பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2011

காணி நிலம் வேண்டும் பராசக்தி....

காணி நிலம் வேண்டும் பராசக்தி.....

சென்ற கிழமை GTBC. FM நிகழ்ச்சியில் நடைபெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சியைக் கேட்டபொழுது எழுந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது.
வடக்கு கிழக்கில் நடைபெறும் நிலப்பறிப்புக்கள், நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்பான உணர்ச்சி வசப்பட்ட நிலைப்பாட்டைத் தவிர்த்து யதார்த்தங்களையும் காணவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
நாங்கள் இலங்கை என்கிற நாட்டுக்குள் அதன் அரசுக்குள்ள இறையாண்மைக்குள்தான் வாழ்கிறோம் என்கிற யதார்த்தத்தை மறக்க முடியாது.
டி எஸ் சேனாநாயக்காவினால் 1958ம் ஆண்டில் தொடக்கப்பட்ட குடியேற்றத்திட்டங்கள் இன்றளவும் தொடர்ந்த படியே உள்ளன. 1977இல் மீண்டும் தீவிரமாகிய திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் விடுதலைப்போராட்டம் வலுவாக இருந்த காலங்களில் கூட எல்லைப்புறங்களில் அரச இராணுவத்தினால் வலுவாகப்பாதுகாக்கப்பட்டிருந்தன.
ஒரு இனத் தொகுதியினர் மட்டுமே செறிவாக வாழும் நிலப்பரப்பும் அதன் பூர்வீகமும் அந்த இனத் தொகுதியின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு அடிப்படையானதாகும்.
இதனை இல்லாமல் செய்வது தனது வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியம் என சிங்களப்பேரினவாதம் உணர்ந்துள்ளது. சிங்களப்பிரதேசங்களின் எல்லைகளை விஸ்தரிப்பது மட்டும் போதாதென்பதை உணர்ந்த சிங்களப்பேரினவாதம் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் இதயப்பிரதேசங்களினுள்ளும் குடியேற்றங்களை ஆரம்பித்துள்ளது.
இக்குடியேற்றங்கள் சிறு பான்மையினரின்  ஒருமையான கலாசாரக் கட்டுமானத்துள்ளும் இடைத்தாக்கத்துள்ளும் நுளைகிற/ ஊடறுக்கிற/ஆக்கிரமிக்கிற நோக்கங்களைக் கொண்டவை. ஏனேனில் இனங்களுக்கிடையில் சனநாயக ரீதியான ஊடாட்டத்தையும் உரையாடலையும் ஆரம்பிக்காது அவர்களை துண்டாட நினப்பது  இராணுவக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலானதன்றி வேறல்ல.
இலங்கையில் சிறுபான்மை இனங்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தைக் குடியேற்றுவதன் மூலம் இன அடிப்படையிலான சனத் தொகைப் பரம்பலை மாற்றி அமைப்பதுடன் எதிர்காலத்தில் அந்தந்தப் பகுதிகளில் சிறுபான்மையினருக்கு  வரக்கூடிய பெரும்பான்மை வாக்கு பலத்தை உடைப்பதும் இதன் நோக்கமாகும்.
இங்கே சில சர்வதேச உதாரணங்களையும் கவனிப்போம்.
  • 1949 ஆண்டில் இருந்து சீனாவின்  க்ஷ¢ன்ஷாங் உய்கூர் தன்னாட்சிப்பிரதேசம் அங்கு (Xinjiang Uyghur Autonomous Region) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஹான்ஸ் சீனர்களின் குடியேற்றத்தினால் பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பாதிக்கப்பட்டு வருகிறது.
  •    திபெத்தின் பெரும்பான்மையான பகுதிகள் சீனர்களின் குடியேற்ற நிலங்களாகி வருகின்றன.
  • ஈராக் சிரியா ஈரான் துருக்கி ஆகிய நான்கு நாடுகளுக்குள் சிக்கியிருக்கும் குர்திஸ்தான் தனது நிலங்களை படிப்படியாக இழந்து வருகிறது.
  •    பலஸ்தீனம் இஸ்ரேலினால் துண்டாடப்பட்டு வருகிறது  
இவையெல்லாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகவும் முடிவடையாது நீளும் பிரச்சனைகள்.
இந்தியாவின் சதிஸ்கார்(Chhattisgarh), யார்க்கண்டு (Jharkhand), ஆந்திரப்பிரதேச பழங்குடி மக்களின் பகுதிகள்(Andhra Pradesh) மற்றும் மஹாராஷ்திரா (Maharashtra) பிரதேசங்களில் இந்திய அரசு பச்சை வேட்டை என்கிற பெயரில் தொடங்கியுள்ள இராணுவ நடவடிக்கை  மூலம் அந்தந்த பிரதேசங்களில் காலாதிகாலமாக வாழந்தவர்களைத் துரத்தி அடித்து அவர்களின் நிலங்களையும் வளங்களையும் பல்தேசிய கூட்டு நிறுவனங்களுக்கு  கொடுக்க முனைகிறது.
இவ்வளவும் ஏன் உலகின் சனநாயக நாடுகளாகப் போற்றப்படுகிற அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் கூட அந்தந்த கண்டங்களில் வாழ்ந்த பழங்குடி மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டவைதான்.
இந்த யதார்த்தங்கள் எங்களின்  எதிர்பார்ப்புகளின் மீது மண்ணள்ளிப் போடுவது தெரிகிறதா...?
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிகழ்கிற காணி, நிலப் பறிப்புக்களின் அடிப்படையில் சில நோக்கங்கள் உள்ளன.
வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்குச் சொந்தமான காணிகளை அல்லது நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தி அதனால் வரக் கூடிய பொருளாதார நலன்களை மாகாண அரசு அனுபவிக்க முடியாமல் தடுக்கிறதுஇதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பொருளாதார ரீதியில் உயர்ச்சி அடைவதை மத்திய அரசு தடுக்கிறது.
இரண்டாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச காணிகள் மிக அதிகளவில் சிங்களவர்களுக்கே வழங்கப்படுகின்றனஅதுமட்டுமல்ல தனியாரின் காணிகள் அரச தேவைகளுக்காக அல்லது வியாபார நடவடிக்கைகளுக்காக அடாத்தாகச் சுவீகரிக்கப்படுகின்றனஇங்கே குறிப்பாக உயர்பாதுகாப்பு வலையங்களையும் வடக்கு கிழக்கு எங்கும் பரந்துள்ள தனியார்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள்தடைநிலையங்களையும் கூறலாம்.
பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில்  எவருக்கும் தான் விரும்பும் இடங்களில் காணிகளை வாங்கவோ குடியேறவோ பரிபூரண உரிமை உண்டு என்பதும் யதார்த்தம்.
மேலும் ஒரு அரசானது தனியாருடைய காணிகளைக் கூட பாராளுமன்றத்தினுடைய அனுமதியுடனோ நீதிமன்றத்தினது அனுமதியுடனோ அல்லது சனாதிபதியின் அதிகாரத்தின்  மூலமோ எடுத்துக் கொள்ள முடியும்.
அவ்வாறு எடுத்துக் கொள்ளும் போது தனிமனித அல்லது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை மட்டுமே பிரச்சனையாக்க முடியும்.
முக்கியமானது என்னவெனில் ஒரு அரசாங்கம் அரச காணிகளையும் அரச வளங்களையும் நாட்டின் உண்மையான அபிவிருத்தியையும் சூழலியல் மேம்பாட்டையும் கருத்திற் கொண்டு அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணாகாத வகையில் பயன்படுத்தவேண்டும் அதுவே  சனநாயகமாகும்.
தனியாருடைய காணிகள் சுவீகரிக்கப்படும் போது அவற்றுக்கான உரிய விலை மற்றும் அவர்களுக்கான மாற்று வதிவிட மற்றும் வாழ்க்கை வசதிகள் வழங்கப்படவேண்டும்.
இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டமும் சனாதிபதிக்குள்ள அளவு கடந்த அதிகாரங்களும் நீதி நியாயத்தை
மீறுபவர்கள் தண்டிக்கப்படாத கலாசரமும் இலகுவான முறையில் சனநாயக விரோதமான நடவடிக்கைகளில்  ஈடுபடுவதற்கு  அரசாங்கத்தைச்சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றனமேலும் அடிப்படை மனித உரிமைகள் மிக இலகுவாக  மீறப்படுவதற்கு வடக்கு கிழக்கில் நிலவும் இராணுவ ஆட்சியும் உதவுகின்றது.
சிங்களவர்களுக்கு ஒரு நீதியும் தமிழர்களுக்கு ஒரு நீதியுமாக இருக்கும் சுதந்திரத்துக்குப் பின்னரான இந்த வரலாறுதான் எம்மை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. ஆனால் எனது நண்பர்  ஒருவர் கூறியது போல நாங்கள் மீண்டும் 1958ம் ஆண்டுக்கு சென்றுவிட்டோம். இனி அங்கிருந்து தான் தொடங்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தோல்விக்கு பின்னர் இலங்கை அரசு கீழ்வரும் தெளிவான நோக்கங்களுடன் தொழில்பட்டு வருகிறது.
  • வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனத்தின் பரம்பலை அதிகரித்தல்
  • இராணுவ மற்றும் பொருளாதாரக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சிங்கள மற்றும் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுதல்
  • தமிழ்த் தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியை கூடுமானவரையில் தடுத்தல்
  • வடக்கு கிழக்கில் திரளும் மூலதனத்தை வங்கிகளின் மூலம் தெற்குக்கு பெயர்த்தல்
  • வடக்கு கிழக்கின் வளங்களையும்  முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களையும் தெற்குக்கும் பிறநாட்டு நிறுவனங்களுக்கும் திறந்து விடுவதன் மூலம் தமது அதிகாரத்தையும் தமது தனிப்பட்ட பண லாபங்களையும் நீண்ட காலத்துக்கு உறுதி செய்தல்.
இந்தப் பின்னணியில், (பாராளுமன்ற அரசியலுக்குள் வந்த பின்னர்பெரும்பான்மை பலம் மிக்க இனவாத அரசு இருக்கும் ஒரு நாட்டில் தனிநாட்டுக் கொள்கையின் கூறுகளாக இருந்த எந்தக் கோரிக்கையும் எந்த நடவடிக்கையும் மிக மோசமான முறையில் நசுக்கப்படும்.
தமிழீழத்துக்காக உள்நாட்டில் போராடக் கூடிய சூழல் முற்றிலும் இல்லை; புறச் சூழலும் இல்லை.
பெரும்பான்மையினம் சனநாயகமாகச் சிந்திக்காதவரை சிறுபான்மை இனம் தனது உரிமைகளை பெரும்பான்மை இனத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதென்பது கல்லில் நார் உரிப்பதற்குச் சமனாகும். இந்தப் போராட்டம் சனநாயக வழியாக இருந்தாலும் சரி ஆயுத ரீதியானதாக இருந்தாலும் சரி இலகுவானதல்ல. கடந்த தமிழீழவிடுதலைப் போராடகாலத்தைப் போலல்லாது பெரும்பான்மை இனத்துள் உள்ள சனநாயக சக்திகளை இனம்காணுவதும் இணைந்து பொது நோக்கங்களைத் தேடுவதும் தவிர்க்க முடியாமல் மேலெழுந்து வருகிறது
தற்போதைய உலக ஒழுங்கில் ஒடுக்கப்படுகின்ற இனங்கள் தாமாக விடுதலையை அடைந்ததாக எங்கும் உதாரணங்கள் இல்லை. வலிமையான புறச்சக்தி ஒன்றின் அழுத்தம் அல்லது தலையீடு காரணமாகவே அதிகார மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
உண்மையான சனநாயகம் நிலவுகிற நாட்டில் தமிழீழம் ஒன்றை அடைவதன் மூலம் என்னென்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் தமிழீழத்தை அடையாமலே செய்ய முடியும் என்பது கொள்கையளவில் உண்மை. இதுவே எங்களுக்குள்ள ஒரே ஒரு நம்பிக்கையும் கூட.
இன்றைக்கு எமக்கு உள்ள ஒரே வெளி சனநாயகத்துக்காகப் போராடுவதுதான்.
பொதுவில் சிறுபான்மை இனம் ஒன்று தன்னை ஒடுக்கிக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை இனத்திடம் இருந்து அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு தனக்கென ஒரு ஆளுகைப் பிரதேசத்தையும் அரசையும் ஸ்தாபித்துக் கொள்வதை விடுதலை எனக் கூறுகிறோம்
ஆனால் இன ரீதியான விடுதலை என்கிற பதத்துள் இருப்பது அதிகார மாற்றம் மட்டுமே.
விடுதலை என்பது பரந்த படுகைப் பொருளையும் ஆழத்தையும் கொண்டதுவிடுதலையின் தொடக்கப்புள்ளி மனிதத்துவம் நிறைந்த சனநாயக உணர்வுடன் ஆரம்பிக்கப்படுகிறது.

அதனை ஆரம்பிப்போம்...

காணி நிலம் வேண்டும் பராசக்தி...

அரிதேவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக