எந்தப்பாதையும் தொடங்கிய இடத்திலேயே
தொடங்கிய உடனேயே முடிவதில்லை-ஒரு மொழிபெயர்ப்பு
இலங்கையில் மகிந்த குடும்பம் சிவில் முகமூடி
போர்த்திய ஒரு இராணுவ ஆட்சிக்குத் தயாராகி வருகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் பல்வேறு
தருணங்களில் இலங்கை ஆசியாவின் இன்னுமொரு பர்மாவாக வரலாம் என்ற அச்சம்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் தமது சாயம் வெளிக்கும் போது
தமது அதிகாரத்தைப்பேணுவதற்கு மகிந்த குடும்பத்திற்கு இராணுவத்தை விட்டால் வேறுவழி
இல்லாமல் போகலாம். அது மட்டுமல்ல இன்று சிறையில் வாடுகிற சரத்பொன்சேக்காவும் இராணுவநோக்கிலேயே சிந்திக்கத்தெரிந்தவர்.
இவர்கள் எவரினதும் கையில் இலங்கையின் அதிகாரம் இருக்கும் வரை இலங்கையில் சனநாயகச்
சிந்தனைக்கு இடமில்லை.
இலங்கையின் வடக்கும் கிழக்கும் கீழ்தரமான
கழிசடைத்தனமான சிங்கள இராணுவக்கெடுபிடிக்குள் சிக்கியுள்ளன. இலங்கையின் பொலீஸ்
அதிகாரமும் குற்றவாளிகளை பாதுகாத்து பொதுமக்களைத்தண்டிக்குமளவுக்கு சீரழிந்து
போயுள்ளது.
பலமான சிவில் சமூகச் சிந்தனையைக் கொண்டிருந்த இலங்கையின் வரலாறு கடந்த மூன்று
தசாப்தங்களில் படிப்படியாக இராணுவ மயப்பட்ட தனிமனித விழுமியங்களும்
மனிதவுரிமைகளும் சீரழிந்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதுவொன்றும் அதிசயமல்ல.
எந்தப்பாதையும் தொடங்கிய இடத்திலேயே தொடங்கிய உடனேயே முடிவதில்லை என்ற கசப்பான
உண்மையை சமூக இயங்கியல் கற்றுத்தந்துள்ளது.
இந்த உண்மையின் ஒளியில் பர்மாவில் கடந்த அரை
நூற்றாண்டுகளாக எப்படி ஒரு இராணுவ அரசு நீடித்திருக்கிறது என்பதை தனது பார்வையில்
விளக்கி டேவிட் கேய்ஸ்(David
Keys) என்பவர் எழுதிய
கட்டுரையின் மொழிபெயர்ப்பை வாசியுங்கள்...
பர்மா: ஏன் இன்னும் பர்மாவில்
இராணுவச்சர்வாதிகாரத்தால் நீடிக்க
முடிகிறது- David Keys
அண்மையில் பர்மாவின்
எதிர்க்கட்சித்தலைவியானஅயுங் சன் சூ கீ
பர்மாவின் இராணுவத்தலைமையினால் விடுவிக்கப்பட்டமை உலகெங்குமுள்ள ஊடகங்களில்
செய்தியானது. ஆனால் அயுங் சன் சூ கீ இன் 2000த்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இன்னமும் சிறைகளிளேயே
உள்ளனர். இதுவே இராணுவ ஆட்சியாளர்களுக்கும்
எதிர்க்கட்சியினருக்குமிடையில் இருக்கக்கூடிய பரஸ்பர உறவின் உண்மையான நிலைமையை
வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
உத்தியோகபூர்வமாக மியன்மார் என் அளைக்கப்படுகிற
பர்மா உலகின் மிக நீண்ட இராணுவ ஆட்சியைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இதற்கான உள்ளகக் காரணங்களை இக்கட்டுரை அலசுகிறது
பிரச்சனையின் வேர்கள்
கடந்த அரை நூற்றாண்டுகளாகப் பர்மா ஒரு மரபு
வழியான சனநாயகநாடாக இருக்கவில்லை. கடந்த
சில தசாப்தங்களிற் சில நாடுகளில் இராணுவஅரசுகள் இருந்த போதும் அவை
தற்காலிகமானவையாகவே இருந்துள்ளன. மேலும் அந்த இராணுவ அரசுகளை ஆதரித்தவர்களும் கூட
அவற்றை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே கருதி ஏற்றிருந்தனர். ஆனால் பர்மாவின் சர்வாதிகார இராணுவத் தலைமை ஏறத்தாழ கடந்த 50 வருடங்களாக ஆட்சியில் இருந்து வருகிறது.
பர்மாவில் ராணுவத்தலைமை நீடிப்பதற்கு
முக்கியமான நான்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன.
·
பர்மாவுக்குள்ள பலமான இராணுவமரபு
·
பர்மாவில் காணப்படும் பலவீனமான சிவில் சமூகம்
·
அந்நிய ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாக பர்மாவில் நீண்ட காலமாக நீடித்திருக்கும்
பயம்
·
பர்மாவின் தேசிய ஒருமைப்பாடு குலைக்கப்படலாமென்ற நீடித்தபயம்
அனேகமான ஆசிய ஆபிரிக்க நாடுகள்
காலனித்துவத்திடமிருந்து தமது சுதந்திரத்தைச் சிவில் சமூகத்தின் அதாவது மக்கள் போராட்டத்தின் மூலமாகவே அடைந்தன. ஆனால் பர்மா தனது விடுதலையை அவ்வாறு பெறவில்லை. 1945 களில்
ஓங்கியிருந்த ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து உலக நாடுகள நிகழ்த்திய இராணுவப் போராட்டத்தின் விளைவின் ஒரு
பகுதியாகவே புதிய பர்மா பிறந்தது.
ஜப்பானுக்கு எதிராகப் போராடிய உலக நாடுகளின் ஐக்கிய முன்னணியின் ஒரு
பகுதியாக இருந்த பர்மிய இராணுவம் பர்மாவின் சுதந்திரத்தின்பின் பர்மியத் தேசிய
இராணுவமானது. இந்த வகையில் பர்மாவின்
இராணுவத்தை ரொபேர்ட் முகாபேயின் சிம்பாபேயுடனோ, 20ம் நூற்றாண்டு வரையும் நீடித்த இந்தோனேசிய இராணுவ
ஆட்சியுடனோ, 19 ம் நூற்றாண்டிலும்
இலத்தீன் அமெரிக்காவில் நீடித்த ( கௌடிலியோ)இராணுவ அரசுகளுடனோ ஒப்பிடலாம்.
பர்மிய இராணுவம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது
காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜப்பானிய அரசுடன் கூட்டமைத்துக் கொண்ட
பர்மியத் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது.
பர்மாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு நிலவிய காலத்தில்(1942) இந்த இராணுவம் பர்மியப் பாதுகாப்பு இராணுவம் என
அழைக்கப்பட்டது. பிற்பாடு இதே இராணுவம்
பர்மியத் தேசிய இராணுவமானது.
யுத்த
நிலமைகள் ஜப்பானுக்கு எதிராகத் திரும்பிய போது பர்மியப் பாதுகாப்பு இராணுவம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு
யப்பானுக்கெதிரான ஐக்கிய முன்னணியுடன் இணைந்து கொண்டது. இவ்வாறு யப்பானுக்கு
எதிராக மாறி வந்த அரசியற்சூழ்நிலைகளுக்கு ஏற்ப பர்மிய இராணுவத்தின் பெயரும்
மாறிவந்ததோடு அந்த அரசியல் மாற்றங்களுக்கேற்ப பர்மாவின் இராணுவத்தை நவீன பர்மாவின்
தலைவரான அயுங் சன்(Aung
San) வழிநடாத்தினார்.
அயுங் சன் (Aung San) இன்
பிரபல்யமானது பர்மாவின் இராணுவப் பிரபல்யத்திற்கு பலம் சேர்த்து
இராணுவத்தின் இருப்புக்கும் ஒரு வகையில் பங்களித்துள்ளது. அதேவேளை இன்றைய பர்மாவின் எதிர் கட்சித்
தலைவரான அயுங் சன் சூ கீ(Aung
San Suu Kyi) இன்
பிரபலியத்துக்கும் இவர் மீதான மதிப்பு காரணமானது ஏனெனில் அயுங் சன் சூ கீ அயுங் சன் இன் மகளாவார்.
பலவீனமான சிவில் சமூகம்
பர்மாவின் பலமான இராணுவ ஆட்சிக்கு எதுவாக
இருக்கும் இரண்டாவது காரணம் பலவீனமான சிவில் சமூகமாகும். 1824 இல் பிரித்தானியா பர்மாவின் அனத்துப் பகுதிகளையும் தனது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பர்மிய மன்னராட்சி முறைமைகளை ஒழித்தது. அதுமட்டுமல்ல பர்மாவில் நிலவிவந்த பிரபுத்துவ
சமூகங்களின் நிர்வாகமுறைமைகள் கடைசிகாலஅரசர்களினாலும் பின்னர்
பிரித்தானியர்களாலும் அழிக்கப்பட்டன.
இவற்றினால் மரபு வழியான சிவில் சமூகம் ஒன்று படிப்படியான வளர்ச்சிக்கு
உட்பட்டு வளர்வது தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
மறுபுறத்தில் பிரித்தானியர்களின் ஆட்சிக்
காலத்தில் நிலவிய சிவில் ஆட்சியில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு
பர்மிய சமூகம் இணைத்துக் கொள்ளப்படவில்லை. பதிலாக இந்திய துணைக்கண்டத்தில் இருந்து இந்தியர்களும்
பிரித்தானியாவில் இருந்து
பிரித்தானியர்களும் அளைத்துவரப்பட்டுச் சிவில் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.
பர்மாவின் மத்தியதரச் சிவில் ஆட்சியில் இவ்வாறு பர்மியர் அல்லாதவர்கள்
இணைத்துக்கொள்ளப்பட்ட கீழ்நிலை ஆட்சியில் பொலிசாகவும் இராணுவமாகவும் பர்மியர்கள்
இணைக்கப்பட்டனர்.
இதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. பிரிட்டிஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக பர்மா
இருந்தபோதும் பர்மிய மொழி பேசும் மக்களைக் கொண்ட பர்மிய இதய நிலம் கடைசிவரையும்
இந்திய மகாராஜாக்களுடன் இணைய மறுத்து வந்ததும் பிரித்தானியர்களால் கடைசியாகவே வெற்றி கொள்ளப்பட்ட நிலமாக பர்மா இருந்ததுவே
அது. எனவே சிவில் ஆட்சியினுள் பர்மியர்களை உள்வாங்கக் கூடிய சூழ் நிலைகள்
ஏற்படவில்லை.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது மேற்கத்தியக்
கல்வியைப் பயின்ற ஆங்கிலம் பேசுகிற பர்மியர்களின் எண்ணிக்கையும் அக்காலத்தில்
மிகக் குறைவாகக் காணப்பட்டது. மேலும் 1930 களில் தோன்றிய
பொருளாதாரச்சரிவும் பர்மாவின் மத்திய தர வர்க்கத்தை கடுமையாக பாதித்து உடைத்தும்
விட்டது.
இந்த மத்திய தரவர்க்கம் பர்மாவின் சிவில்
சமூகத்திற்கான கருவை இட்டிருக்கக்கூடிய வாய்ப்பும் இதனால் இல்லாமற் போனது.
பர்மியத் தேசிய வாதிகளிடம்(பர்மிய மொழியைத்
தாய் மொழியாகப் பேசுகின்றவர்கள்) நிலவிவருகிற இன்னுமொரு அச்சமும் பர்மாவின்
நீடித்த இராணுவ ஆட்சியைக்காப்பாற்றி வந்திருக்கிறது. பர்மா பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பன்மொழிவாரி
இனங்களைக் கொண்ட நாடாகும். எனவே பர்மிய மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளைப்
பேசுகின்ற சிறுபான்மை இனங்கள் தமது சுதந்திரத்திற்காகப் போராடிப் பர்மா பல
துண்டுகளாக உடைந்து போகுமோ என்ற அச்சம் பர்மிய மொழி பேசும் தேசியவாதிகளிடத்தில்
நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது.
பிரித்தானியக் காலனித்துவத்திற்கு முன்னான 17க்கும் 19க்கும் இடையிலான நூற்றாண்டுப் பகுதியில் பர்மாவின் அரசர்கள் தமது அரசுப்
பகுதியை பர்மிய மொழி பேசாத இனங்கள் வாழ்ந்த பகுதிகளுக்கும் விஸ்தரித்தார்கள்.
அல்லது குறைந்தபட்சம் அவையும் தமது ஆட்சிக்குட்பட்டவை என உரிமை கோரினார்கள். இதனால் தற்போதைய பர்மாவின் மூன்றில் இரண்டு பகுதி பர்மிய மொழி
பேசாதவர்களினாலே வாழப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது மேலும் இந்தச் சிறுபான்மை
இனங்கள் பர்மாவின் மொத்தச் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.
பர்மாவில் பன்னிரண்டுக்கும் அதிகமான மொழி அடிப்படையிலான சிறுபான்மையினர்
உள்ளனர். ஐந்து மில்லியன் ஸ்ரோங்க் ஷான்(strong Shan), நான்கு மில்லியன் ஸ்ரோங்க் கரேன்(strong Karen), இரண்டு மில்லியன் ஸ்ரோங்க் அரக்கான்சே(strong Arakanese) இவற்றுடன் மொன்(Mon),
ஷின்(Chin) கரேனினி(Karenni) மற்றும் கச்சின்(Kachin) சிறுபான்மை இனங்கள் பர்மாவில் உள்ளனர்.
பர்மாவின் பர்மிய மொழி பேசும் தேசியவாதிகளின்
பர்மா துண்டுகளாக உடையக்கூடும் என்ற பயத்தினை உறுதிப்படுத்துவதுபோல பர்மா சுதந்திரம்
அடைந்த உடனேயே பன்னிரண்டுக்கும் அதிகமான
சிறுபான்மை இனங்கள் தமது விடுதலைக்
கோரிக்கையை முன்வைத்துப் பிரிவினைப் போராட்டங்களைத் தொடங்கியிருந்தன.
இவற்றுள் கரேன் மற்றும் சான் இனங்களின்
போராட்டம் இன்றளவும் தொடர்கின்றது.
இதுமட்டுமன்றி மொத்தப் பர்மாவின் ஐந்தில் இருந்து பத்து வீதமான நிலப்பரப்பு
இந்த விடுதலைக் குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே இன்னமும் இருக்கின்றது.
பர்மியத் தேசிய வாதிகளின் நாடு பிளவுபட்டுப்
போகலாம் என்ற பயம் அடிப்படையில் பர்மாவில் நிகழக்கூடிய அந்நிய ஆக்கிரமிப்பு பற்றிய
பயத்துடன் இணைந்தே இருக்கின்றது. இந்தப்
பயம் காரணமாக குறிப்பாக பர்மிய இராணுவத்துள் அந்நிய அல்லது வெளிநாட்டவர்கள் மீதான
வெறுப்பு அளவுக்கதிகமாகவே இருக்கிறது.
உண்மையிலும் பர்மா 1760 ல் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பில் தொடங்கி 19ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்
நிகழ்ந்த மூன்று ஆங்கிலோ பர்மியப்போர்கள் உட்பட நீடித்த ஆங்கில ஆக்கிரமிப்புக்கள் வரையும் அந்நிய
ஆக்கிரமிப்புக்களையும் சதிகளையும் சந்தித்தே வந்திருக்கிறது. மேலும் 1943 க்கும் 1945 க்கும் இடையில் நிகழ்ந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதன்
வழியான சுதந்திர மறுப்பையும், 1950-51களில் அமெரிக்க
மத்திய புலனாய்வுத்துதுறையின்(CIA) ஆதரவுடன்
வடகிழக்கு பர்மாவில் நிகழ்ந்த சீன ஆக்கிரமிப்பையும் இங்கு உதாரணங்களாகக்
குறிப்பிடலாம்.
மேற்குறித்த வரலாற்றுக் காரணிகள் தவிர
பர்மாவில் நிலவி வரும் இன்னுமொரு கலாசார அடிப்படையிலான நம்பிக்கையும் அரசியல்
அதிகாரத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமாக
இருக்கிறது. மத அடிப்படையிலான இந்த எண்ணக் கருவினாலும் பர்மாவின் இராணுவ
ஆட்சியாளர்கள் பயனடைந்துள்ளனர் எனலாம்.
அரசியல் ரீதியான பலத்தை அல்லது தனிப்பட்ட
வெற்றி ஒன்றை ஒருவர் பெறுவது என்பது அவர் தனது முற்பிறப்பில் செய்த பலன்களினால்
வருவது என்ற பெளத்த மத அடிப்படையிலான எண்ணக் கரு மக்களிடம் உள்ள.பர்மாவின் இராணுவ
ஆட்சியாளர்கள் அடைந்திருக்கிற உயர்நிலை அவர்களது முற்பிறப்பில் செய்த பலன்களினால்
கிட்டியது என்ற எண்ணம் பர்மாவில் உள்ளது. இந்த விதமான சிந்தனைகளும் இராணு
ஆட்சியாளர்களை உயர்நிலையில் வைத்து மதிப்பதற்கு ஏதோ ஒருவகையில் ஏதுவாக உள்ளது எனப்
பர்மியச் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
பௌத்த துறவிகளின் பாத்திரம்
மேற்குறித்த எல்லா வரலாற்றுக் காரணிகளும்
பர்மிய இராணுவச் சர்வாதிகாரிகளால் பர்மாவை எவ்வாறு நீடித்து ஆளமுடிகின்றது என்பதை
விளக்குகின்றன.
இராணுவத் தலைவர்களுக்கு எந்தளவுக்கு மதிப்பு
இருக்கின்றதோ அதே அளவுக்கு பர்மாவின் நவீனத் தலைவரான அயுங் சன் இற்கும் மக்களின்
நினைவுகளில் மதிப்பு இருக்கிறது. இந்த வகையில் பர்மாவின் எதிர்கட்சித் தலைவராக
அயுங் சன் சூ கீ வந்ததொன்றும்
தற்செயலானதல்ல ஏனெனில் இவர் ஆயுன் சான் கின் மகளாவார்.
உயர்ந்தவர்களை மதித்து ஏற்றுக் கொள்ளல் என்னும்
எண்ணக் கருவானது பர்மாவின் புத்த துறவிகளை இராணுவஅரசுக்கெதிரான போராட்டத்தில்
முன்னுக்கு கொண்டு வந்து ஈடுபடுத்துவதற்கும்
உதவியுள்ளது.
புத்த மதத்துறவிகளும் மிகஉயர் நிலையான
மறுபிறப்புக்களாகக் கருதப்படுவதால் இராணுவஅரசுக்கெதிரான போராட்டத்தில் மக்களைக்
தலைமை தாங்குவதற்குத் தகமையானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
புத்த துறவிகள் எது எப்படியிருப்பினும் இந்தப்
பாத்திரத்தை வகிப்பதற்கு ஏன் துணிந்தார்கள் என்பது கேள்வியாகும்.
ஏனெனில் வரலாற்றில் 1885 வரைக்கோ அதற்கு முன்போ
ஒரு போதும் புத்த துறவிகள் தம்மை அரசியில் நேரடியாக
ஈடுபடுத்தியிருக்கவில்லை. 1885 ல் பழைய பர்மிய அரசர்களும் புத்த சங்கமும்
குறியீடான உறவைக் கொண்டிருந்தன. அந்த
உறவில் பர்மிய அரசர்கள் புத்த மடாயலங்களுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மூலம் புண்ணியத்தை
வாங்கிக்கொண்டனர்.
அரசியல் ரீதியாகப் பெளத்த சங்கங்கள்
மன்னர்களுக்கு ஆதரவை வழங்கியதுடன் மக்களை ஒடுக்குவதற்கும் உதவின.
பிற்பாடு மன்னராட்சி அழிக்கப்பட்டபோது பெளத்த
சங்கம் தனித்து விடப்பட்டது. மரபு வழியான
அரசியற் பங்களிப்புக்கள் எதுவும் கிட்டாத நிலையிற் பெளத்த சங்கம்
வெற்றிடத்துக்குள் விடப்பட்டது. இந்த
வெற்றிடத்தை இல்லாமற் செய்வதற்காகத் தற்போது பெளத்த துறவிகள் முனைப்பாக அரசியல்
நடவடிக்கைகளில் ஈடுபடத் தலைப்பட்டுள்ளனர்.
குறிப்பாகத் தற்போதைய இராணுவ ஆட்சிக்கு மெளனமாக ஆதரவளிப்பவர்களாக அல்லாமல்
எதிர்பவர்களாக மாறியுள்ளனர்.
1920 ற்கு கிட்டவாகப் புத்ததுறவிகள் பர்மாவின்
முதலாவது பெரிய காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை உருவாக்குவதற்கு
உதவிசெய்தனர். பர்மியக் கூட்டமைப்பின் பொதுக் குழுவை அமைப்பதில் அவர்களின்
பங்கு முக்கியமானது. பின் 1920 ம் ஆண்டிற் புத்ததுறவிகள் மிகவும் ஈடுபாடான
முறையில் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களிலும் பின்னர் 1930 களில் ஆயதம் தாங்கிய போராட்டங்களிலும்
ஈடுபட்டனர்.
1938 இல் புத்த துறவிகள் பிரித்தானிய
காலனித்துவத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தைத் தகைமை தாங்கி நடாத்திய போது பொலீஸ்
நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்று 17 மக்கள்
கொல்லப்பட்டிருந்தனர்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பதாக பர்மியச்
சுதந்திரப் போராட்ட வீரரான ஜெனரல் ஆயுங் சான் அரசியல்ரீதியான முனைப்பைக்
கொண்டிருந்த பெளத்த துறவிகளுடன் ஐக்கிய முன்னணியை அமைத்துப் போராடியும் இருந்தார்.
அண்மைக் காலங்களில் பர்மாவின் நீண்ட கால இராணுவ ஒடுக்கு முறைக்கு
எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும்படி ஈர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது
காரணம் இராணுவ ஆட்சியாளர்களின் வினைத்திறன் அற்றதன்மை காரணமாக பர்மியப்
பொருளாராரம் சரிந்து வருகிறமையாகும்.
இரண்டாவது காரணம் பர்மாவில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவத் தட்டுப்பாடு
மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கத்தினால் 400,000 புத்த
துறவிகளுக்கு உணவளிக்கும் திறனை மக்கள் கூட்டம் இழந்துவருவதாகும்.
ஏனெனில் பர்மியப் புத்த துறவிகள் தமது உணவை
மக்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதுடன் தமது உணவுத் தேவைகளுக்காக
உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடவும் கூடாது என அவர்களது சமயக் கோட்பாட்டில்
வரையறுக்கப்பட்டுள்ளது.
எனவே பெளத்த துறவிகள் அண்மைக்காலங்களில்
ஆத்மார்த்த மற்றும் பொருளாதாரக் காரணிகளால் தமது
கர்மாவினால் பெறப்பட்ட உயர்ந்த நிலையை மக்களின் எதிர்பார்ப்பும் விருப்பும்
காரணமாக இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகத் திருப்ப வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர்.
மொழிபெயர்ப்பும் குறிப்பும்: தேவ அபிரா
05/09/2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக