நாங்கள் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப்போலக்கொல்வோம்
மனிதத்தன்மைகளுக்கு அப்பாற்பட்ட இந்தச் சித்திரவதைகளை அவர்கள் என்மீது
புரிவதைவிட என்னை அவர்கள் கொன்றுவிட்டிருக்கலாம் என உணர்ந்தேன். அந்தக்காலத்துக்கு-நான் சித்திரவதைகளுக்கு உட்பட்டிருந்த
அந்தக்காலத்துக்கு திரும்பிச் செல்வது அன்றைக்கு நான் அனுபவித்த எல்லா
வேதனைகளையும் மீள அனுபவிப்பது போல் இருக்கிறது.
நான் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட அந்த நாள் என் நினைவுகளில் ஒரு
எரிகாயமாகப் படிந்திருக்கிறது. அது என்
ஆத்மாவினுள்ளும் ஊடுருவி இருக்கிறது.
என்னைக் கடத்தியவர்களின் சொற்கள் சவுக்கடிபோல என்னுள் விழுந்தன. அன்று கேட்ட அதே சொற்களை இந்தக் கட்டுரை
எழுதும்போது இப்போதும் கேட்கிறேன்.
"எதிர்காலத்தில் நீ அரசாங்கத்துக்கு எதிராகப் பேசுவாயானால்
அரசு எதிர்ப்பு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிடுவாயானால் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபடுவாயானால் உன்னை வேட்டையாடி ஒரு நாயைப் போலக் கொல்வோம். நீ எங்களுக்கும் தலைவலியாக இருக்கிறாய். எனவே வாயை மூடிக்கொண்டு ஒரு நாயைப் போல அடங்கி
இரு. நீ உனது வாயைத் திறந்தால் உன்னை
நாங்கள் சவச்சாலைக்குத்தான் அனுப்புவோம்."
அவர்கள் எனது கால்களையும் கைகளையும் இறுக்கிக் கட்டினர் துணியினால் எனது
வாயையும் அடைத்தனர். என்னைக்
கடத்தியவர்கள் புரிந்த சித்திரவதைகளை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை; அவற்றின்
மனிதத்தன்மையற்ற பண்பை விபரிக்க முடியவில்லை.
நான் நீண்ட தாடி வைத்திருப்பது
யாவருக்கும் தெரிந்த ஒன்று. இதுவே
எனது அடையாளமாகவும் மாறிவிட்டிருந்தது.
என்னைக் கடத்தியவர்கள் எனது தாடிமயிர்களைக் கத்தரித்து எனது வாய்க்குள்
திணித்ததுடன் அவற்றை எனது தொண்டைவரையும் தள்ளினர்.
பின்னர் அவர்கள் என்னை வாகனத்தின் பின்பகுதியில் பலவந்தமாகவும் முகம் குப்புறவும்
தள்ளி விழுத்தி அழுத்தினர். நான்
மேலே கூறிய அச்சுறுத்தும் வார்த்தைகளை பின்னர்
தொடர்ந்து திரும்பவும் கூறிக்கொண்டிருந்தனர். சில நிமிடங்களின் பின்பு அவர்கள்
ஓடும் வாகனத்தில் இருந்து என்னை வெளியே வீதிக்கரையில் வீசினர். என்னைக்
கடத்தியவர்களின் வாகனம் அவ்விடத்தை விட்டு நீங்குவதும் எனக்குக் கேட்டது.
எனது வாயில் கட்டியிருந்த துணித்துண்டையும் கைகளில் கட்டியிருந்தவற்றையும்
அறுப்பதற்காகக் கிரவல் வீதியில் உருண்டு அவற்றைத் தேய்த்தேன். இதனிடையே கண்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலும்
என்னைக் கடந்து சென்ற வாகன ஒலிகளை நோக்கி உதவிக் குரல் எழுப்பினேன். ஆனால் எவரும் நிறுத்தவில்லை. இறுதியாகச் சில முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள்
என்னை கண்ணுற்று என்னருகே வந்து "நீ யார்? என்ன இது..? உனக்கு என்ன நடந்தது..? எனக் கேட்டனர்.
‘நான் ஒரு பத்திரிகையானன் எனது பெயர் போத்தல ஜெயந்த’ எனக் கூறினேன்.
சிலர் என்னைக் கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கிய பின்னர் என்னை இங்கே
வீசிவிட்டுச் சென்றுள்ளனர். தயவுசெய்து யாராவது என்னை வைத்தியாசாலைக்கு
கூட்டிச்செல்வீர்களா? எனக் கெஞ்சினேன்.
என்னைச் சுற்றிக் கூட்டம் கூடிக் கவனமாகக் கேள்விகளைக் கேட்கத்தொடங்கியபோதும்
எவரும் எனது கண்கட்டை அவிழ்க்கவோ கைகால்களில் கட்டியிருந்த துணிகளை அவிழ்க்கவோ
முனையவில்லை.
சில நிமிடங்கள் கழித்து முச்சக்கர வாகனச் சாரதிகளில் ஒருவர் ஓ! இவர்
தொலைக்காட்சியில் தோன்றிய செய்தியாளர் எனக் கூறினார்.
என்னை அடையாளம் கண்டவுடன் என்னைச் சூழவும் நிலவிய பதட்டமான நிலை சற்று
மாற்றமடைந்தது.
சகோதரரே என்ன நிகழ்ந்தது என அக்கறையான தொனியில் அந்தச் சாரதி என்னை வினவினார். மற்றுமொரு முச்சக்கரவாகனச்சாரதி தனது கையடக்கத்
தொலைபேசியில் காவல்துறையை அழைப்பதையும் கேட்டேன்.
இன்னுமொருவர் எனது கட்டுக்களை அவிழ்க்க முற்பட்டபோது அவரது நண்பர்கள் அவரை
அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு செய்வதால் அவர் பிரச்சனைக்கு உள்ளாகலாம்
எனவும் காவல்துறை வரும் வரை பொறுத்திருக்கும்படியும் கூறினார்.
என்னைச் சுற்றிய கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்ததே தவிர எவரும் என்னை
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்வரவில்லை. நானோ தாங்கமுடியாத நோவுடனும் வேதனையுடனும்
இருந்தேன். எனது வேண்டுதலை யாராவது
கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் "தயவு செய்து கேளுங்கள்… உங்களை மன்றாடிக் கேட்கிறேன்… தயவு செய்து என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுங்கள்… எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது… என்னை இந்த வீதிக்கரையில் சாகும்படி
விட்டுவிவேண்டாம்… தயவுசெய்து!
தயவுசெய்து!! ” என என்னைச் சுற்றி கூடியிருந்த கூட்டத்தினரைக் கெஞ்சிக்
கேட்டேன். ஆனால் எனது துன்பத்தை கண்டு
ரசிக்கும் குணம் கொண்ட கூட்டமாக அவர்கள் நின்றனர். நாட்டைப்பற்றியிருந்த எதனைப்பற்றியும் கவலைப்படாத உணர்வு
ரீதியாக முடக்கப்பட்ட ஒரு கலாசாரத்தின்
பிரிதிநிதிகளாக அவர்கள் நின்றனர்.
செயற்படுவதற்கோ என்னைக் காப்பாற்றுவதற்கோ முனையத்தயாரற்று நின்றனர்.
ஆயினும் பலமுறை மன்றாடிய பின்னர் ஒரு சிலர் முன்வந்து எனது கட்டுக்களையும்
கண்கட்டையும் அவிழ்த்து விட்டனர். அவர்களில் ஒருவர் பின்வருமாறு கூறினார். “பொலிஸ் வரும் எனப் பார்த்துக் கொண்டிருந்தால் எங்களுடைய
கண்ணுக்கு முன்னாலேயே இந்த மனிதன் இறக்க நேரிடும். காவல்துறை இப்போதைக்கு வரப் போவதில்லை. முதலில்
இந்த மனிதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வோம்.
காவல்துறை வந்தால் எதையாவது கூறிக் கொள்வோம்.
அப்பொழுது நான் மிகக் கடுமையாக இருமினேன்.
எனது வாய்க்குள்ளும் கொண்டைக்குள்ளும் சிக்கியிருந்த பலவந்தமாகத்
திணிக்கப்பட்டிருந்த தாடிமயிர் காரணமாக அது ஏற்பட்டது.
காவல்துறையைப் பற்றிக் கவலைப்படாமல் என்னை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்
போவதாக கூறிய முச்சக்கரவண்டிச்சாரதி என்னைத் தனது வண்டியில் ஏற்றிக் கொழும்பு
பிரதான வைத்தியசாலைக்கு என்னை எடுத்துச் சென்றார்.
ஜூன் 1 2009 எனது அலுவலகத்தில் இன்னுமொரு நாள். நான் லேக்கவுஸ்
குழுமத்தின் பத்திரிகைகளில் வேலை செய்துகொண்டிருந்தேன். இவை அரசுக்கு உடைமையானவை. வேலை முடிந்தபின்னர் பஸ் இலக்கம் 138 இல் நுகெகொடைக்குச் சென்றேன். பின் அங்கிருந்து பஸ் இலக்கம் 119 இல் ஏறி அம்புல்தெனியாவை அடைந்தேன். வீட்டுக்குச் செல்ல முன்பு வீதியோர உணவுக்
கடையில் எனது மனைவிக்கும் மகளுக்கும் இரண்டு மரக்கறி ரொட்டிகளை வாங்கியபின் எனது
வீட்டைநோக்கிச் செல்லும் மாவத்தை வீதியை நோக்கிச் சென்றேன்.
எனது வீதிக்குள் இறங்கிச் சில அடிகள் தூரம் நடந்தவுடன் அந்த ஒடுக்கமான
வீதியில் ஒரு வெள்ளைவான் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டேன். வெள்ளைவான் என்பது
கொழும்புப் பிரதேசத்தில் எதிர்க்கருத்துக் கொண்ட பத்திரிகையாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் அச்சத்துக்குள்ளாக்கி
வேட்டையாடும் குறியீடாகவே மாறிவிட்டிருந்தது.
நான் சென்றுகொண்டிருந்த வீதி ஒடுக்கமானதென்பதால் வெள்ளைவான் நிறுத்தப்பட்டிருந்த வெளியில்
ஒருவர் மட்டுமே செல்லக் கூடியளவு இடைவெளியே இருந்தது. நான் அந்த ஒடுங்கிய பகுதியை அடைந்த போது வெள்ளை
வானின் வழுக்கிச் செல்லும் பின்கதவு சடுதியாகத் திறந்தது. சில காடையர்கள் என்னை
பலவந்தமாக வானுக்குள் உள் இழுத்தனர்.
அதுவரைக்கும் கால்நடையாகவும் என் பின்னே இருவர் தொடர்ந்து வந்திருந்ததையும்
நான் தெரிந்திருக்கவில்லை. அவர்களும்
சேர்ந்தே என்னைப் பின்னிருந்து தள்ளி வானுக்குள் வீழ்த்தியிருந்தனர். பின்னர் எல்லோருமாகச்சேர்ந்து
அந்தக்குற்றச்செயலை ஆரம்பித்தனர்.
திரும்பி யோசிக்கும் பொது அந்த வானின் பின்பகுதியில் ஒரு இருக்கையே இருந்தது ஞாபகம்
வருகிறது. அவர்கள் வானின் தரையில்
என்னைத் தள்ளி வீழ்த்தி என் கைகளையும் கால்களையும் கட்டி அழுத்தி என் கண்களையும்
கட்டினர். நான் உரத்துக் கத்தினேன். இந்நேரத்தில் வான் வேகமாகச் செல்லத்
தொடங்கிவிட்டிருந்தது. நானோ உரத்துக்
கத்திக் கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள் கேலி செய்யும் தொனியில் "நன்றாகக் கத்து… உனது சத்தம்
ஒருவருக்கும் கேட்காது... ஆர்ப்பாட்டக் கூட்டங்களில் கலந்து கொண்டு இப்படித்தானே
உரத்துக் கத்தினாய்... அது உனக்குப்
பழக்கம் தானே..." எனக்கூறினர்.
இப்பொழுது அவர்கள் பொல்லுகளினால் எனது காலில் தாக்கத்தொடங்கியிருந்தனர். அது தந்த வலியினால் நான் கதறிய போது அவர்கள்
எனது வாயைத் துணித்துண்டுகளால் அடைத்துக்கட்டினார்கள்.
வானுக்குள் இருந்த இன்னுமொருவன் "இந்த அடிகளால் இவனை உடைக்க முடியாது.
இதனை இவனது கால்களின் கீழே வைத்து மீண்டும் கால்களைத் தாக்கு அப்பொழுதான் இவன்
உறுதியை உடைக்கமுடியும்" எனக் கூறினான்.
நான் எனது கால்களின் கீழே மரத்தினால் ஆன ஏதோ ஒன்று வைக்கப்படுவதை உணர்ந்தேன். பின்னர்
மீண்டும் அவர்கள் பொல்லுகளினால் எனது கால்களைத்தாக்கினார்கள். எனது கால்களைத் தாக்கிய கடும் கொதிப்பை நான்
என் சுயநினைவை இழந்திருந்த போதும் உணர்ந்தேன்.
அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் கனவில் நடந்தவைகள் போல இருக்கின்றன.
எனது தாடி வெட்டப்பட்டு எனது வாயை அடைத்திருந்த துணி அகற்றப்பட்டு தடித்த தாடி
மயிர்கள் என் வாய்க்குள் திணிக்கப்பட்டன.
பின்னர் மீண்டும் எனது வாய் துணியினால் இறுக்கி மூடப்பட்டுக்
கட்டப்பட்டது. அவர்கள் எனது மற்றக் காலையும் சேர்த்துப் பொல்லுகளால்
மாறிமாறித் தாக்கினார்கள்.
திடீரென எனது கால்கள் எரிவது போன்ற நோ தோன்றியது. அந்த நோ என்னை மீண்டும் சுய நினைவுக்குக்
கொண்டு வந்தது.
இதனை நன்றாக ஞாபகம் வைத்திரு...!
நீ எதிர்காலத்தில்...
என் உடல் எங்கும் குளிர்ந்த திரவம் ஊற்றப்பட்டதாகவும் அப்பொழுது
உணர்ந்தேன். அவர்கள் என்மீது பெற்றோலை
ஊற்றி எரிக்கப்போவதாக நினைத்தேன். ஆனால்
அப்படி நடக்கவில்லை.
காலை 7.30 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டேன். 6 அல்லது 7 பேர் கொண்ட வைத்திய அதிகாரிகளின் குழு ஒன்று மிகுந்த
கவனமுடன் குறைந்த நோவைத் தரக்கூடிய முறையில் எனது தொண்டைக்குள்ளும் வாய்க்குள்ளும்
சிக்கியிருந்த மயிர்களை அகற்றினர்.
ஏனேனில் எனது சுவாசப் பாதையை துப்பரவு செய்வது முக்கியமானதாக இருந்தது. எனது இடது கால் மிக மோசமாக முறிந்திருந்ததுடன்
அவற்றை இணைப்பதற்கு சத்திரசிகிச்சையும் செய்யவேண்டியிருந்தது. எனது மற்றைய காலில் முறிவு எதுவும்
இல்லாதபோதும் கடுமையான கண்டல் காயங்கள் இருந்தன.
எனவே அந்தக் காலைக் கட்டுத்துணிகளால் முழுவதுமாகக் கட்டவேண்டியும்
இருந்தது.
நான் கொடூரமாகத் தாக்கப்பட்டதன் காரணமாக எனது அடிவயிறும் சிறுநீரகப் பாதையும்
சரியாக வேலை செய்யவில்லை. சிறுநீரை
அகற்றுவதற்கு செயற்கை இறப்பர்க்குழாய் பொருத்த வேண்டியிருந்தது. 29 நாட்கள் நான் விபத்துச் சிகிச்சைப்பிரிவில் இருந்தேன். அதன் பின்னர் 6 மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டியவனாக இருந்தேன்.
வைத்திய சாலையில் இருந்து மீண்டுவந்து
இரண்டு மாதங்களின் பின்பு இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் (Sri Lanka
Working Journalists Association (SLWJA)) மீண்டும் எனது வேலையைத் தொடங்கினேன். ஓக்ரோபர் 10ம் திகதி சிலகாலமாகக் கட்டட நிர்மாணத்தில் இருந்து
பூர்த்தியாக்கப்பட்ட
Sri Lanka Working Journalists Association (SLWJA) இன் புதிய அலுவலகத்தையும் திறந்து வைத்தேன்.
லேக் கவுஸ் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அந்த
விழாவிற்கு வந்திருந்தனர். அடுத்த நாட்காலை த-ஐலன்ட், லக்பிம, திவயின, லங்காதீப ஆகிய
பத்திரிகைகள் எனது படத்துடன் திறப்புவிழாச் செய்தியை முக்கியமாக்கிப்
பிரசுரித்திருந்தன. இது மீண்டும் எனக்கு ஆபத்தான ஒரு பிரபல்யத்தைத்
தந்துவிட்டிருந்தது.
மறுநாள் மீண்டும் எனக்கு தொலைபேசி மூலம் பயமுறுத்தல் விடுக்கப்பட்டது. தொலைபேசி அழைப்பை எடுத்தவர்களின் எண்
மறைக்கப்பட்டிருந்தது. "ஆக நீ மீண்டும் தொடங்கிவிட்டாய் இல்லையா? ஒரு
நாயைப் போல அடங்கிக் கிடக்கும் படி கூறினோமா இல்லையா? பொறுத்திருந்து பார் உனக்கு என்ன நடக்கிறது"என அந்தக்
குரல் பயமுறுத்தியது. இது நடந்து சில நாட்களின் பின்பு லங்கா நியூஸ் பேப்பரின்
பிரதம ஆசிரியரான சந்தன சிறிமல்வத்த கடத்தப்பட்டார். பிற்பாடு அவர்
CID இனால் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச்சம்பவம் இக் கடத்தலின் பின்னணியில் அரசே இருந்ததை
உறுதிப்படுத்தியது. ஒரு மனித உரிமைவாதியான நான்
எனக்கு கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அதிகநாள் ஆகியிருக்காத போதும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக்
குரல் கொடுக்க தயங்கவில்லை.
எனது இந்த நடத்தை எனது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் பாரமானதாகவும்
கஸ்டதானதாகவும் இருந்தது. ஆனால் நான் இந்தப் பாதையில் முன்செல்லவே
விரும்பினேன். எனது நாட்டில்
பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்திற்காகப் போராடவே விரும்பினேன். இதையெல்லாம் விட்டுவிட்டு வெளியேறி
வெளிநாடொன்றுக்குச் செல்லும் முடிவை எடுப்பது என்பது எந்தச் சூழ்நிலையிலும்
கடுமையானதாகவே இருந்தது.
இன்றைக்கு ராஜபக்ச குடும்ப அரசின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வெளிநாடுகளில்
வாழ்கின்ற எனைய பத்திரிகையாளர்களுக்கும் கூட இவ்வாறுதான் கடினமாக
இருந்திருக்கும்.
எனது காயங்களோ இன்னமும் முழுமையாக ஆறவில்லை.
எனவே பிலியந்தலையில் இருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு அடிக்கடி பயணம்
செய்யவேண்டியே இருந்தது.
ஓவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் இன்னும் மோசமான ஆபத்தையோ மரணத்தையோ அல்லது
இதுவரை அனுபவித்த சித்திரவதைகளைவிட மோசமான சித்திரவதைகளையோ அனுபவிக்க நேரிடலாமென்ற
பயம் இருந்து கொண்டே இருந்தது.
பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் அரசு நசித்துக்
கொண்டிருக்கும் போது அடங்கி மெளனமாக இருப்பது எனது தன்னுணர்வுக்கும் பிரக்ஞைக்கும்
ஏற்புடைய விடையமல்ல.
அதேவேளை இந்த நாட்டில் உயிர் வாழ
வேண்டும என்றால் நீ உனது ஆத்மாவை ராசபக்ச அரசுக்கு விற்கவேண்டும். நீ உனது சுய மரியாதையையும் கொள்கைகளையும்
ராசபக்சவின் கோவிற் சந்நிதானத்தில் சமர்ப்பித்து வணங்க வேண்டும்.
நானோ என் மனைவியையும் பிள்ளையையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு நீங்கினேன்….
மொழிபெயர்ப்பு: தேவ அபிரா
நன்றி:http://www.lankaindependent.com/2011/06/%E2%80%9Cwe-will-hunt-you-down-and-kill-you-like-a-dog%E2%80%9D/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக