைவர்களுக்கு எந்தளவுக்கு மதிப்பு இருக்கின்றதோ அதே அளவுக்கு பர்மாவின் நவீனத் தலைவரான அயுங் சன் இற்கும் மக்களின் நினைவுகளில் மதிப்பு இருக்கிறது. இந்த வகையில் பர்மாவின் எதிர்கட்சித் தலைவராக அயுங் சன் சூ கீ  வந்ததொன்றும் தற்செயலானதல்ல ஏனெனில் இவர் ஆயுன் சான் கின் மகளாவார்.
உயர்ந்தவர்களை மதித்து ஏற்றுக் கொள்ளல் என்னும் எண்ணக் கருவானது பர்மாவின் புத்த துறவிகளை இராணுவஅரசுக்கெதிரான போராட்டத்தில் முன்னுக்கு கொண்டு வந்து ஈடுபடுத்துவதற்கும்  உதவியுள்ளது.
புத்த மதத்துறவிகளும் மிகஉயர் நிலையான மறுபிறப்புக்களாகக் கருதப்படுவதால் இராணுவஅரசுக்கெதிரான போராட்டத்தில் மக்களைக் தலைமை தாங்குவதற்குத் தகமையானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
புத்த துறவிகள் எது எப்படியிருப்பினும் இந்தப் பாத்திரத்தை வகிப்பதற்கு ஏன் துணிந்தார்கள் என்பது கேள்வியாகும்.
ஏனெனில் வரலாற்றில் 1885 வரைக்கோ அதற்கு முன்போ  ஒரு போதும் புத்த துறவிகள் தம்மை அரசியில் நேரடியாக ஈடுபடுத்தியிருக்கவில்லை.  1885 ல் பழைய பர்மிய அரசர்களும் புத்த சங்கமும் குறியீடான உறவைக் கொண்டிருந்தன.  அந்த உறவில் பர்மிய அரசர்கள் புத்த மடாயலங்களுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மூலம் புண்ணியத்தை வாங்கிக்கொண்டனர்.
அரசியல் ரீதியாகப் பெளத்த சங்கங்கள் மன்னர்களுக்கு ஆதரவை வழங்கியதுடன் மக்களை ஒடுக்குவதற்கும் உதவின.
பிற்பாடு மன்னராட்சி அழிக்கப்பட்டபோது பெளத்த சங்கம் தனித்து விடப்பட்டது.  மரபு வழியான அரசியற் பங்களிப்புக்கள் எதுவும் கிட்டாத நிலையிற் பெளத்த சங்கம் வெற்றிடத்துக்குள் விடப்பட்டது.  இந்த வெற்றிடத்தை இல்லாமற் செய்வதற்காகத் தற்போது பெளத்த துறவிகள் முனைப்பாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தலைப்பட்டுள்ளனர்.  குறிப்பாகத் தற்போதைய இராணுவ ஆட்சிக்கு மெளனமாக ஆதரவளிப்பவர்களாக அல்லாமல் எதிர்பவர்களாக மாறியுள்ளனர்.
1920 ற்கு கிட்டவாகப் புத்ததுறவிகள் பர்மாவின் முதலாவது பெரிய காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை உருவாக்குவதற்கு உதவிசெய்தனர்.  பர்மியக்  கூட்டமைப்பின் பொதுக் குழுவை அமைப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானது.  பின் 1920 ம் ஆண்டிற் புத்ததுறவிகள் மிகவும் ஈடுபாடான முறையில் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களிலும் பின்னர் 1930 களில் ஆயதம் தாங்கிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
1938 இல் புத்த துறவிகள் பிரித்தானிய காலனித்துவத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தைத் தகைமை தாங்கி நடாத்திய போது பொலீஸ் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்று 17 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பதாக பர்மியச் சுதந்திரப் போராட்ட வீரரான ஜெனரல் ஆயுங் சான் அரசியல்ரீதியான முனைப்பைக் கொண்டிருந்த பெளத்த துறவிகளுடன் ஐக்கிய முன்னணியை அமைத்துப் போராடியும் இருந்தார்.
அண்மைக் காலங்களில்  பர்மாவின் நீண்ட கால இராணுவ ஒடுக்கு முறைக்கு எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும்படி ஈர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் இராணுவ ஆட்சியாளர்களின் வினைத்திறன் அற்றதன்மை காரணமாக பர்மியப் பொருளாராரம் சரிந்து வருகிறமையாகும்.  இரண்டாவது காரணம் பர்மாவில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவத் தட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கத்தினால் 400,000 புத்த துறவிகளுக்கு உணவளிக்கும் திறனை மக்கள் கூட்டம் இழந்துவருவதாகும்.
ஏனெனில் பர்மியப் புத்த துறவிகள் தமது உணவை மக்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் தமது உணவுத் தேவைகளுக்காக உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடவும் கூடாது என அவர்களது சமயக் கோட்பாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே பெளத்த துறவிகள் அண்மைக்காலங்களில் ஆத்மார்த்த மற்றும் பொருளாதாரக் காரணிகளால் தமது  கர்மாவினால் பெறப்பட்ட உயர்ந்த நிலையை மக்களின் எதிர்பார்ப்பும் விருப்பும் காரணமாக இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மொழிபெயர்ப்பும் குறிப்பும்: தேவ அபிரா
05/09/2011


நாங்கள் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப்போலக்கொல்வோம்

நாங்கள் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப்போலக்கொல்வோம்


மனிதத்தன்மைகளுக்கு அப்பாற்பட்ட இந்தச் சித்திரவதைகளை அவர்கள் என்மீது புரிவதைவிட என்னை அவர்கள் கொன்றுவிட்டிருக்கலாம் என உணர்ந்தேன்.  அந்தக்காலத்துக்கு-நான் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருந்த அந்தக்காலத்துக்கு திரும்பிச் செல்வது அன்றைக்கு நான் அனுபவித்த எல்லா வேதனைகளையும் மீள அனுபவிப்பது போல் இருக்கிறது.  நான் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட அந்த நாள் என் நினைவுகளில் ஒரு எரிகாயமாகப் படிந்திருக்கிறது.  அது என் ஆத்மாவினுள்ளும் ஊடுருவி இருக்கிறது.  என்னைக் கடத்தியவர்களின் சொற்கள் சவுக்கடிபோல என்னுள் விழுந்தன.  அன்று கேட்ட அதே சொற்களை இந்தக் கட்டுரை எழுதும்போது இப்போதும் கேட்கிறேன்.
"எதிர்காலத்தில் நீ அரசாங்கத்துக்கு எதிராகப் பேசுவாயானால் அரசு எதிர்ப்பு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவாயானால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவாயானால் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப் போலக் கொல்வோம்.  நீ எங்களுக்கும் தலைவலியாக இருக்கிறாய்.  எனவே வாயை மூடிக்கொண்டு ஒரு நாயைப் போல அடங்கி இரு.  நீ உனது வாயைத் திறந்தால் உன்னை நாங்கள் சவச்சாலைக்குத்தான் அனுப்புவோம்."
அவர்கள் எனது கால்களையும் கைகளையும் இறுக்கிக் கட்டினர் துணியினால் எனது வாயையும் அடைத்தனர்.  என்னைக் கடத்தியவர்கள் புரிந்த சித்திரவதைகளை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை;  அவற்றின் மனிதத்தன்மையற்ற பண்பை விபரிக்க முடியவில்லை.
நான் நீண்ட தாடி வைத்திருப்பது  யாவருக்கும் தெரிந்த ஒன்று.  இதுவே எனது அடையாளமாகவும் மாறிவிட்டிருந்தது.  என்னைக் கடத்தியவர்கள் எனது தாடிமயிர்களைக் கத்தரித்து எனது வாய்க்குள் திணித்ததுடன் அவற்றை எனது தொண்டைவரையும் தள்ளினர்.
பின்னர் அவர்கள் என்னை வாகனத்தின் பின்பகுதியில் பலவந்தமாகவும் முகம் குப்புறவும் தள்ளி விழுத்தி அழுத்தினர்.  நான் மேலே  கூறிய அச்சுறுத்தும் வார்த்தைகளை பின்னர் தொடர்ந்து திரும்பவும் கூறிக்கொண்டிருந்தனர். சில நிமிடங்களின் பின்பு அவர்கள் ஓடும் வாகனத்தில் இருந்து என்னை வெளியே வீதிக்கரையில் வீசினர். என்னைக் கடத்தியவர்களின் வாகனம் அவ்விடத்தை விட்டு நீங்குவதும்  எனக்குக் கேட்டது.
எனது வாயில் கட்டியிருந்த துணித்துண்டையும் கைகளில் கட்டியிருந்தவற்றையும் அறுப்பதற்காகக் கிரவல் வீதியில் உருண்டு அவற்றைத் தேய்த்தேன்.  இதனிடையே கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலும் என்னைக் கடந்து சென்ற வாகன ஒலிகளை நோக்கி உதவிக் குரல் எழுப்பினேன்.  ஆனால் எவரும் நிறுத்தவில்லை.  இறுதியாகச் சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் என்னை கண்ணுற்று என்னருகே வந்து "நீ யார்? என்ன இது..? உனக்கு என்ன நடந்தது..? எனக் கேட்டனர். 
நான் ஒரு பத்திரிகையானன் எனது பெயர் போத்தல ஜெயந்த எனக் கூறினேன்.  சிலர் என்னைக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கிய பின்னர் என்னை இங்கே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தயவுசெய்து யாராவது என்னை வைத்தியாசாலைக்கு கூட்டிச்செல்வீர்களா? எனக் கெஞ்சினேன்.
என்னைச் சுற்றிக் கூட்டம் கூடிக் கவனமாகக் கேள்விகளைக் கேட்கத்தொடங்கியபோதும் எவரும் எனது கண்கட்டை அவிழ்க்கவோ கைகால்களில் கட்டியிருந்த துணிகளை அவிழ்க்கவோ முனையவில்லை.
சில நிமிடங்கள் கழித்து முச்சக்கர வாகனச் சாரதிகளில் ஒருவர் ஓ! இவர் தொலைக்காட்சியில் தோன்றிய செய்தியாளர் எனக் கூறினார்.
என்னை அடையாளம் கண்டவுடன் என்னைச் சூழவும் நிலவிய பதட்டமான நிலை சற்று மாற்றமடைந்தது.
சகோதரரே என்ன நிகழ்ந்தது என அக்கறையான தொனியில் அந்தச் சாரதி என்னை வினவினார்.  மற்றுமொரு முச்சக்கரவாகனச்சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் காவல்துறையை அழைப்பதையும் கேட்டேன்.
இன்னுமொருவர் எனது கட்டுக்களை அவிழ்க்க முற்பட்டபோது அவரது நண்பர்கள் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு செய்வதால் அவர் பிரச்சனைக்கு உள்ளாகலாம் எனவும் காவல்துறை வரும் வரை பொறுத்திருக்கும்படியும் கூறினார்.
என்னைச் சுற்றிய கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்ததே தவிர எவரும் என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்வரவில்லை.  நானோ தாங்கமுடியாத நோவுடனும் வேதனையுடனும் இருந்தேன்.  எனது வேண்டுதலை யாராவது கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் "தயவு செய்து கேளுங்கள் உங்களை மன்றாடிக் கேட்கிறேன் தயவு செய்து என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது…  என்னை இந்த வீதிக்கரையில் சாகும்படி விட்டுவிவேண்டாம்  தயவுசெய்து! தயவுசெய்து!! ” என என்னைச் சுற்றி கூடியிருந்த கூட்டத்தினரைக் கெஞ்சிக் கேட்டேன்.  ஆனால் எனது துன்பத்தை கண்டு ரசிக்கும் குணம் கொண்ட கூட்டமாக அவர்கள் நின்றனர்.  நாட்டைப்பற்றியிருந்த  எதனைப்பற்றியும் கவலைப்படாத உணர்வு ரீதியாக  முடக்கப்பட்ட ஒரு கலாசாரத்தின் பிரிதிநிதிகளாக அவர்கள் நின்றனர்.  செயற்படுவதற்கோ என்னைக் காப்பாற்றுவதற்கோ முனையத்தயாரற்று நின்றனர்.
ஆயினும் பலமுறை மன்றாடிய பின்னர் ஒரு சிலர் முன்வந்து எனது கட்டுக்களையும் கண்கட்டையும் அவிழ்த்து விட்டனர். அவர்களில் ஒருவர் பின்வருமாறு கூறினார். பொலிஸ் வரும் எனப் பார்த்துக் கொண்டிருந்தால் எங்களுடைய கண்ணுக்கு முன்னாலேயே இந்த மனிதன் இறக்க நேரிடும்.  காவல்துறை இப்போதைக்கு வரப் போவதில்லை. முதலில் இந்த மனிதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வோம்.  காவல்துறை வந்தால் எதையாவது கூறிக் கொள்வோம்.
அப்பொழுது நான் மிகக் கடுமையாக இருமினேன்.  எனது வாய்க்குள்ளும் கொண்டைக்குள்ளும் சிக்கியிருந்த பலவந்தமாகத் திணிக்கப்பட்டிருந்த தாடிமயிர் காரணமாக அது ஏற்பட்டது.
காவல்துறையைப் பற்றிக் கவலைப்படாமல் என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப் போவதாக கூறிய முச்சக்கரவண்டிச்சாரதி என்னைத் தனது வண்டியில் ஏற்றிக் கொழும்பு பிரதான வைத்தியசாலைக்கு என்னை எடுத்துச் சென்றார்.
ஜூன் 1 2009 எனது அலுவலகத்தில் இன்னுமொரு நாள். நான் லேக்கவுஸ் குழுமத்தின் பத்திரிகைகளில் வேலை செய்துகொண்டிருந்தேன்.  இவை அரசுக்கு உடைமையானவை.  வேலை முடிந்தபின்னர் பஸ் இலக்கம் 138 இல் நுகெகொடைக்குச் சென்றேன்.  பின் அங்கிருந்து பஸ் இலக்கம் 119 இல் ஏறி அம்புல்தெனியாவை அடைந்தேன்.  வீட்டுக்குச் செல்ல முன்பு வீதியோர உணவுக் கடையில் எனது மனைவிக்கும் மகளுக்கும் இரண்டு மரக்கறி ரொட்டிகளை வாங்கியபின் எனது வீட்டைநோக்கிச் செல்லும் மாவத்தை வீதியை நோக்கிச் சென்றேன்.
எனது வீதிக்குள் இறங்கிச் சில அடிகள் தூரம் நடந்தவுடன் அந்த ஒடுக்கமான வீதியில் ஒரு வெள்ளைவான் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டேன். வெள்ளைவான் என்பது கொழும்புப் பிரதேசத்தில் எதிர்க்கருத்துக் கொண்ட பத்திரிகையாளர்களையும்  செயற்பாட்டாளர்களையும் அச்சத்துக்குள்ளாக்கி வேட்டையாடும் குறியீடாகவே மாறிவிட்டிருந்தது.   நான் சென்றுகொண்டிருந்த வீதி ஒடுக்கமானதென்பதால்  வெள்ளைவான் நிறுத்தப்பட்டிருந்த வெளியில் ஒருவர் மட்டுமே செல்லக் கூடியளவு இடைவெளியே இருந்தது.  நான் அந்த ஒடுங்கிய பகுதியை அடைந்த போது வெள்ளை வானின் வழுக்கிச் செல்லும் பின்கதவு சடுதியாகத் திறந்தது. சில காடையர்கள் என்னை பலவந்தமாக வானுக்குள் உள் இழுத்தனர்.
அதுவரைக்கும் கால்நடையாகவும் என் பின்னே இருவர் தொடர்ந்து வந்திருந்ததையும் நான் தெரிந்திருக்கவில்லை.  அவர்களும் சேர்ந்தே என்னைப் பின்னிருந்து தள்ளி வானுக்குள் வீழ்த்தியிருந்தனர்.  பின்னர் எல்லோருமாகச்சேர்ந்து அந்தக்குற்றச்செயலை ஆரம்பித்தனர்.
திரும்பி யோசிக்கும் பொது அந்த வானின் பின்பகுதியில் ஒரு இருக்கையே இருந்தது ஞாபகம் வருகிற‌து.  அவர்கள் வானின் தரையில் என்னைத் தள்ளி வீழ்த்தி என் கைகளையும் கால்களையும் கட்டி அழுத்தி என் கண்களையும் கட்டினர்.  நான் உரத்துக் கத்தினேன்.  இந்நேரத்தில் வான் வேகமாகச் செல்லத் தொடங்கிவிட்டிருந்தது.  நானோ உரத்துக் கத்திக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள் கேலி செய்யும் தொனியில் "நன்றாகக் கத்து… உனது சத்தம் ஒருவருக்கும் கேட்காது... ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு இப்படித்தானே உரத்துக் கத்தினாய்...  அது உனக்குப் பழக்கம் தானே..." எனக்கூறினர்.
இப்பொழுது அவர்கள் பொல்லுகளினால் எனது காலில் தாக்கத்தொடங்கியிருந்தனர்.  அது தந்த வலியினால் நான் கதறிய போது அவர்கள் எனது வாயைத் துணித்துண்டுகளால் அடைத்துக்கட்டினார்கள்.
வானுக்குள் இருந்த இன்னுமொருவன் "இந்த அடிகளால் இவனை உடைக்க முடியாது. இதனை இவனது கால்களின் கீழே வைத்து மீண்டும் கால்களைத் தாக்கு அப்பொழுதான் இவன் உறுதியை உடைக்கமுடியும்" எனக் கூறினான். 
நான் எனது கால்களின் கீழே மரத்தினால் ஆன ஏதோ ஒன்று வைக்கப்படுவதை உணர்ந்தேன். பின்னர் மீண்டும் அவர்கள் பொல்லுகளினால் எனது கால்களைத்தாக்கினார்கள்.  எனது கால்களைத் தாக்கிய கடும் கொதிப்பை நான் என் சுயநினைவை இழந்திருந்த போதும் உணர்ந்தேன்.  அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் கனவில் நடந்தவைகள் போல இருக்கின்றன.
எனது தாடி வெட்டப்பட்டு எனது வாயை அடைத்திருந்த துணி அகற்றப்பட்டு தடித்த தாடி மயிர்கள் என் வாய்க்குள் திணிக்கப்பட்டன.  பின்னர் மீண்டும் எனது வாய் துணியினால் இறுக்கி மூடப்பட்டுக் கட்டப்பட்டது.  அவர்கள்  எனது மற்றக் காலையும் சேர்த்துப் பொல்லுகளால் மாறிமாறித் தாக்கினார்கள்.
திடீரென எனது கால்கள் எரிவது போன்ற நோ தோன்றியது.  அந்த நோ என்னை மீண்டும் சுய நினைவுக்குக் கொண்டு வந்தது.
இதனை நன்றாக ஞாபகம் வைத்திரு...!
நீ எதிர்காலத்தில்...
என் உடல் எங்கும் குளிர்ந்த திரவம் ஊற்றப்பட்டதாகவும் அப்பொழுது உணர்ந்தேன்.  அவர்கள் என்மீது பெற்றோலை ஊற்றி எரிக்கப்போவதாக நினைத்தேன்.  ஆனால் அப்படி நடக்கவில்லை. 
காலை 7.30 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.  6 அல்லது 7 பேர் கொண்ட வைத்திய அதிகாரிகளின் குழு ஒன்று மிகுந்த கவனமுடன் குறைந்த நோவைத் தரக்கூடிய முறையில் எனது தொண்டைக்குள்ளும் வாய்க்குள்ளும் சிக்கியிருந்த மயிர்களை அகற்றினர்.  ஏனேனில் எனது சுவாசப் பாதையை துப்பரவு செய்வது முக்கியமானதாக இருந்தது.  எனது இடது கால் மிக மோசமாக முறிந்திருந்ததுடன் அவற்றை இணைப்பதற்கு சத்திரசிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது.  எனது மற்றைய காலில் முறிவு எதுவும் இல்லாதபோதும் கடுமையான கண்டல் காயங்கள் இருந்தன.  எனவே அந்தக் காலைக் கட்டுத்துணிகளால் முழுவதுமாகக் கட்டவேண்டியும் இருந்தது.
நான் கொடூரமாகத் தாக்கப்பட்டதன் காரணமாக எனது அடிவயிறும் சிறுநீரகப் பாதையும் சரியாக வேலை செய்யவில்லை.  சிறுநீரை அகற்றுவதற்கு செயற்கை இறப்பர்க்குழாய் பொருத்த வேண்டியிருந்தது.  29 நாட்கள் நான் விபத்துச் சிகிச்சைப்பிரிவில் இருந்தேன்.  அதன் பின்னர் 6 மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டியவனாக இருந்தேன்.
வைத்திய சாலையில் இருந்து மீண்டுவந்து  இரண்டு மாதங்களின் பின்பு இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் (Sri Lanka Working Journalists Association (SLWJA))  மீண்டும் எனது வேலையைத் தொடங்கினேன். ஓக்ரோபர் 10ம் திகதி சிலகாலமாகக் கட்டட நிர்மாணத்தில் இருந்து பூர்த்தியாக்கப்பட்ட Sri Lanka Working Journalists Association (SLWJA)   இன் புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.
லேக் கவுஸ் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அந்த விழாவிற்கு வந்திருந்தனர். அடுத்த நாட்காலை த-ஐலன்ட், லக்பிம, திவயின, லங்காதீப  ஆகிய பத்திரிகைகள் எனது படத்துடன் திறப்புவிழாச் செய்தியை முக்கியமாக்கிப் பிரசுரித்திருந்தன. இது மீண்டும் எனக்கு ஆபத்தான ஒரு பிரபல்யத்தைத் தந்துவிட்டிருந்தது.
மறுநாள் மீண்டும் எனக்கு தொலைபேசி மூலம் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது.  தொலைபேசி அழைப்பை எடுத்தவர்களின் எண் மறைக்கப்பட்டிருந்தது. "ஆக நீ மீண்டும் தொடங்கிவிட்டாய் இல்லையா?  ஒரு நாயைப் போல அடங்கிக் கிடக்கும் படி கூறினோமா இல்லையா?  பொறுத்திருந்து பார் உனக்கு என்ன நடக்கிறது"என அந்தக் குரல் பயமுறுத்தியது. இது நடந்து சில நாட்களின் பின்பு லங்கா நியூஸ் பேப்பரின் பிரதம ஆசிரியரான சந்தன சிறிமல்வத்த கடத்தப்பட்டார்.  பிற்பாடு அவர்  CID இனால் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச்சம்பவம்  இக் கடத்தலின் பின்னணியில் அரசே இருந்ததை உறுதிப்படுத்தியது. ஒரு மனித உரிமைவாதியான நான்   எனக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அதிகநாள் ஆகியிருக்காத  போதும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க தயங்கவில்லை.
எனது இந்த நடத்தை எனது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் பாரமானதாகவும் கஸ்டதானதாகவும் இருந்தது. ஆனால் நான் இந்தப் பாதையில் முன்செல்லவே விரும்பினேன்.  எனது நாட்டில் பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்திற்காகப் போராடவே விரும்பினேன்.  இதையெல்லாம் விட்டுவிட்டு வெளியேறி வெளிநாடொன்றுக்குச் செல்லும் முடிவை எடுப்பது என்பது எந்தச் சூழ்நிலையிலும் கடுமையானதாகவே இருந்தது.
இன்றைக்கு ராஜபக்ச குடும்ப அரசின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற எனைய‌ பத்திரிகையாளர்களுக்கும் கூட இவ்வாறுதான் கடினமாக இருந்திருக்கும்.
எனது காயங்களோ இன்னமும் முழுமையாக ஆறவில்லை.  எனவே பிலியந்தலையில் இருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு அடிக்கடி பயணம் செய்யவேண்டியே இருந்தது.
ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் இன்னும் மோசமான ஆபத்தையோ மரணத்தையோ அல்லது இதுவரை அனுபவித்த சித்திரவதைகளைவிட மோசமான சித்திரவதைகளையோ அனுபவிக்க நேரிடலாமென்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.
பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் அரசு நசித்துக் கொண்டிருக்கும் போது அடங்கி மெளனமாக இருப்பது எனது தன்னுணர்வுக்கும் பிரக்ஞைக்கும் ஏற்புடைய விடையமல்ல.
 அதேவேளை இந்த நாட்டில் உயிர் வாழ வேண்டும என்றால் நீ உனது ஆத்மாவை ராசபக்ச அரசுக்கு விற்கவேண்டும்.  நீ உனது சுய மரியாதையையும் கொள்கைகளையும் ராசபக்சவின் கோவிற் சந்நிதானத்தில் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
நானோ என் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு நீங்கினேன்….

மொழிபெயர்ப்பு: தேவ அபிரா
நன்றி:http://www.lankaindependent.com/2011/06/%E2%80%9Cwe-will-hunt-you-down-and-kill-you-like-a-dog%E2%80%9D/