பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...
“நுண்ணிய இதயம்;பிரபஞ்சத்தின் கரு;காலத்தின் உடல் ;
விடுதலை என்று பெயர் கொண்டது
எங்கள் நிலத்திலும் மனத்திலும்
படர்ந்திட மனம் கொண்டது
ஆழியின் துயர் கொண்டோம்
போரின் பழி கொண்டோம்
ஆயினும் வாழ்தலின் விருப்புண்டு
மனம் திறந்தோம்…..”
போருக்கு பிந்திய
சூழலைத் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும்
விதத்தைக்
காணும் போது துயரமே
எஞ்சுகிறது. சிங்களப் பேரினவாதத்தின்
மீது எல்லாப்
பழிகளையும்
போட்டுவிட்டுத்
தமிழ்ச்சமூகம்
“சிவனே” என்று
போய்க் கொண்டிருக்கிறது.
உலக வரலாற்றில்
சமூகங்கள்
நெருக்கடிக்குள்ளாகும்
போது அவற்றை அவை எப்படியெல்லாம் எதிர்கொள்கின்றன
என்பதைக்
கவனிக்கும்
போது தமிழ்ச் சமூகமான
நாங்கள் எந்தளவுக்குப் பலவீனமாக
இருக்கிறோம்
என்பது புரிகிறது.
ஒடுக்குமுறைக்குள்ளாகிற ஒரு இனம் தனது
விடுதலையைக்
கோரி நிற்கிறபோது தனது
இனத்துக்குள்
இருக்கிற
ஒடுக்குமுறை
அம்சங்களையும்
கவனத்துக்கெடுத்து
அதற்கெதிராகவும்
போராடவேண்டும்.
கடந்த மூன்று
தசாப்தங்களாக
நிகழ்ந்த
எங்கள் விடுதலைப் போராட்டம்
உண்மையிலும்
விடுதலைப்
போராட்டமாகவா
இருந்தது?
போராட்டம் மக்களை ஒன்றிணைக்கும்
உண்மையாக ஒன்றிணைக்கும்.
ஒன்றிணைத்ததா??
இல்லையே!!
எங்கள் சமூகம் சுக்கு நூறாக
உடைந்து நிற்பதைக் காணும் போது புரிகிறது.
புரிகிறதா??
வெறுமனே சிங்கள
இராணுவத்திற்கெதிரான
இராணுவப்
போராட்டமாக
மாறி அழிந்து போன
தமிழீழ விடுதலைப் போராட்டம்
எங்களை ஒன்றிணைத்து இருக்கவில்லை
என்பதைக்
காண்கிறோம்.
நாங்கள்
· சாதிகளாகப் பிளவுண்டு
கிடக்கிறோம்.
· பிரதேசங்களாகப் பிளவுண்டு
கிடக்கிறோம்.
· சனநாயகச் சிந்தனையற்ற
பிரபுத்துவ
அதிகாரச்
சிந்தனை கொண்ட சமூக
அரசியல் கட்டமைப்புக்களுக்குள் சிதைந்து
கிடக்கிறோம்
· பெண்களை ஒடுக்கிக்
கொண்டிருக்கிறோம்.
இவை பற்றி
இனியும் பேசாது இருக்க
முடியாது.
நான் மேலே
சொன்ன விடையங்கள் தொடர்பாகப்
பல நடைமுறை உதாரணங்களைக்
கூறமுடியும். சமூகத்தில்
அக்கறை கொண்ட எல்லோரும்
நாளாந்தம்
அறியவரும்
உதாரணங்களைக் கூறிக் கூறிக் கவலை கொள்கிறார்கள். இவை தொடர்பாக
அன்றாடம்
பல செய்திகளை வாசிக்கிறோம். ஆனால் அவை
செய்திகளாகவே
மடிந்து விடுகின்றன.
இந்தக் கட்டுரையின்
முழு நோக்கமும் எங்களது
உணர்வுத்
தளத்தைக்
கேள்விக்குட்படுத்துவதாகும். ஏனெனில்
மனிதர்கள்
மாறாமல் மாற்றங்கள் நிகழப்
போவதில்லை.
போராட்டம் எழுச்சியுற்றிருந்த காலங்களின்
ஆரம்பத்தில்
இவை தொடர்பான உரையாடல்கள்
ஆரம்பித்திருந்தன. ஆனால் இவை
காலப்போக்கில்
அமுங்கிப்
போயின.
போர்ப் பங்கேற்புக்காக
எல்லாச் சாதிப் பிரிவுகளுக்குள்ளும் இருந்து
ஆண்களும்
பெண்களும்
இயக்கங்களுக்குள்
உள்வாங்கப்பட்டனர்.
பிற்பாடு விடுதலைப்
புலிகளின்
இராணுவக்
கட்டமைப்புக்குள்
இருக்கக்
கூடிய மேலிருந்து வருகிற
அதிகாரத்துக்கு
அனைவரும்
கீழ்ப்படிந்து
நடக்க வேண்டியிருந்தது. பொதுவான
விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால்
மக்கள் தழுவியோ கட்சி
தழுவியோ இராணுவ அணிகளுக்குள்ளோ
சாதியம் பெண்ணியம் போன்ற
விடையங்கள்
தொடர்பாக
முறையான கல்வியூட்டல் நிகழவில்லை. சாதியத்தின்
தோற்றம் தொழிற்படுதன்மை அதனால்
அடிப்படை
மனித உரிமைகளுக்கு ஏற்படக்கூடிய
கேடு போன்ற விடையங்கள்
குறித்தெல்லாம்
அங்கு பேசப்படவில்லை.
எல்லாவற்றையும் விடத்
துன்பமானது சாதியத்தின் குரூரத்தினால்
பாதிக்கப்படும்
ஒவ்வொரு தனிமனிதரினது துன்பமும்
தாழ்வுச்சிக்கலும்
சிங்கள இராணுவத்திடம் அகப்பட்டுச்
சித்திரவதைப்பட்ட
தமிழ்ப்போராளி
ஒருவரின்
துன்பத்திற்கு
எந்த விதத்திலும் குறைந்ததல்ல
என்பது கூட உணர்த்தப்படவில்லை.
தான் உயர்ந்தசாதி
என நினைத்துக்கொள்கிற ஒவ்வொருவருக்கும்
தான் தாழ்த்தப்பட்ட வகுப்பில்
பிறந்திருந்தால்
எதனையெல்லாம்
அனுபவிக்க
நேர்ந்திருக்கும்
எனச் சிந்தித்துப்பார்க்க முடியாதிருக்கிறதே.
சக மனிதனின்
துன்பத்தை
உணரமுடியாத
பிண்டங்களாக
எங்களை எது ஆக்கியது.
இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சாதியத்துக்கெதிரான போராட்டம்
தமிழீழ விடுதலைப்போராளிகளால் கிடப்பில்
போடப்பட்டது
தான் மிச்சம்.
அராபிய ஆபிரிக்க நாடுகளில் காணப்படுகிற மரபுவழிக்குலக்குழுக்களினுள்ளும் எமது
சாதியத்திற்கொப்பான
ஒடுக்குமுறைகள்
காணப்படுகிறன. சாதியத்தின் உண்மையான
தோற்றுவாய்
என்னவென்பதில்
தெளிவுகள்
இல்லை. ஆனால் இந்திய
கண்டத்துள்
கிறிஸ்துவுக்கு
முன் 500 ஆண்டுகளுக்கு முன்
நுளைந்த ஆரியர்கள் சாதிப்பிரிவினையைத் தோற்றுவித்ததாகக்
கூறப்படுகிறது.பின்னர் இந்து
தத்துவங்கள்
இவற்றை உள்வாங்கிகொண்டதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறெனினும் யுகங்களாக
வேரூன்றி
நிற்கும்
இந்த அசுரனுக்கெதிரான போர்
வன்னிப்போரிலும்
கடினமானது.
முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த
நாடுகளில்
தனிமனிதர்களின்
உள்ளுறை படைப்பாற்றல்களையும் வேலைச்
சக்திகளையும்
முற்றுமுழுதாகப்
பயன்படுத்தும் நோக்கமே முதன்மைப்படுத்தப்படுகிறது. (இந்த நோக்கத்தின்
அடித்தளம்
அதிக லாபமீட்டலும் சுரண்டலுமாக
இருக்கிறது
என்பது வேறுகதை)
இங்கு வேலை என்பது
சீவனோபாயத்திற்கான
ஒரு வழியே தவிர
அவர்களின்
அடையாளம்
அல்ல.
தனிமனிதர்கள் தமது
திறமை, அறிவு, உடல்
உள வினைத்திறனைப் பொறுத்து
வேலைகளைத்
தேடிக்கொள்ளலாமே
தவிர சாதி அடிப்படையில்
இல்லை.
தமது மகன்
அல்லது மகள் என்ன
சாதியைச்
சேர்ந்தவரைத்
திருமணம்
செய்கிறார்
அல்லது எந்த சாதியைச்
சேர்ந்தவருடன்
சேர்ந்து
வாழ்கிறார்
தனது வீட்டுக்கருகில் குடியேறுகிற
வெளிநாட்டுக்காரன்
என்ன சாதி என்றெல்லாம்
அவர்கள் விசாரிப்பதில்லை.
ஆனால் நாங்கள்
செய்கிறோம்.
ஈழத்தில் வாழ்கின்ற
தமிழர்களை
விடுங்கள். புலம்
பெயர்ந்த
தமிழர்கள் தாங்கள்
வாழும் நாடுகளில் உள்ள
சனநாயகத்
தன்மையை முற்போக்கான அம்சங்களை
உள்வாங்க
மறுத்து தமது அடுத்த
சந்ததியையும்
அதே மூடிய சிந்தனைக்குள்
வளர்த்து
வருகிறார்களே! ஏன்?
தமிழர்களுக்குள் ஊறிப்போயிருக்கின்ற இன்னுமொரு
விடையம் பிரதேசவாதம். யாழ்ப்பாணத்தான்,
மட்டக்களப்பான்,
தோட்டக்காட்டான்
என்ற பாகுபாடுகளுக்குள் சமூகம்
சிதைந்து
கிடக்கின்றது.
ஒருவர் தான்
பிறந்த ஊர் பற்றியோ
மாவட்டம் பற்றியோ அல்லது மாகாணம்
பற்றியோ பெருமையுடன் இருப்பதில்
தவறில்லை. ஆனால்
அதுவே அவரது தகுதியாக
அந்தஸ்தாக
மாறிவிடுவதுதான்
வியப்பானது.
இலங்கையின் ஒவ்வொரு
பிரதேசமும்
தமக்கே உரிய புவியியல்
பொருளாதாரப்
பண்புகளைக்
கொண்டுள்ளன. புவியியல்
மற்றும் பொருளாதாரக் காரணிகளால்
மட்டும் வேறுபடுகின்ற பிரதேசங்களுக்கிடையில் உணர்வுத்
தளத்தில்
ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு
ஏற்படுத்திக்
கொள்கிறார்கள்
என்பது இன்னமும் புரியாத
புதிராகவே
உள்ளது.
பிரித்தானியக் காலனித்துவ
காலத்தில்
யாழ்ப்பாணத்தவர்கள்
நிர்வாக அலகுகளில் கொண்டிருந்த
மேலாதிக்கத்தின்
காரணமாகத்
தோன்றிய யாழ்ப்பாண மையவாதம்
இனியும் நீடித்திருப்பது பெருந்தவறாகும்.
விடுதலைப்புலிகள் இருந்த
காலகட்டத்தில்
கூட எந்த மாவட்டத்தைச்
சேர்ந்த போராளிகள் அதிகமாக
மரணித்தார்கள்
என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்றிருந்தன.
வளப்பங்கீடு,
அபிவிருத்தி
போன்றவற்றில்
பிரதேசங்களிடையே
பாகுபாடு
காட்டப்படுவது
மட்டுமல்ல
பிரதேச வாழ் மக்களிடையேயான
சமூக உறவுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைப்
பற்றிப் பேசுவோம்.
படலையைத் திறந்து
வெளியே வந்து ஆயுதம்
தூக்குங்கள் எனக்
கூவி அழைத்து வந்த
ஆயிரக்கணக்கான
பெண்களை இன்றைக்கு அனாதைகளாகத் தெருவில் விட்டிருக்கிறோம். அவர்கள்
இன்று சமூக பொருளாதாரப்
பாதுகாப்புகள்
எதுவுமின்றி
தவித்துப்
போய் நிற்கிறார்கள்.
சரி இது
அசாதாரணமான
நிலைமைகளால்
தோன்றிய அசாதாரணமான சமூக
நிலையென்று
சாட்டுச்சொல்லித் தப்பித்துக்கொள்வோம்.ஆனால் அவ்வாறு
அமைப்புகளுக்குள்
செல்லாது
இருந்த சாதாரணமான, தமிழ்க்குடும்பங்களுக்குள்ளும் வெளியிலும்
உள்ள பெண்களின் நிலை
எப்படி இருக்கிறது?
அப்பாவுக்கும் அண்ணனுக்கும்
தம்பிக்கும்
பின் கணவனுக்கும் கட்டுப்பட்டு
நடக்கிற நடக்கவேண்டிய பெண்கள்
தொகையே அதிகம்.
சுதந்திரமான முறையில்
தமது உள்ளுறை படைப்பாற்றல்களை
வெளிக்கொண்டுவருவதற்கு
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
ஒரே சந்தர்ப்பம் இருக்கிற
சமூகத்தை
எப்பொழுது
நாங்கள் உருவாக்கப் போகிறோம்.
தனது நகர்வுத்தெரிவில்,
நுகர்வுத்தெரிவில்,
கல்வித்தெரிவில்,
தொழில்தெரிவில், நட்புத்தெரிவில், வாழ்வுத்தெரிவில்
பெண்ணுக்கு
இருக்க வேண்டிய சுதந்திரத்தை
தமிழர்களாகிய
நாங்கள் எப்படி உறுதி
செய்யப் போகிறோம்?
பெண் என்றால்
இப்படித்தான்
இருக்க வேண்டும் என்கிற
படிமத்தை
ஏன் சிறுவயதில் இருந்தே
ஊட்டி வளர்க்கிறோம்?
ஏன் கணவனுக்கும்
மனைவிக்கும்
இடையில் உண்மையான சம
அந்தஸ்து
மிகுந்த பரஸ்பர மதிப்பு
மிகுந்த உரையாடல் இருப்பதில்லை.
இவற்றுக்கான அடித்தளத்தை
இடுவதற்கு
தமிழீழம்தான்
தேவையா என்ன?
எமது சமூகத்தில்
இருக்கிற
இன்னுமொரு
பேசாப் பொருள் பாலியல்
உணர்வுகள். ஆண் பெண் உறவுக்கிடையில்
கணிசமான பிரச்சினைகளைக் கொண்டு
வரக்கூடிய
பாலியல் உணர்வுகள் பற்றிய
புரிதலின்மை
பற்றி இனியும் பேசாதிருப்பது
நல்லதல்ல.
பெண்களைப் பாலியல்
போகப்பொருட்களாக, அழகுபதுமைகளாகப் பார்க்கிற
சிந்தனை முறையில் தகர்வு
ஏற்படவேண்டும்.
ஈழப்பகுதியில் அதிகரித்து
வருகிற சிறுவயதுக்கர்ப்பம்தரிப்புகளை அவதானிக்கும் போது
பாலியற்கல்வி
இளம் சமூகத்திற்கு அவசியமாவது
அறியப்படுகிறது.
பருவத்திற்கு வரும்
ஆணோ பெண்ணோ தம்மை
அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த அறிதல் பயணம்
முறையான உரையாடல்களினாலும் அறிவூட்டல்களினாலும் வழிநடத்தப்படவேண்டுமே தவிர
மிரட்டல்களினாலோ
கடுமையான
கட்டுப்பாடுகளினாலோ
அல்ல.
இளைய சமூகத்தின்
உணர்வுகளைத்
தூண்டக்கூடிய
சகல வகையான விம்பங்களையும்
மொழியையும்
தாங்கியே
அனேகமான ஊடகங்கள் வெளிவருகின்றன.
இணையம் கட்டற்ற
உலகத்தை எங்கள் முன்
வைத்திருக்கிறது. எதை எடுத்துக்கொள்வது
எதை விடுவது என்கிற
தெளிவை தொடர்ச்சியான குடும்பநிலை
மற்றும் பாடசாலைநிலைக் கல்வியூட்டல்களினாலேயே அடைய
முடியும்.
திருமணத்திற்கு முன்னதாக
உணர்வெழுச்சியினாலோ, பிழையான வழிநடத்துதலினாலோ,
வற்புறுத்தலினாலோ
அல்லது வன்முறையினாலோ பாலுறவில்
ஈடுபடுகிற
அல்லது ஈடுபடுத்தப்படுகிற பெண்ணைக்
கற்பிழந்தவள்
எனக் கூறி ஒதுக்குகிற
கலாச்சாரம்
மாறவேண்டும்.
உடலுறவு கொள்வதனால்
யாரும் எதனையும் இழந்து
விடுவதில்லை. அது பாதுகாப்பற்ற முறையில்
நிகழும் போது நோய்வாய்படும்
சந்தர்ப்பம்
அதிகரிக்கிறதே
தவிர வேறு எதுவும்
நிகழ்வதில்லை.
இவை பற்றியும்
பேசுவோம்.
சிறுவர்களையும் சிறுமிகளையும்
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்துகிற
மேற்குலக
சுற்றுலாப்
பயணிகளைப்
பற்றிப் பேசுகிறோம் ஆனால்
எமது கிராமங்களில் சிறுவர்களும்
சிறுமிகளும்
பெரியவர்களினால் பாலியல்
தொந்தரவுகளுக்கு
ஆளாவதைக்கண்டுகொள்வதில்லை.
இதனையும் பேசுவோம்.
தமது உணர்வுகளுக்கும்
தவிப்புக்களுக்கும்
வடிகால் இல்லாது தவிக்கும்
ஒருபாலுறவுக்காரர்களைப்
பற்றியும்
பேசுவோம். உயிரியல்
ரீதியாக அல்லது நரம்பியல்
ரீதியாக அல்லது மரபணு
ரீதியாக மாற்றங்களைக் கொண்டிருக்கிற
இவர்களின்
உணர்வுகளுக்கு
உரிய சனநாயக உரிமையை
வழங்குவது
அவசியம்.
என்னுடன் வேலை
செய்யும்
மூன்று பெண்களும் ஒரு
ஆணும் ஒருபாலுறவுக்காரர்கள். பழகுவதற்கும் நட்புக்கொள்வதற்கும் அருமையான
மனிதர்களான
இவர்கள் சாதாரண மனிதர்களிடத்தில்
இருந்து எந்த வகையிலும்
வேறுபட்டவர்கள்
அல்ல.
இவர்கள் சேர்ந்துவாழ்கிறார்கள் அல்லது
திருமணம்
செய்திருக்கிறார்கள். இவர்கள் தாங்கள்
ஒருபாலுறவுக்காரர்கள்
என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொள்கிறார்கள். செயற்கையான
கருத்தரிப்பு
மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் அல்லது
குழந்தைகளைத்
தத்தெடுத்துக்கொள்கிறார்கள்.அழகான குடும்பமாகவிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள்
தங்களுக்கு
இரண்டு அம்மாக்கள் அல்லது
இரண்டு அப்பாக்கள் இருப்பது
குறித்து
அச்சமடைவதில்லை.
பாடசாலைகளில் மற்றைய
குழந்தைகளும்
இந்தக் குழந்தைகளும் எந்த
வேறுபாடுகளும்
இன்றி பழகக்கூடிய உணர்வுச்
சூழ்நிலையை
ஏற்படுத்துமளவுக்கு
ஆசிரியர்களும்
வளர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
சமூகத்தின் எல்லா
மட்டங்களிலும்
எல்லாத் தொழில்களிலும் ஒருபாலுறவுக்காரர்கள் இருக்கிறார்கள்.
அண்மையில் ஒரு
நிறுவனம்
தனது நிர்வாகத்தலைமைக்கு ஒருபாலுறவுக்காரரை விண்ணப்பிக்கும்
படி விளம்பரம் செய்திருந்தது. இப்படியொரு புரிந்துணர்வு
மிக்க சமூகக்கட்டமைப்பை நாங்களும்
ஏன் அடையமுடியாது. சிந்திப்போம். இது மேலைத்தேச
மோகமல்ல. அடிப்படை மனித
உரிமைபற்றிய
விழிப்புணர்வு.
இதுபற்றியும் பேசுவோம்.
பிள்ளைகளை அடித்து
வளர்க்கிற
கல்விமுறையை, மாணவர்களின் உள்ளுறை
படைப்பாற்றலை
மழுங்கடிக்கும்
கல்விமுறையைக்
கேள்விக்குட்படுத்துவோம்.
ஒரு நாட்டின் கல்வி முறைமையை, கொள்கையை தீர்மானிப்பது
அரசாங்கமாகும். சிங்கள மேலாதிக்க
அரசு முற்போக்கான கல்வித்திட்டத்தை
ஒரு போதும் முன்வைக்காது
என்ற போதிலும்
எமது கல்வி
அதிகாரிகளும்
ஆசிரியர்களும்
இருக்கிற
சாத்தியங்களுக்குள்
சனநாயகப்பண்பு
மிக்க உரையாடலும் பகிர்தலும்
நிறைந்த கற்கைச் சூழலை
பாடசாலைகளில்
கொண்டுவர
முடியாதா
என்ன.
எங்களது அதிகாரிகளுக்குத்
தேவையானது
அதிகாரமும்
அதனால் அனுபவிக்க கூடிய
வசதிகளும்
மட்டுமே. அதனைப் பேணுவதற்கு
மட்டுமே முயல்வோர்களாக எங்களது
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும்
உள்ளனர்.
நாங்கள் போராடியது
அதிகாரத்தை
அடைவதற்கே
தவிர விடுதலையை அடைவதற்கில்லை. எங்கள் மனிதத்தன்மையை
மூடி நிற்கும் கவசங்களை
அறுக்கப்
பேராடவில்லை
நாங்கள்.
அறுபதாயிரம் பேரைக்
கொலை செய்த சிங்கள
மேலாதிக்கவாத
அரசைத் தண்டிக்க விரும்புகிற
நாங்கள் சாதியின் பேராலும் பிரதேசத்தின்
பேராலும்
பாலியல் வேறுபாட்டினாலும் தினம்
தினம் இலட்சக்கணக்கான ஆத்மாக்களைக்
கொலை செய்து கொண்டிருக்கிறோமே
அதைப்பற்றியும்
பேசுவோம்.
உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும்
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
நிறைந்து நிற்கும் அதிகார உணர்வைப் பற்றிப் பேசுவோம்
கருத்து ரீதியான முரண்பாடுகளுக்கு
வன்முறையை நாடுகிற சிந்தனையைப் பேசுவோம்
சகமனிதனின் கருத்தை
உள்வாங்கப் பழகுவோம்
உள்ளத்தில் இருந்து பேசப்பழகுவோம்
உரையாடப் பழகுவோம்.
எங்களை எந்த ஒடுக்கு முறையையும்
எதிர்த்து நிற்கும் பலத்தை இது தரும்.
தேவ அபிரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக