பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வரை,

தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வரை,
திருப்தி அடைவதற்கிடமே இல்லை



சனவரி 8 எங்கள் வீட்டில் ஒரு கொண்டாட்டநாள்.  எனது  மகனின் பிறந்தநாள் அது.  புலம் பெயர்ந்து வாழும் சோனாலி சமரசிங்கவை இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்தன்பின்பு பின்பு சனவரி 8 என்பது இன்னுமொன்றை நினைவுபடுத்தும் நாளாகவும்  மாறிவிட்டது.  2009 ம் ஆண்டு சனவரி எட்டாம் திகதியே சோனாலியின்  கணவரான லசந்த விக்கிரமசிங்க சண்டே லீடர் காரியாலயத்தை நோக்கிச் செல்லும்  போது கொழும்பில் கொல்லப்பட்டார்.
சோனாலியைச் சந்திப்பதற்கு ஏழுமாதங்களுக்கு முன்பதாக வசந்தவின் மரணத்தைப்பற்றிக் கேள்விப்பட்டதை நினைத்துப் பார்க்கிறேன்.  கேப் ரவுணில் எங்களுடைய செய்தி அறையில் ஈ மெயிலூடாக அனுப்பப்பட்டிருந்த அவரது மனதை நடுங்க வைக்கும் புதைகுழியில் இருந்து வரும் குரல்என்னும் கட்டுரையை வாசித்திருந்தோம். அவர் அந்தக் கட்டுரையில் தன் மரணத்தை முன்னறிவித்திருந்தார்.
விக்கிரமதுங்கவின் மரணம் தென்ஆபிரிக்காவில் பெரும் செய்தியாக இருக்கவில்லை.  சில பத்திரிகைகளில் துணுக்குச் செய்தியாக வந்தது.  சிலவேளை தொலைக்காட்சியிலும் ஒரு சிறு குறிப்பாகவும் வந்திருக்கக்கூடும்.
ஆனால்  அவரது மரணம் என்னை இலங்கையில் நிகழும் விடையங்கள் குறித்துத் தேடத்தூண்டியது. டிசம்பர் 2004 ல் இலங்கையில நிகழ்ந்த சுனாமி அழிவு தென் ஆபிரிக்காவில் பரந்த கவனத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இலங்கையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த உள்நாட்டுப் போரானது தென்ஆபிரிக்காவில் ஆழமானதாகவும் தொடர்ச்சியானதாகவும் அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை.
மாசசுசெற் கேம்பிரிட்ஜ் இல் உள்ள நீமன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ்  சோனாலியும் நானும் அமெரிக்காவில் சந்திக்க நேர்ந்தது.  அன்றில் இருந்து  சம்பல் மற்றும் கறி தயாரிக்கும் முறை பற்றிய குறிப்புக்களையும் எங்கள் இருவரது நாட்டுக்கும் பொதுவான கிரிக்கட் பற்றிய உரையாடல்களையும் பரிமாறுவதில் தொடங்கி எங்களுக்குள் வலிமையானதொரு நட்பும் உருவானது. எங்களது உரையாடலும் பரிமாற்றமும் இன்னும் ஆழமாகவும் சென்றது. சோனாலி இலங்கையின் சிக்கலான அரசியல் நிலமைகள் பற்றியும் பத்திரியையாளர்கள் எவ்வாறு தங்களது சொந்த வாழ்வைப் பணயம் வைத்துத் தொழிற்படுகிறார்கள் என்பது பற்றியும் எனக்கு விபரித்தார்.
ஒரு நாள் நானும் சோனாலியும் அமெரிக்க பத்திரிகையாளர் பெத் மசியும் சாலெஸ் நதியைக் கடந்து பொஸ்ரென் நகரத்துக்குள் சென்றோம்.  நாங்கள் நடந்து சென்ற வழியில் யூதர்கள் இன அழிப்புக்குள்ளானதை நினைவு படுத்தும் திறந்தவெளி நியூ இங்கிலாந்து நினைவுச் சின்னத்தை எதிர்கொண்டோம்.
அங்கே ஒளிருகின்ற ஆறு கண்ணாடித் தூபிகள் கிரானைற் தளத்தில் நிறுவப்பட்டிருந்தன‌. நாசி கிட்லரினால் உருவாக்கப்பட்டிருந்த விசவாயு அறைகளையும் மூச்சடைக்க வைக்கும் நீரோட்டமுறைகளையும் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அறைகளினூடாக நடந்து சென்றோம்.  அங்கே சுவர்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
இறுதியாக மார்ட்டின் நீமுல்லரின் இதயத்தை நடுங்க வைக்கும் -Dachau  தடுப்பு முகாம் பற்றிய கவிதையும் வாசித்தோம்.
முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
பிறகு என்னைத் தேடி வந்தாரகள்”...எனச் செல்கிறது அக்கவிதை.
அந்நினைவுச் சின்னத்தில் நாங்கள் அடைந்த உணர்வனுபவம் இதயத்தை நடுங்கவைப்பதாகவிருந்தது. சோனாலிக்கு அது தாங்கமுடியாததாக இருந்தது.
நீமுல்லரின் இதயத்தை நடுங்க வைக்கும் அந்த வரிகளைத்தான் லசந்த தனது அவர் மரணித்த மறுநாள் பிரசுரிக்கப்பட்ட இறுதி ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மோசமான நிறப்பாகுபாட்டு ஒடுக்குமுறைக்கு பின்பு வழமைக்குத் திரும்பிய தென் ஆபிரிக்கா இலங்கையுடன் ஒப்பிடும் போது எவ்வாறு உருவாகியுள்ளதென்பதை ஒரு பத்திரிகையாளராக உணர்கிறேன்.  இனப்பாகுபாட்டுக் காலத்தின் கடைசி தசாப்தத்தில்தான் நான் தென்ஆபிரிக்காவின் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்தேன்.
அக்காலத்தில் அவசரகாலச் சட்டம், அரசினால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான மனித உரிமைமீறல்கள், மற்றும் பத்திரிகையாளர்களை ஒடுக்கும் எண்ணுக்கணக்கற்ற சட்டங்கள் என்பவற்றினுடும் பலவேளைகளில் சமரசம் செய்துகொண்டு செல்கிற ஒருவழியில் தான் நான் இருந்தேன்.  பிற்பாடு தென்ஆபிரிக்காவில் ஊடக சுதந்திரத்திற்கான போராட்டம் வெற்றியடைந்தது மட்டுமன்றி 1994 இல் தோன்றிய சனநாயகச் சூழலுடன் ஊடக சுதந்திரம் அரச யாப்பிலும் உறுதி செய்யப்பட்டது.
ஆனால் சோனாலியின் நிலமையும் எங்களின் நிலைமையும் வேறானதாக இருந்தது.  அது குறித்து நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டோம்.
சோனாலி நீமன் (Nieman Foundation)  புலமைப்பரிசில்  திட்டத்தைப் புலம்பெயர்ந்த பத்திரிகையாளராகப் பெற்றுக் கொண்டுள்ளார்.  தென்ஆபிரிக்காவில்  நீடித்திருந்த நிற ஒடுக்குமுறைக்காலத்தில் ஒடுக்கு முறைகளுக்கும் தடுப்புக்காவல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகியிருந்த அனேகமான பத்திரிகையாளர்களுக்கு நீமன் புலமைப்பரிசில் திட்டம் சரணாலயமாக இருந்திருக்கிறது.
முதன்முதலாக நீமன் புலமைப்பரிசில் திட்டத்தில் மறைந்த முக்கியமான ஆபிரிக்கப் பத்திரிகையாளர் லேவிஸ் ங்கோசி (Lewis Nkosi) ஐம்பது வருடங்களின் முன்பு இணைந்திருந்தார்.
தென்ஆபிரிக்காவில் நிறப்பாகுபாடு நிகழ்ந்த காலத்தில் தாங்கள் கொண்ட கொள்கைகளுக்காகவும் அரசின் நியாயமற்ற நடைமுறைகளுக்கெதிராகவும் நேர்மையுடன் போராடிய சில பத்திரிகையாளர்கள் நீமன் நிறுவனத்தின் லூயிஸ் லியோன் (Louis Lyons Award) விருது அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த வருடம் நீமன் நிறுவனத்தின் லூயிஸ் லியோன் விருது ஏகமனதாக ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளருக்கும் லசந்த விக்கிரம சிங்க அவர்களுக்கும் இணைந்ததாக வழங்கப்பட்டது.
கடந்த யூலை மாதம் எனது புலமைப் பரிசில் திட்டம் முடிவடைந்ததும் நான் தென் ஆபிரிக்கா திரும்பிவிட்டேன். சோனாலி இன்னமும் இலங்கை அரசின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சி அமெரிக்காவிலிலேயே உள்ளார்.
இந்த வருடம் நிகழ்ந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் பற்றிய ஒரு குறிப்பைத் தவிர இங்கு தென்ஆபிரிக்காவில் பத்திரிகைகளில் இலங்கை பற்றிய குறிப்புக்கள் முழுவதுமாக மறைந்துவிட்டன. 
இங்கே நான் வேலை செய்கிற The Cape Times இல் இலங்கை பற்றிய செய்திகள் அனேகமாக வருவதில்லை. எமது பத்திரிகை சந்தையில் சர்வதேசச் செய்திகள் என்று வரும் போது ஏனைய பத்திரிகைகளுடன் போட்டி போட வேண்டிய தேவை எமக்கு இல்லாத போதும் மறுபுறத்தில் சர்வதேசச் செய்திகளுக்கு என எங்கள் பத்திரிகை ஒரு பக்கத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது என்பதுதான் யதார்த்தம். எவ்வாறெனினும் பத்திரிகையாளர்கள் வட்டத்தில் இலங்கை எப்பொழுதும் அவதானிப்புக்கு உள்ளாகியே இருக்கிறது.
பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் (Committee to Protect Journalists) கணிப்பின் படி 19 வரையான பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு நீங்கியிருக்கிறார்கள்.
பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காத நாடுகளின் 2010 ஆண்டுக்கான பட்டியலில் இலங்கையை நான்காம் இடத்தில் வைத்திருக்கிறது. பத்திரிகையாளர்கள் கிரமமாக கொல்லப்படுவதும் அரசு குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தவறுவதாகவும் இருக்கிற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் இருக்கிறது.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவின்(Committee to Protect Journalists) அறிக்கையின்படிக்கு பத்துப்பத்திரிகையாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் இலங்கையின் உள்நாட்டுப் போர் இராணுவ நடவடிக்கைகள் மனித உரிமைகள் ஊழல்கள் தொடர்பாக செய்திகளையும் கட்டுரைகளையும் அளித்தமைக்காகக் கொல்லப்பட்டுள்ளார்கள்.  ஆனால் இவற்றிற்குக் காரணமானவர்களில் எவரும் இதுவரைக்கும் சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை.
அனேகமான கொலைகள் மகிந்த ராசபக்ஸ சனாதிபதியாக இருக்கும் போதே நிகழ்ந்துள்ளன. எல்லைகளற்ற பத்திரிகையாளர் குழுமத்தின் பத்திரிகைச் சுதந்திரம் தொடர்பான 2010 ஆண்டுக்கான  சுட்டிப்பட்டியலில் (Reporters Without Borders Press Freedom Index 2010) இலங்கை  158 வது இடத்தில் ஆகவும் கீழே இருக்கிறது. எதித்திரியா இன்னமும் மோசமான இடத்தில் 178 ஆவதாக இருக்கிறது. தென்ஆபிரிக்கா இந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தவரை 38ம் இடத்தில் இருக்கிறது.  ஆயினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அது 5 இடங்களை இழந்து கீழே வந்திருக்கிறது.

அண்மைக்காலமாக எதிர்பாராதவிதமாக  தென்ஆபிரிக்காவில் ஊடகங்கள் தணிக்கை என்னும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.  அரசியல்வாதிகள் ஊடக சுதந்திரம் தொடர்பாக அக்கறை அற்ற தன்மையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.  உண்மையை நோக்கிய தேடல் அற்றவர்களாக‌, ஊடகக்கலையின் தேவையும் முக்கியத்துவத்தையும் உணராதவர்களாக மாறி வருகின்றனர்.  தற்போது தென்ஆபிரிக்காவில் பத்திரிகைகளை கண்காணிப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் என கொண்டுவரப்பட்டுள்ள சட்டரீதியான ஊடக தணிக்கைக் குழுவையும்  எதிர்கொள்கிறோம்.
தகவல்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் புதிய விதிகளை தென்னாபிரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  இச்சட்டத்தின் மூலம் அரசு தொடர்பான செய்திகளை தணிக்கை செய்ய வழி பிறக்கிறது.  அதுமட்டுமல்ல ஆபிரிக்க தேசிய காங்கிரசால் வழிநடாத்தப்படும் இவ் அரசு ஊடகத்துறை மீதான வாய்மொழியான தாக்குதல்களையும் தற்போது ஆரம்பித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக தென்ஆபிரிக்கா பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலன் என்ற விம்பம் மங்கலாகி வருகிறது.
17 வருடங்கள் சனநாயகத்தில் இருந்த பின்னர் தற்போது இந்த நாட்டின் பத்திரிகையாளர்கள்  புதிய வகையான நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
கடுமையாகப் போராடிப் பெறப்பட்ட பத்திரிகை சுதந்திரம்; நான் மிகவும் பெருமையுடன் உணர்ந்த சுதந்திரம்; அமெரிக்காவில் எனது கற்கைக்கான விடுமுறைக் காலத்தில் இன்னும் உரிமையுடன் அனுபவித்த அந்த சுதந்திரம் தற்போது இங்கே தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
திறந்த சனநாயகமான சமூகமொன்றில் சனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் அழுத்தங்கள் வராது; சவால்கள் உருவாகாது என யாராவது நம்பியிருப்பார்களேயானால் அந்த நம்பிக்கைக்கு எதிரான எச்சரிப்பு அறிகுறிகள் தோன்றத் தொடங்கியுள்ளன .
ஊடக சுதந்திரம் எப்பொழுதும் பணக்காரர்களாலும் அதிகாரத்தில் உள்ளவர்களாலும் அழுத்தத்திற்குள்ளாகியே வந்துள்ளது.  தணிக்கை தடை மரண அச்சறுத்தல் மரணம் என அந்த அழுத்தங்கள் பல வழிகளில் தோன்றுகின்றன.
இருக்கிற நிலைமைகளையிட்டுத் திருப்தியடைந்து விட்டோமென்றால் நாங்கள் பின்னோக்கியே செல்ல வேண்டியிருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் இலங்கையில் இருந்து தென்ஆபிரிக்கா வரை இந்த அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு தங்களுக்குள் கைகளைக் கோர்த்துக் கொள்ளவேண்டும்.

நன்றி: http://www.lankaindependent.com/2011/05/from-south-africa-to-sri-lanka-no-room-for-complacency/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக