பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

யாழ்ப்பாணத்தில் பயங்கரம் மூச்சடைக்க வைக்கும் அரசியலும் பொருளாதார மறுமலர்ச்சியும்‌

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்
மூச்சடைக்க வைக்கும் அரசியலும் பொருளாதார மறுமலர்ச்சியும்‌



திட்டமிடப்பட்ட அவமானப்படுத்தல்கள் பயங்கரமான கொலைகள் ஆட்கடத்தல்கள் காணாமல் போதல் போன்றவை உண்மையிலும் சட்டமும் ஒழுங்கும் சீர் குலைந்து இருப்பதால் தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்ல. பதிலாக இவை திட்டமிடப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களைக்  கொண்ட நடவடிக்கைகளாகும்.
அண்மைக்காலங்களாக நடாத்தப்பட்டுவரும் இந்தத் தாக்குதல்களில் இரண்டு வகையான தொகுதியினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது

·         வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்.
·         சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்.

போரினால் சிதிலமடைந்த தமிழ்ப் பிரதேசங்களில் சமூக அரசியல் பொருளாதார வாழ்க்கை மீண்டும் துளிர்விடுவதற்கான அடிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேற்குறித்த இரு தொகுதியினரும் அவசியமான‌வர்களாகும்.
இராணுவ மயமாக்கலாலும் போரினாலும் இருண்டிருந்த யாழ்ப்பாணம் (இந்தச் சிறிய குடாநாட்டில் தற்போது 40,000 துருப்புக்கள் நிலைகொண்டுள்ளனர்)  மீள எழுவதற்கு, அடிப்படையான சமூக பொருளாதார நடவடிக்கைகள் அவசியமானவை.  இது அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் அவசியமாகும். இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் யுத்தகாலங்களிலும் குறிப்பாக நோர்வேயினால் வழிநடத்தப்பட்ட சமாதான கால கட்டங்களிலும் கூட மேற்குறித்தவாறான  தாக்குதல்களே நிகழ்த்தப்பட்டிருந்தன.  ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் போன்றவர்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குறிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தார்கள்.  அப்பொழுதும் இப்பொழுதும் இந்த வகையான தாக்குதல்களின் பின் துணை இராணுவக் குழுக்களும் இராணுவ புலனாய்வுக் குழுக்களும் இருந்துவருகின்றன.

ஏன் இப்பொழுது?

யாழ்ப்பாணத்தில் சமூக அசைவியக்கமும்  வர்த்தக சமூகத்தின் எழுச்சியும் அவதானிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மீண்டும் இந்த அச்சமூட்டும் நடவடிக்கைகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. தமிழ்ப் பகுதிகளில் சிங்கள ஆதிக்கம் நிறைந்த பொருளாதாரத்தை நிலைநாட்டுவதும் தனது அடியாட்களூடாக தனது அதிகாரத்தைக் கட்டி எழுப்புவதுமான ராஜபக்சவின் தந்திரோபாயமே இதற்கு அடிப்படையான காரணமாகும்.
யுத்தம் நடந்த காலங்களில் EPDP யும் TMVP யும் இலங்கை அரசின் அடியாட்களாக மாறியிருந்தன.  தற்போது இந்த அடியாட்கட்சிகளும் ராஜபக்சவின் கட்சியும் உள்ளுர் அதிகாரங்களுக்குள் நுளைய விரும்புகின்றன.
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களின் பின்பும் இலங்கை ராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றிப் பதினைந்து வருடங்கள் கடந்த பின்பும் யாழ்குடாநாடு அரச வளங்கள் எதுவும் அற்ற நிலையில் பட்டினி போடப்பட்டுள்ளது.  வழங்கப்பட்ட வளங்களும் EPDP மற்றும் அரச ஆதரவாளர்களை வலுப்படுத்த  மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.  யாழ்குடாநாட்டின் அரச அதிகாரமும் இன்றுவரையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
பெருமளவான இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் யாழ்குடாநாட்டுக்குத் திரும்பியுள்ள போதும் மீண்டும் அவர்கள் சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் வாழ அனுமதிக்கப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் அந்த மக்கள் தங்களின் சொந்த விவசாய நிலங்களில் பயிரிட்டுத் தமக்கான உணவுத் தேவையை நிறைவு செய்ய விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
உயர் பாதுகாப்பு வலயங்கள், மற்றும் தொடர்ச்சியான இராணுவ மயப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளாலும் யாழ்ப்பாணம் தவிர ஏனைய நகரங்களிலும் கிராமங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் சமூகக் கட்டமைப்புக்களின் (வைத்தியசாலைகள், பாடசாலைகள்)  வளர்ச்சியினாலும்  குடாநாட்டு மக்கள் கடுமையான விரக்திக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.


இந்த அதிருப்திகளும் விரக்திகளும் குறித்தளவில் சமூகத்தை அதற்கு எதிராக அசையவைத்துள்ளன.  பயங்கரமான வழிகளில் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சியை கொண்டுவரமுயலும் அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக மெல்லிய சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது.  அதுமட்டுமல்ல அது மிகச் சிறிய வெற்றியும் பெற்றுள்ளது.  இது ஓரளவுக்கு உள்ளுரில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக குழுக்களினாலும் சர்வதேச அழுத்தங்களாலும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை போருக்கு பின்னான சாத்தியங்களைப் பயன்படுத்த விரும்பும் தமிழ் வர்த்தக சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள தடைகளையும் வரையறைகளையும் நீக்கும் இடையறாத முயற்சிகளையும் தமிழ் வியாபார சமூகம் மேற்கொண்டு வருகிறது.
சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கும் அபிவிருத்தி அடைவதற்கும் குடாநாட்டு மக்கள் மீண்டும் மீண்டும் செய்யும் முயற்சிகளை சர்வதேச சமூகமும் குறிப்பாக இந்தியாவும் ஊக்குவிக்கின்றன.அதே நேரம் இலங்கை அரசாங்கமும் அவர்களின் இந்த முயற்சிகளை திட்டமிட்ட நிர்வாகத் தடைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தடுத்து வருகிறது.
அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் இராணுவ அரச அதிகாரங்களினால் பாதுகாக்கப்படும் சிங்கள வியாபார முயற்சிகளை யாழ் குடாநாட்டில் ஸ்தாபிக்க முயற்சிக்கிறது.  ஆளும் அரச கட்சியில் உள்ளவர்கள் அவர்களின் ஆதரவாளர்களினால் கட்டுப்படுத்தப்படும் வியாபார நடவடிக்கைகளையும் குடாநாட்டில் ஆரம்பித்துள்ளனர்.
ராஜபக்சவின் மகன் பூநகரி சங்குப்பிட்டி கடற்கடப்புப் படகுகளை சேவையில் ஈடுபடுத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமையை இங்கு குறிப்பிடலாம்.

மூலவேர்களை எரித்தல்

ஆயினும் யாழ்பாணத்தின் சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் மேற்குறித்த வழிகளில் அதிகம் சாத்தியப்படாமையினாலேயே அச்சமூட்டும் இராணுவப் பயங்கரவாதத்தை அரசு பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
அண்மைக்காலங்களில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் தமது சமூகத்தின் வளர்ச்சிக்கு நிமிர்ந்து நின்று பங்களித்த தலைவர்கள் முதலீட்டாளர்கள் அல்லது தனிநபர்களாவார்கள்.
இந்த வன்முறைகளின் உடனடி நோக்கம் மிக விரைவில் நிகழவுள்ள உள்ளுராட்சி சபைத்தேர்தலையும் சர்வசனவாக்கெடுப்பு நடவடிக்கையையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பதாகும்.
அரசினால் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக நம்பப்படுகிற இந்த அரச பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக உருவாக்கப்பட்டுள்ள அச்சமூட்டும் சமூகஉளவியல்  காரணமாக அரசுக்கு எதிரானவர்களாலும் விமர்சகர்களாலும் அர்த்தமுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்து கொள்ள முடியவில்லை.
அதுமட்டுமன்றி அரச ஆதரவாளர்களைத் தவிர ஏனையவர்கள அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தயங்கும் சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது.  இதனால் எதிர்க்கட்சிகள் தமக்குரிய வேட்பாளர்களையோ செயற்பாட்டாளர்களையோ கண்டு கொள்வது கஸ்டமாக இருக்கும்.
விமர்சனங்களையோ, எதிர்ப்புக்களையோ எந்தவிதத்திலும் கணக்கில் எடுக்காது தான்தோன்றித்தனமாகச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த முனையும் ஒரு அரசு நடாத்தும் சர்வசனவாக்கெடுப்பு வெளிப்படையானதாகவோ நம்பத்தகுந்ததாகவோ எல்லாவிதமான பிரச்சனைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு செய்யப்படும் ஒரு நடவடிக்கையாகவோ இருக்கப் போவதில்லை.
சாதாரண வாழ்க்கை நிலமை திரும்பாமலும் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து உள்ள நிலையிலும் அரசு இச் சர்வசனவாக்கெடுப்பை நடாத்தவுள்ளதொன்றும் ஆச்சரியமான விடையமல்ல.
ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள, யாழ்குடாநாடெங்கும் ஊடுருவியுள்ள அச்சவுணர்வு அரசின் மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதையோ சவால் விடுவதையோ சாத்தியமில்லாது செய்துவிட்டது.
அரசாங்கத்தின் எல்லாவிதமான தடைகளையும் மீறி விடாமுயற்சியுடன் யாழ்குடாவை உய்யவிடாது தடுக்கும் அரசின் நடவடிக்கைகளையும் வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை தரும் பொருளாதாரத்தையும் கட்டி எழுப்ப வேண்டிய நிலையில் குடாநாட்டின் எழுச்சியுற்றுவரும் மக்கள்கூட்டம் இருக்கிறது.
துணைராணுவ மற்றும் ராணுவக்குழுக்களால் உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாதம் காரணமாக யாழ்குடாநாட்டில் பரவியுள்ள அச்சஅலை அங்கு சாதாரண வாழ்க்கை நிலமைகளை வெளிக் கொண்டுவர முனையும் சர்வதேச முனைப்புக்களையும் செயலிழக்கச் செய்து வருகிறது.
2009 ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததிலிருந்து நன்கொடை வழங்கும் சர்வதேசநாடுகள் நிலையான வளர்ச்சியையும் உறுதித்தன்மையையும் போர் நிகழ்ந்த பகுதிகளில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மேம்படுத்ததுவதில் அவதானத்தைச் செலுத்திவந்ததுள்ளன.
1996 ம் ஆண்டில் இருந்து யாழ்குடா அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றபோதும் அது இன்னமும் போர் அறைந்த நகரமாக உடைந்த கட்டடங்களுடனும்  குண்டு துளைத்த சுவர்களுடனும் காட்சியளிக்கிறது.
சர்வதேச நன்கொடையாளர்கள் இரண்டு முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.  முதலாவது இடம்பெயர்ந்தவர்களை அவர்களது வாழிடங்களில் மீளக்குடியேற்றுதல்,  இரண்டாவது சமூக பொருளாதார வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது.  இவை இரண்டும் மட்டுமே தொலைநோக்கில் உண்மையான அமைதியை கொண்டுவரமுடியும் எனச் சர்வதேச நன்கொடையாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களில்  உதாரணத்திற்கு அமெரிக்கா மில்லியன் கணக்கான நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது.  மீளக் குடியேற்றம், உணவு வழங்கல் (75 மில்லியன்) மற்றும் கண்ணிவெடி அகற்றுவித்தல் (11மில்லியன்)  போன்றவற்றிற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியுள்ளது.  மேலும்  யாழ்ப்பாணத்திற்கு அருகாமையில் நீளக்காற்சட்டைகளைத் (ஜுன்ஸ்) தயாரிக்கும் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அமெரிக்கா முதலிட்டுள்ளது. அமெரிக்கப்பிரதிநிதிகள் கடந்த ஓகஸ்ற்றில் யாழ்ப்பாணப் பெண்கள்வர்த்தக சம்மேளனத்தைச் சந்தித்து வடக்கின் பொருளாதாரத்தைக் மீளக்கட்டி எழுப்பும் நம்பிக்கையை வெளியிட்டதுடன் வேலை தேடும் பெண்களுக்கு தொழில்களை வழங்கமுடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஜப்பானும் இவ்வாறான உதவிகளை வழங்கச் சம்மதித்திருந்தது.

இந்தியத் தொடர்புகள்

போரினால் பாதிப்படைந்த யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்பும் பெரும்பாலான முயற்சிகளை இந்தியாவே தத்தெடுத்துக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வடக்கை மீளக் கட்டுவதற்கும் வழமை நிலைக்குத் திருப்புவதற்கும் வழங்க வாக்களித்துள்ளது.  மீளக் குடியேறுபவர்களுக்கான 50,000 புதிய வீடுகளை அமைப்பதுடன் (ஐக்கிய நாடுகள் சபை 160,000 வீடுகள் தேவை என அறிவித்துள்ளமை இங்கே நினைவு கூரத்தக்கது)  யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் புகையிரதப்பாதை இணைப்பு ஆகியவற்றைச் செய்யப்போவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.  யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவையே தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களாகும்.
ஒரு மில்லியன் பெறுமதியான இந்தியாவின் உதவித்திட்டத்தில் தமிழ் முதலீட்டாளர்களுக்கான கடன் வழங்குதல் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையை இயக்குதல் என்பன அடங்குகின்றன.
இந்திய அரச வங்கி யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் கிளைகளைத் திறப்பதற்கு அனுமதி கோரியுள்ளது.  சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக விவசாய முயற்சிகளுக்கு கடன்களை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
போரினால் பாதிக்கப்பட்ட  பிரதேசங்களின்  நீண்டகாலப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா வடக்கு கிழக்கு பிரதேசங்களையும் தமிழ் நாட்டையும் அதன் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தையும் தொடர்புபடுத்த விரும்புகிறது.
மேலும் புதுடில்லி காங்கேசன்துறைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்யவும் நிதி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதுடன் இராமேஸ்வரம் மன்னார் கடற்போக்குவரத்தை ஆரம்பிக்கவும் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது.
கடந்த நவம்பரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.எம். கிருஸ்ணா இந்தியத் தூதூவராலயத்தின் கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்திருந்தார்.  இலங்கை அரசு இது தொடர்பாகத் தயக்கங்களைக் கொண்டிருந்த போதும் போர் முடிந்ததில் இருந்து புதுடில்லி தனது தூதூவராலயத்தின் கிளை ஒன்றை இலங்கையில் திறப்பதற்கு அழுத்தங்களை வழங்கிவந்தது.
இந்தியாவுடனான பாரம்பரியமான தொடர்புகளையும் இணைப்பையும் மீள கட்டியெழுப்பும் ஒரு முயற்சியே தமது தூதூவராலயத்தை இங்கு திறப்பதன் நோக்கமென கிருஸ்ணா அவர்கள் தெரிவித்தார். வரலாற்றில் இந்தப் பிராந்தியத்தின் வியாபார மையமான யாழ்ப்பாணத்தின் பங்கு முக்கியமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

சிங்களம் விதிக்கும் விடாப்பிடியான தடைகள்

எவ்வாறாயினும் தமிழ்ப்பகுதிகளில் வழமை நிலைமையைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் செய்துவரும் முயற்சிகளை இலங்கை விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது.
பலவருடங்களாக அரசாங்கமானது சர்வதேச உதவி நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் செயற்படுவதற்கு மிக இறுக்கமான  விதிகளை அறிவித்திருந்தது.  இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் மேலும் அதிகரித்துச் சென்றனவே தவிர குறையவில்லை.
அண்மையில் கொழும்பு,  சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளையையும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர்நிலையங்களையும் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கின் பெரும் பகுதிகளில் இருந்து வெளியேற்றிவிட்டது.
கடலில் மீன் பிடிப்பதற்கும் நிலங்களில் விவசாயம் செய்வதற்கும் உத்தியோகபூர்வமாக இருந்த‌ தடைகள் நீக்கப்பட்டிருந்த போதும் இராணுவமானது கண்மூடித்தனமாக மீண்டும் தடைகளை விதித்து வருகிறது.
சிவில் சட்டம் என்னும் முகத்திரையை அணிந்து கொண்டு அனேகமான தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவ நிர்வாகிகளே நிர்வாகத்தை நடாத்துகின்றார்கள்.  உதாரணமாக கிழக்கு மாகாணமானது முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரினாலேயே ஆளப்பட்டுவருகிறது.  கிழக்குமாகாண சபை கொண்டுவரும் எந்தத் தீர்மானங்களையும் வீட்டோ செய்யும் அதிகாரம் அவரிடம் உள்ளது.
வடக்கு கிழக்கை சாதாரண நிலைக்கு திருப்புவதற்கு சர்வதேசம் எடுக்கும் முயற்சிகளை இலங்கை அதிகரித்த அளவிலும் வெளிப்படையாகவும் எதிர்க்கத்தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் அரசானது தமிழ்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணி ஒன்றைத் தடைசெய்திருந்தது.  அது ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படிருந்த போதும் அது தடை செய்யப்படுவதாக அரசு பின்னர் அறிவித்தது.  இது தொடர்பாக அரசு வெளியிட்டிருந்த சுற்றறிக்கை பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த போதும் இதையிட்டு வந்த பத்திரிகைச் செய்திகளையும் அரசு மறுத்திருந்தது.
இலங்கை அரசானது இந்திய அரசாங்கத்தின் 50,000 வீடுகள் கட்டும் திட்டத்தையும் கூட 5,000 வீடுகளே புதிதாகக் கட்டப்படும் எனச் சுருக்கியுள்ளது.  அதே வேளை டில்லியைத் திருப்திப்படுத்தும் நோக்கில் பெருமளவான கட்டிடப்பணிகள் புதிய வீடுகளாக அமையலாம் எனவும் கூறியுள்ளது.
பொதுவில் வடக்குகிழக்கில் வழமை நிலமையைத் தூண்டும்  இந்தியாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு பின்னடித்தே வருகிறது.
உதாரணமாக யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்களின் பின்பே இந்தியத்துணைத் தூதரகமும் இந்திய வங்கிக் கிளைகளும் யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டன.
கொழும்புக்கும் தென்னிந்தியாவுக்குமிடையிலான கடற்பாதைப் பயணம், மன்னார் தென்னிந்தியக் கடற்பாதைப் பயணம் போன்றவை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்களும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படலாம்.
இந்திய விமானத்துறையினரால் அறிவிக்கப்பட்ட பலாலிவிமானத்தளப் புனரமைப்பும் கொழும்பின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கின்றது.
சர்வதேசத்தினதும் இந்தியாவினதும் வடக்கு கிழக்கில் சாதாரண நிலமைகளைக் கொண்டு வரும் முயற்சிகளை தடுக்கும் நோக்கமும் வடக்கு கிழக்கில் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குள் உள்ளது.  நவம்பர் 27ல் இந்திய வெளிநாட்டு அமைச்சர் துணைத் தூதூவராலயத்தை யாழ்ப்பாணத்தில் திறந்து விட்டுச் சென்ற பின்பு எவ்வளவு கொலைகளும் கடத்தல்களும் நடந்தன என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதிகளவில் சமூக மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்களும் முதலீட்டாளர்களுமே பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
சமூகத்திற்குப் பயப்பிராந்தியை ஊட்டும் நோக்குடன் செய்யப்பட்ட முயற்சிகளே இவை.
வழமையாக வடக்கு கிழக்கில் நிகழும் அத்துமீறல்களைச் சுயதணிக்கைக்கு உட்படுத்தும் கொழும்பு ஊடகங்கள்கூட யாழ்ப்பாணத்தில் நடந்த தொடர்ச்சியான இத்தகைய சம்பவங்களின்  செறிவுகாரணமாக அவற்றை அறிக்கையிட வேண்டிய நிலைக்கு உள்ளாகின.  ஆயினும் சர்வதேச ஊடகங்களுக்கு இவற்றை அறியும் வாய்ப்பு கடுமையாகத் தடுக்கப்பட்டிருந்தது. இக் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் முன்பதாக யாழ்ப்பாண வர்த்தகர்கள் பலர் புலிகளுக்கு உதவி செய்ததாக கூறப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.  ஆனால் எவரும் முறைப்படி குற்றம் சாட்டப்பட்டிருக்கவில்லை.
எப்போது என்று சொல்ல முடியாது நிகழக்கூடிய அரச வன்முறைகளுக்கு உள்ளுர்த்தமிழ் முதலாளிகள் அச்சப்படும் அதேவேளை இந்திய முதலீட்டாளர்கள் உள்பட வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமிழ் பிரதேசங்களைத் தவிர்க்கவே விரும்புகின்றனர்.  அதுமட்டுமன்றி உதவிவழங்கும் நாடுகளினால் நிதி அளிக்கப்படும் கட்டுமானங்களும் சாதாரண நிலைக்கு திரும்பும் முயற்சிகளும் ஸ்தம்பிதம் அடையும் நிலையிலேயே உள்ளன.
வெகு விரைவாக வளர்ந்து வரக்கூடிய அமைதிநிலையை - முதலீடுகளைச் செய்ய அபிவிருத்தியை அடைய தேவையான அமைதிநிலையை - திட்டமிட்டு உடைக்கும் நோக்கிலேயே அரசு இந்தப் பயங்கரவாதத்தை அவிழ்த்து விட்டுள்ளது.
அது வேலை செய்கிறது.

மொழிபெயர்ப்பு : தேவ அபிரா
நன்றி: http://www.srilankaguardian.org/2011/01/terror-in-jaffna-smothering-politics.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக